கிக்
தெரிந்தேதான் இந்தத் தவறு நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த பர்சனல் இணையத்தளம், பிளாக் எல்லாம் நான் ஆரம்பிப்பதாகவே இல்லை. ஆனால் ஒரு நெருக்கடி என்று வந்தபிறகு அடித்துப்பிடித்துக்கொண்டு இணையத்தில் எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்போது மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவு - ஒருநாளைக்கு ஒரு கட்டுரையாவது எழுதிவிடவேண்டும். இந்தக் கொள்கை கொஞ்சம் முற்றிப் போய் ஒருநாளைக்கு நாலைந்து போஸ்டுகள் பதிவிடுவது வரைக்கும் நீண்டது. புத்தகக் கண்காட்சி நெருங்கும் சமயத்தில்தான் முதல்முறையாக விடுப்பு எடுக்க ஆரம்பித்தேன். அதுகூட விடுமுறை விண்ணப்பம் போல ஓர் அறிவிப்பு கொடுத்துவிட்டே என் குகைக்குள் நுழைந்தேன்.
இப்போது இன்னொரு நெருக்கடி. இல்லை. அதை என் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவே இந்த இணையத்தளம் சோம்பல் முறிக்கக் காரணமாகவும் அமைந்துவிட்டது.
நடந்தால் இந்த வருடம். இல்லாவிட்டால் அப்துல் கலாம், வாஜ்பாய் வரிசையில் நாமும் அமர்ந்துவிடுவோம் என்றொரு எண்ணத்தில்தான் புதுவருடத் தினத்தை ஆரம்பித்தேன். பாவம், எத்தனைநாள்தான் பெற்றவர்களுக்குச் சிரமம் தருவது? அவர்களும் பார்க்காத திருமணத் தரகர்கள் இல்லை. ஜாதகங்கள் இல்லை. நாலுபேர் சொல்லி நானும் திருமண இணையத் தளங்களில் பதிவு செய்து பெண் தேடினேன். ம்ஹூம்... கடலுக்குள் மோதிரம் தேடுவது போன்ற சிரமமே எங்களுக்கு ஏற்பட்டது. எனக்குரிய துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு முடிவு ஏற்படாமல் இழுத்துக்கொண்டே போனது. ராமன் தேடிய சீதை படத்தைப் பார்த்த என் தங்கை அந்தக் கதை அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போவதாக நமுட்டுச் சிரிப்புடன் சொன்னாள். அந்தப் படத்தில் சேரனுக்கு மணப்பொருத்தம் பார்க்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் உடனே திருமணம் ஆகிவிடும். ஆனால் சேரன் மட்டும் இறுதி ரீல்வரை பிரம்மச்சாரியாகவே இருப்பார். என் வாழ்க்கையில் அச்சு அசலாக இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. என்னோடு ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் உடனே உடனே திருமணம் நடக்க, நான் மட்டும் தனிமரமாக நின்றுகொண்டிருந்தேன்.
இந்த வெறுப்பில்தான் அப்துல் கலாம், வாஜ்பாய் போலொரு வாழ்க்கை வாழ சபதம் எடுத்துக்கொண்டேன். அதிகபட்சமாக 12 மாதங்கள். அதற்குமேல் காத்திருக்கப் போவதில்லை. நினைத்துப் பார்க்கையில் அந்த வாழ்க்கை அமைவதுகூட ஒரு வரமாகப் பட்டது. எந்தத் தொந்தரவும் நெருக்கடியும் இல்லாத சுக வாழ்க்கையல்லவா அது. மனம் போன போக்கில் சிந்தனையைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தபோதுதான் அம்மாவிடம் இருந்து அழைப்பு. ஜாதகம் எல்லாம் பார்த்தாச்சு. பெண் பார்க்க வா!
தை பிறப்புக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருந்தோம். வாழ்க்கையில் என்ன தவறு செய்தாலும் நிச்சயிக்கப்பட்டத் திருமணத்தில் மட்டும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்கிற உறுதியில் இருந்த நான் புராதன வழக்கப்படி பெண் பார்க்க தயாரானேன்.
அட்லீஸ்ட் தெரிஞ்ச ஃபேமிலில பொண்ணு பாருங்க என்று என் வீட்டாரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அசலிலும் பெண் தேடினார்கள். ஒன்றிரண்டு புகைப்படங்கள் எனக்கு வந்தன. புகைப்படம் பார்த்து பெண்ணைத் தேர்வு செய்வதைவிடவும் சங்கடமான நிலை எதுவும் இல்லை. ஆண்கள் என்ன சினிமா இயக்குநர்களா, புகைப்படம், ஃபோர்ட்போலியா எல்லாம் பார்த்து ஹீரோயினை டிக் செய்வதற்கு! புகைப்படம் பார்த்து பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் சொதப்பினேன். அது சரியான வழியல்ல என்று வாதிட்டேன். ஊர் உலகத்தில் எல்லோரும் இப்படித்தான் பெண் எடுக்கிறார்கள் என்று எனக்குக் குட்டு வைக்கப்பட்டது. எனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் என்னிடம் தெளிவு இருந்தது. ஆனால் கல்யாண விஷயத்தில் நான் பெரிய குழப்பவாதியாக இருந்தேன். இதனாலேயே பெண் பார்க்கும் படலம் எதிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவேயில்லை. நான் நேரில் பார்க்கும் பெண், என் மனைவியாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.
பொங்கலன்றுதான் அந்த உறுதி மேலும் உறுதிபடுத்தப்பட்டது.
நெருங்கிய உறவினரின் பெண்ணை நேரில் பார்க்கச் சென்றேன். அவருக்கு என் வீட்டாருடன் நல்ல பரிச்சயம். நான் சிறுவயதில் பார்த்ததுண்டு. பெண் பார்க்கப் போவதற்கு முன்பு புகைப்படம்கூட கண்ணில் காட்டவில்லை. நேராக ஃபைனல்ஸூக்குள் நுழைவதுபோல பெண்ணின் வீட்டுக்குச் சென்றேன். சுமார் 40 பேர் எனக்காகக் காத்திருந்தார்கள். எல்லோரும் என்னிடம் கரிசனமாகப் பேசினார்கள். முகத்தை உற்சாகமாக வைத்துக்கொண்டேன். சாதாரணமாகப் பேசும்போதுகூட புன்னகை தவழ பேசியதாக ஞாபகம்.
பெண் காபி எடுத்துவந்த அந்த நொடியில் நான் ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டேன். பேசிப்பார்த்தேன். இது போதும். இதற்கு மேலும் நான் தாமதிக்க விரும்பவில்லை. இந்த அனுபவம் பற்றி நான் நண்பர்களிடம் சொன்னேன், அரேஞ்சுடு மேரேஜிலயும் ஒரு கிக் இருக்கத்தான் செய்யுது.
கடகடவென்று வேலைகள் ஆரம்பமாயின. யாரோ ஒரு நல்ல ஜோசியரிடம் தேதி கேட்டிருக்கிறார்கள். சமர்த்து ஜோசியர், பிப்ரவரி 19ம் தேதி அன்று திருமணத் தேதி குறித்துக் கொடுத்துவிட்டார். அதாவது, பெண் பார்த்த அடுத்த ஒரு மாதத்தில் திருமணம். இதுநாள்வரைக்கும் பேச்சுலராக தனியாக வாழ்ந்துவந்த நான் குறுகிய காலத்தில் குடும்ப மனிதனாக மாறவேண்டிய கட்டாயம். வீட்டைத் துப்புரவு செய்வதற்கே ஒருவார காலம் ஆனது.
திருமண வேலைகள் என்று நம் சமூகத்தில் நூற்றுக்கணக்கான விதிமுறைகள் உண்டு. அதை யாரும் யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. ஒரு வாழைப்பழம் கூடுதலாக வாங்குவது என்றால்கூட குலவழக்கப்படி சரியா என்று பரிசோதித்துதான் செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் பார்க்கப்படுகிறது. நாள், கிழமைகளில் கிஞ்சித்தும் இரக்கம் காண்பிப்பதில்லை. நல்ல நேரம், நல்ல நாள் வரும்வரைக்கும் அசாத்திய பொறுமை காக்கிறார்கள். இருக்கிற குடும்பச் சுமைகளோடு கல்யாண வேலைகளையும் பெண்களே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதுதான் மனத்தை உறுத்துகிறது. ஒரு தொழிற்சாலையில் நடக்கும் வேலைகளுக்குச் சமமாக திருமண வேலைகள் நடக்கின்றன.
நானும் என் சகதர்மிணியும் நண்பர்களை அழைக்க தனியே அழைப்பிதழ் ஒன்றைத் தயார் செய்தோம். அதைப் பார்த்து என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, பத்திரிகையைக் கோவிலில் வைத்துக் கும்பிட்டாயா?
இல்லையே?
பின்ன, யாருக்கு முதல் பத்திரிகை கொடுத்தே?
பிரிண்டருக்கு
என்னது?
ஆமா. கேட்ட நேரத்துல, அரைநாள்ல முன்னூறு பத்திரிகையை அச்சடிச்சுக் கொடுத்தாரு. அவசரத்துல உதவினவர்தானே கடவுள்?
இதுபோலவே கடவுளை மையமாக வைத்து என்னிடம் ஓர் உத்தரவு போடப்பட்டது. காளஹஸ்தி கோயிலுக்குப் போ. தோஷம் கழியும். அதனாலதான் இவ்வளவுநாளா கல்யாணம் நடக்காம இருக்கு. சொன்னாக் கேளு. விதண்டாவாதம் பண்ணாதே.
மாட்டேன். கோயிலுக்குப் போய்த்தான் எனக்குக் கல்யாணம் நடக்கும்னா அப்படியொரு கல்யாணமே வேண்டாம்.
சொல்லி முடித்த அடுத்த இரண்டாவது வாரம் எனக்குத் திருமணம் நிச்சயமானது.
இப்போது இணையத்தளத்துக்கு வருவோம். என் எழுத்தைத் தவறாமல் படிக்கும் அத்தனை பேரும் இந்த இணையத்தளத்தின் நிலையற்றதன்மை குறித்து கேள்வி எழுப்பிவிட்டார்கள். இனியும் உங்களைக் காக்க வைக்கமாட்டேன். தினம் ஒன்று என்கிற பழைய சத்தியத்தின்படி இல்லாவிட்டாலும் அடிக்கடி கட்டுரைகளை பதிவேற்றம் செய்வேன் என்றுமட்டும் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். இடையிடையே நான் ரசித்த இணையத்தள கட்டுரைகளையும் வாசகர்களுக்குப் பகிரவிருக்கிறேன். இனி இணையத்தளம் சீராக இயங்கும்.