ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
 நயன்தாராவும் பீட்டர்சன் ஃபிளிண்டாஃபும்

ஒரு கோடி சம்பளம் என்று ஆசைகாட்டி இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்கத் தடை விதிக்கும் அளவுக்கு நயன்தாராவை சிக்கலில் மாட்டவைத்திருக்கிறது பையா படம். அரசியல் பின்புலம் இருந்ததால் எப்படியோ பிரச்னையிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கிறார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க என்ன என்ன பக்கபலங்கள் எல்லாம் தேவைப்படுகிறது பாருங்கள்!

 

தமிழ்சினிமாவில் நடிகைகளுக்கு என்று எந்த மார்க்கெட்டும் இல்லாதபோது எதற்காக அவர்களுக்குச் சம்பளத்தை வாரி இறைக்கிறார்கள் என்றொரு கேள்வி எனக்குண்டு. நயன்தாரா அழகாக இருக்கிறார் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒருகோடி ரூபாய் வழங்கும் அளவுக்கு என்ன பெரிய சக்தி உள்ளது அவரிடம்? ரஜினி நடிக்கும் ஒரு படத்தை வலுவூட்டக்கூட நயன்தாராதான் தேவைப்படுகிறார். ஐபிஎல் சென்னை அணியின் ப்ரமோஷனுக்கு விஜய் போதாது என்று நயன்தாராவையும் அழைக்கிறார்கள். ஏதோ வானத்தில் இருந்து குதித்து வந்தவர்போல அந்த அழகியைத் தாங்குகிறது தமிழ்சினிமா.

 

சில வருடங்களுக்கு முன்பு சினிமா நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து ஓர் கருத்தைத் தெரிவித்திருந்தார் திருமாவளவன். "உழைப்பைவிட பலமடங்கு சம்பளம் அதிகமாக வாங்குவதுதான் லஞ்சம். இப்படிப்பட்ட லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் இடம் கொடுக்கும் துறை சினிமாத்துறை என்ற அவருடைய சாடலுக்கு  சினிமாக்காரர்களிடமிருந்து நிறைய எதிர்வினைகள் வந்தன. கல்கி இதழில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையில் பலரும் பொங்கினார்கள்.

 

 

ஆர்யா :

 

இந்திய சினிமாவில் நடிகர்களுடைய சம்பளத்தை யார் நிர்ணயிப்பது என்கிற வரைமுறை சரியாக இல்லை. இது தயாரிப்பாளருடைய சக்தி மற்றும் நடிகருடைய டிமாண்டைப் பொறுத்தது. ஹாலிவுட் படங்களில் படத்தின் பட்ஜெட்டில் நடிகருக்கு இத்தனை சதவிகிதம் சம்பளம் என்று  வெளிப்படையாகவே சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்கு அந்த சிஸ்டம் கிடையாது. இங்கு மார்க்கெட் இருக்கும்வரைக்கும்தான் சினிமாவில் மதிப்பு. 80களில் தமிழ்சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகர் மோகனை இன்று யாராவது படத்தில் நடிக்க அழைக்கிறார்களா? அதோடு மற்ற தொழில்களில் வழங்கப்படும் சம்பளத்தோடு சினிமாவை ஒப்பிடக்கூடாது. நாங்கள் நேரம் காலமில்லாமல் வெயிலிலும் மழையிலும் பாடுபடுவதை மற்றவர்கள்  அறிவதில்லை. கூடவே எங்களுடைய பர்சனல் வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் அரசு சம்பளத்தில் மட்டும்தான்  பிழைப்பு நடத்துகிறார்கள் என்றால் எப்படி டாட்டா சுமோவில் செல்கிறார்கள்? கிரிக்கெட் வீரர்கள் வந்தவேகத்தில் சூப்பர் ஸ்டார் சம்பளத்தை பெறுகிறார்களே. இது எப்படி? சினிமாக்காரர்களின் சம்பளத்தை லஞ்சம் என்றெல்லாம் சொல்வது அநியாயம்.

 

சமிக்சா:

 

பத்துகோடி லாபம் பெறும் தயாரிப்பாளர் அதிலிருந்து இரண்டு கோடியை ஹீரோவுக்கு கொடுப்பதில் என்ன தவறு?  மற்ற தொழில்களில் சாகிறவரைக்கும் வேலை செய்யமுடியும். ஆனால் சினிமாவில் எல்லோருக்கும் இது சாத்தியப்படாது. எங்களுடைய வேலைக்கு யாராவது உத்திரவாதம் கொடுக்கட்டும். நாங்களும் குறைவாக சம்பளம் வாங்கிக் கொள்கிறோம். இந்தியா முழுக்க மார்க்கெட் உள்ள ஹிந்தி நடிகர்களின் சம்பளத்தை ஒப்பிட்டால் இங்குள்ள நடிகர்கள் பெறும் சம்பளம் அதிகம்தான்.

 

ப்ரியாமணி:

 

எனக்கு இதுவரைக்கும் சொன்ன சம்பளமே சரியா கொடுக்கலை. சம்பளப் பாக்கியை நடிகர் சங்கத்துல முறையிட்டபின்பும் சரியான நீதி கிடைக்கலை. இதுல நான் அதிக சம்பளம் பற்றிய ஒரு குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லமுடியும்? சினிமாவில் சம்பளம் அதிகமாகக் கொடுக்கப்படுவது ஒன்றும் புதிதில்லையே. அதுக்காக அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களோட சம்பளம் பத்திப் பேசறதுக்கு என்ன அருகதை இருக்கு? அவங்க கோடிகோடியா சம்பாதிப்பதில்லையா? மக்களை ஏமாத்தறதில்லையா? குற்றம் சொல்றவங்க முதலில் அரசியலில் உள்ள அழுக்கையெல்லாம் சுத்தம் செய்துட்டு அடுத்தவர்களுடைய விவகாரத்தில் மூக்கு நுழைக்கட்டும்.

 

சீமான்:

 

லஞ்சத்தை ஒழிக்கவேண்டும் என்கிற கருத்தையொட்டி  எடுக்கப்பட்ட  ரமணா, இந்தியன் ஆகிய இரு படங்களும் கருப்புவிலையில்தான் விற்கப்பட்டன. இப்போது இதை லஞ்சம் என்றுதானே கூறமுடியும்?   இரண்டரை கோடி சம்பளம் வாங்கும் கதாநாயகன் அதில் ஒரு கோடியை பதுக்கிவிட்டு மீதியிருக்கும் பணத்துக்கு மட்டுமே வரி கட்டுகிறார். இது ஊழல்தானே? தயாரிப்பாளரும் கதாநாயகனும் சம்பளம் பற்றிப் பேசும்போதே இவ்வளவு வெள்ளை, இவ்வளவு கறுப்பு என்று அரசை ஏமாற்றுவதற்கு திட்டம் போட்டுவிடுகிறார்கள். இதில் என்ன நியாயம் கற்பிக்கமுடியும்? இந்தியாவின்  முதல்குடிமகனான குடியரசு தலைவருக்கே கிடைக்காத மாபெரும் ஊதியம் தமிழ்சினிமா ஹீரோவுக்குக் கிடைக்கிறது. இதை 'குறுகிய கால மார்க்கெட்' என்று சப்பைக்கட்டு கட்டமுடியாது. நான் பிறந்ததிலிருந்தே ரஜினியும் கமலும் நடித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்! தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபுவின் படம் இருபது கோடிக்கு வியாபாரமாகிறது. ஆனால் அவர்  இரண்டு கோடிதான் சம்பளம்தான் வாங்கிக் கொள்கிறார். இங்கு நான்கு கோடிக்கே வியாபாரமாகாத தமிழ்சினிமா ஹீரோ தனக்கு இரண்டுகோடி சம்பளம் கேட்கிறார். ஆனால் திருமாவளவன் கூறும் இந்த லஞ்சம், ஊழல் எல்லாம் சினிமாவைப்போல மற்ற துறைகளிலும்  உள்ளது.  வீரப்பனைக் கொன்ற காவலர்களுக்கு பரிசு, ஊக்கத்தொகை வழங்கியதன்மூலம் தமிழக அரசே தமது ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கியிருக்கிறதே!

 

****

 

உலகம் முழுக்க ரிசஸன் நீடிக்கிற இக்காலகட்டத்தில் சினிமாவில் மட்டும் தாறுமாறாக சம்பளம்  வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பலாம் என்றால் கிரிக்கெட் அதைவிட மோசம். தோனியைக் காட்டிலும் பீட்டர்சனும் ஃபிளிண்டாஃபும் சிறந்த வீரர்கள் என்று சொல்லி ஆளாளுக்கு ஏழரை கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் எந்தத் தோட்டத்தில் பணம் விளைகிறது? 

 

மும்பை கேப்டன் என்கிற ஒரே காரணத்துக்காக சச்சினின் ஏல விலையைக் கட்டுப்படுத்திவிட்டார்கள். சென்றமுறை ஏலம் எடுத்துவிட்டதால் மீண்டும் தோனியை ஏலம் போடவேண்டியதில்லை.

 

ஃபிளிண்டாஃபும் பீட்டர்சனும் உள்ள இங்கிலாந்து அணிதான் சென்ற இடங்களிலெல்லாம் செருப்படி வாங்குகிறது. தன் தாய்நாட்டுக்கே துரும்பைக் கிள்ளிப் போடாதவர்கள் சென்னைக்கும் பெங்களூருக்கும் என்ன படி அளக்கப்போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. தமிழ் சினிமாவைப் போலவே முரண்பாடுகளின் மூட்டை ஐபிஎல் ஏலமும் அதன் பண விநியோகங்களும்.