ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்

மரணம், மர்மம், மைக்கேல் ஜாக்ஸன்...

  

பிரபலங்களின் மரணம் என்றாலே வால்போல சர்ச்சைகளும்  மர்ம முடிச்சுகளும் கூடவே தொடர்வது வாடிக்கை. மைக்கேல் ஜாக்ஸன் விஷயத்தில் இது ரொம்பவே அதிகம். கிடைக்கிற ஒவ்வொரு தகவல்களும் மேலும் மேலும் கவலரப்படுத்துக்கின்றன. மேடையில் தன்னிகரற்ற நட்சத்திரமாக ஜொலித்த மைக்கேல் ஜாக்ஸன் மேடைக்கு வெளியே எவ்வளவு பெரிய மர்மங்கள் அடங்கிய வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்கிற உண்மைகள் இப்போது புலப்படுகின்றன.

 

அதிர்ச்சி1 :  மைகேல் ஜாக்ஸன் மரணம் பற்றி பல பத்திரிகைகளும் விதவிதமாகச் செய்திகள் வெளியிட்டுள்ள நிலையில் இப்போது அவர் மரணத்துக்கான உண்மையான காரணம் கிடைத்திருக்கிறது. மைக்கேல் ஜாக்ஸன் வழக்கமாக  போதை மருந்து உட்கொள்வதும் பெயின் கில்லர் ஊசிகள் பயன்படுத்துவதும் தெரிந்ததே. அவைதான் மரணத்தை ஏற்படுத்தியதா என்றால் இல்லை. அதைவிடவும் ஒரு கொடிய மருந்தை தன் இறுதி நிமிடங்களில் பயன்படுத்தியிருக்கிறார் மைக்கேல் ஜாக்ஸன். இறப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்புவரை அவர் லண்டன் நிகழ்சிக்கான ரிகர்ஸலில் ஈடுபட்டிருந்தார். சரியான அலைச்சலுடன் வீட்டுக்கு வந்த அவர் பெயின்கில்லர் மருந்துகளை உட்கொண்டு கூடவே ப்ரோபோஃபோல் (Propofol) என்கிற ஊசியை தன் உடலில் செலுத்தியுள்ளார். அங்குதான் பெரிய பிழை நடந்த்திருக்கிறது.

 

அறுவைசிகிச்சைக்கு முன் நோயாளியை மயக்கமடையச் செய்யும் மருந்து, ப்ரோபோஃபோல். இந்த மருந்தை வீட்டில் பயன்படுத்த எந்த மருத்துவரும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த நிலையில் எம்.ஜே வீட்டில் கிடந்த இந்த மருந்துதான் அவர் உயிரைக் குடித்த மருந்தாகக் கருதப்படுகிறது. ப்ரோபோஃபோல் ஊசி செலுத்தப்பட்டவுடன் அதன் வலியைக் குறைக்க லிடோகைன் (Lidocaine) என்கிற மருந்து கொடுக்கப்படும். அதையும் ஜாக்ஸன் உட்கொண்டுள்ளார். இவையிரண்டும் இப்போது அவர் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.  ப்ரோபோஃபோல் மருந்தின் அபாயமே அது பெயின்கில்லர்களுடன் பயன்படுத்தப்படும்போது உடனடியாக இருதயத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் என்பதுதான். நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது மைக்கேல் ஜாக்ஸனின் மருத்துவர் விரைவில் கம்பி எண்ணக்கூடும் என்று தெரிகிறது. மைக்கேல் ஜாக்ஸனின் செவிலியாகப் பணியாற்றிய செரிலின் லீ இதுகுறித்து ஜாக்ஸனை பலமுறைக் கண்டித்துள்ளார். நீங்கள் அடுத்தநாள் எழமாட்டீர்கள், தூக்கத்துக்கும் வலி நிவாரணத்துக்கும் இம்மருந்துகளைப் பயன்படுத்தவேண்டாம் என்று பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் மருந்தினால் மட்டுமே தன்னால் நீண்ட உறக்கத்தில் ஈடுபடமுடியும் என்று நினைத்த மைக்கேல் ஜாக்ஸனின் கணிப்பு இறுதியில் அவரை மரணத்தில் தள்ளிவிட்டது.

 

அதிர்ச்சி 2 : ஜாக்ஸனுக்கு பேரிஸ், பிரின்ஸ், பிளாங்கட் என்று மூன்று குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளுக்கும் தாய், தந்தை வேறு. மைக்கேல் ஜாக்ஸன் அம்மூன்று குழந்தைகளின் வளர்ப்புத் தந்தைதான் என்று அமெரிக்க செய்தி நிறுவனமான ஏஓஎல் செய்தி வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.

 

 ஜாக்ஸனின் முதலிரண்டு குழந்தைகளும் இரண்டாவது மனைவி டெர்பி ரோவ் மூலமாக பெற்றது என்றும் மூன்றாவது குழந்தை வாடகைத் தாய் உதவியுடன் பிறந்த குழந்தை என்றுதான் இதுவரை சொல்லப்பட்டிருந்தன. ஆனால் வாடகைத் தாயாகச் செயல்பட்டு டெர்பி ரோவ் முதலிரண்டு குழந்தைகளை பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது டெர்பி ரோவ் வேறொரு பெண்ணின் கரு முட்டையையும் வேறொரு ஆணின் உயிரணுக்களையும் தன் கர்ப்பப்பையில் சுமந்து இரு குழந்தைகளையும் பெற்றிருக்கிறார். மேலும் மூன்றாவது குழந்தையும் வேறொரு ஆணின் உயிரணுவின் உதவியோடு பெற்ற குழந்தை என்கிறது  ஏஓஎல். ஜாக்ஸனின் மருத்துவரான அர்னால்ட் கிளின் இந்த மூன்று குழந்தைகளின் தந்தையாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகமும் வலுத்துள்ளது. இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் டெர்பி ரோவ் வாய் திறந்தால்தான் தெளிவு கிடைக்கும்.

 

அதிர்ச்சி 3  :  ஏற்கெனவே மைக்கேல் ஜாக்ஸனின் மரணம் பற்றிய சர்ச்சைகளால் ரசிகர்கள் குழம்பிக்கிடக்க, இப்போது மைக்கேல் ஜாக்ஸனின் பர்சனல் வாழ்க்கையில் புதுக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்ஸனுக்கு லிசா, டெபி ரோ என்று இரு மனைவிகள். ஆனால் இப்போது அவர் சொத்துக்கும் குழந்தைகளுக்கும் உரிமை கோரி நோனா பாரிஸ் லோலா என்கிற லண்டன் பெண் ஒருவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ' நான் தான் மைக்கேல் ஜாக்ஸனின் உண்மையான மனைவி. அவருடைய மூன்று குழந்தைகளும் என்னுடையது. அவர் சொத்துகளும் முறையாக எனக்குத்தான் சேரவேண்டும்.’ என்று கூறுகிறார் அவர். ஏற்கெனவே ஜாக்ஸனின் குழந்தைகள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில்  நோனாவின் இந்த வழக்கு மேலும் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது. 

 

அதிர்ச்சி 4 : மைக்கேல் ஜாக்ஸனின் உதவியாளராக இருந்த க்ரேஸ் ரவார்ம்பா, ஜாக்ஸனின் மரணத்துக்குப் பிறகு தன் பங்குக்கு பல அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளார்.  பஹ்ரைன் நாட்டு மன்னரின் பணத்தைக் கையாடல் செய்ததாக மைக்கேல் ஜாக்ஸனின் மீது குற்றச்சாட்டு உண்டு. இதற்காக பஹ்ரைன் மன்னர் ஜாக்ஸன்மீது 38 கோடிக்கு வழக்கு தொடர்ந்தார். அதுகுறித்து இப்போது பேசும் க்ரேஸ், ‘முதல் தவணையாக பஹ்ரைன் மன்னர் அனுப்பவிருந்த   5 கோடியையும் என் வங்கிக்கணக்கில் சேர்க்குமாறு ஜாக்ஸன் கூறினார். தன் வங்கிக்கணக்கில் அந்தப் பணம் செலுத்தாத வரைக்கும் தனக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று அவர் நம்பினார். இது வெளியே தெரிந்தால் எல்லோரும் ஜெயிலுக்குப் போவோம் என்று நான் அவரை எச்சரித்தேன் என்று கூறுகிறார் க்ரேஸ். ஒருசமயம் மைக்கேல் ஜாக்ஸன் கைவசம் எந்தப் பணமும் இல்லாதபோது நான்தான் அவர் மகன் பிரின்சின் பிறந்தநாளுக்கான செலவை ஏற்றுக்கொண்டேன். அவர் போதை மருந்து உட்கொள்வது பற்றி ஜாக்ஸனின் அம்மாவிடம் எச்சரித்தால் தன்னை வேலை விட்டே நீக்கிவிட்டார் என்றவர் ஜாக்ஸனின் தாய் காத்ரீன்மீதும் புது குற்றச்சாட்டு ஒன்றைக் கூறியுள்ளார். ’மைக்கேல் ஜாக்ஸன் இறந்த ஒரு மணி நேரத்தில் அவர் அம்மாவிடமிருந்து போன் வந்தது. ஜாக்ஸன் எங்கே பணத்தை ஒழித்து வைத்திருக்கிறான் என்று அவர் கேட்டார். மகன் இறந்த ஒரு மணி நேரத்தில் ஒரு தாயின் பதைபதைப்பைப்  பாருங்கள். தரைக் கம்பளத்துக்கு கீழே இருக்கலாம் அல்லது குப்பைக்கூடையில் ஒழித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நான் சொன்னேன்’ என்கிறார் க்ரேஸ்.

 

மைக்கேல் ஜாக்ஸன் லண்டன் நிகழ்ச்சிகளுக்கு 5000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இப்போது பணத்தைத் திருப்பிக்கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்ஸன் நினைவாக அந்த டிக்கெட்டை நாங்களே வைத்துக்கொள்கிறோம் என்று ஜாக்ஸன் மீதான் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரசிகர்களின் இந்த எல்லையில்லா அன்புதான் சர்ச்சைகளிடமிருந்து எப்போதும் மைக்கேல் ஜாக்ஸனைக் காப்பாற்றியிருக்கிறது.

 

(இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் நான் எழுதிய கட்டுரை)