சென்னையில் இந்த மயிலாப்பூரால் மட்டும் எப்படி யாரோடும் ஒட்டாமல் தனித்துவம் காட்டமுடிகிறது என்கிற வியப்பு எப்போதும் என்னிடம் உண்டு. எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே ஓர் வியப்பு காத்திருக்கிறது. திருவொற்றியூர், புதுப்பேட்டை என்கிற வரிசையில் மயிலாப்பூரும் சென்னை என்று குறிப்பது சென்னைக்குத்தான் பெரிய கெளரவம்.
நான் ஓர் உணவுக் காதலன். பல வருடங்கள் ஹோட்டலில் கெட்ட கெட்ட உணவுகளாகச் சாப்பிட்ட அனுபவம் இருப்பதால் நல்ல உணவின் மகத்துவம் அறிந்தவன். அதனால்தான் என்னால் கடந்த இரண்டு நாள்களாக மயிலாப்பூரில் நடக்கும் (உணவுத்)திருவிழாவை ஓர் கொண்டாட்டமாக மட்டுமே எண்ணமுடிகிறது.
சென்னையில் உள்ள அத்தனை ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் ஆரம்பித்து கையேந்தி பவன் வரை நான் ருசி பார்க்காத உணவகங்கள் கிடையாது. ஆனாலும் இந்த மயிலாப்பூரில் உள்ள சிறு கடைகளில் சாப்பிட நேரும்போது ஏற்படுகிற இன்பக் கிளுகிளுப்பு வேறு எங்குமே ஏற்படுவதில்லை.
முதல் காரணம் விலை. குறிப்பாக இந்தத் திருவிழாவில் பத்து ரூபாய்க்கு ஒரு தொன்னை நிறைய கிச்சடி கொடுக்கிறார்கள் பாருங்கள். சரவண பவன் தோற்றது. இதுதான் உயர்தர சைவ உணவு. ஆனால் கொஞ்சம்கூட சங்கடமே இல்லாமல் பத்து ரூபாய் என்றுதான் விலை வைத்திருக்கிறார்கள். ஃபுட் கோர்ட்டில் இதுபோல நிறைய சிற்றுண்டி வகைகள் இருந்தாலும் இந்த ஒரு தொன்னை கிச்சடி முன்பு எதுவுமே எடுபடுவதில்லை. தமிழ்நாட்டில் எந்தப் பிரதேசத்திலும் பத்து ரூபாய்க்கு இப்படியொரு அதி உன்னதத் தரத்தில் ஒரு கிச்சடி கிடைக்காது. தொன்னைக்கு முந்திக்கொள்ளுங்கள். ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படும் கேசரிக்கும் இதுவரை நிறைய ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்கள்.
அதாவது நாலைந்து நாள்களுக்குத்தான். ஆனால் கபாலி கோயில் அருகே இருக்கிற மாமி மெஸ்ஸை எப்படி வருணிப்பது? போதுமான அளவு நிற்பதற்கும் சாப்பிடுவதற்கும் இடம் உள்ள மெஸ்தான் அது. ஆனால் விலையில் அப்படியொரு சமரசம் செய்துதான் வியாபாரம் செய்கிறார்கள். பன்னிரண்டு ரூபாய்க்கு டிபன் ஐயிட்டங்கள். முப்பது ரூபாய்க்கு மீல்ஸ். எல்லா நேரத்திலும் யாராவது இருபது பேர் நின்றுகொண்டு வழித்து வழித்துச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மாமி மெஸ் எதிரே உள்ள வீட்டைப் பார்த்தால் அப்படி ஒரு பொறாமை ஏற்படுகிறது.
இன்று (வெள்ளி) அங்கு சென்றபோது ஒரு பாத்திரம் நிறையச் சுடச்சுட இனிப்பு கொழுக்கட்டை இருந்தது. மூன்று ரூபாய்தான். நூறுகூட சாப்பிடலாம் என்று நினைக்கிற அளவுக்கு அது நாக்கைச் சிறைபடுத்துகிறது. ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை வாழைக்காய் பஜ்ஜி, குடைமிளகாய் பஜ்ஜி,. ஆமை வடை என்று சட்டியிலிருந்து சுடச்சுட பட்சணங்கள் இறங்கிக்கொண்டே இருக்கின்றன. தொப்பை, கொலஸ்ட்ரால் போன்ற தொல்லைகள் இல்லாவிட்டால் மொத்தத்தையும் ஒரு பார்சல் கட்டச் சொல்லலாம். சென்னையில் இதைவிடவும் ஒரு சிறப்பான மெஸ் இருக்குமா என்று விவரம் அறிந்தவர்கள் எனக்குத் தெரிவிக்கலாம்.
ஆச்சா. கபாலியை ஒட்டினாற்போல ஒரு வீட்டில் தினுசான ஒரு ஹோட்டல் நடத்துகிறார்கள். ஜன்னல் வழியே தான் எல்லா பரிவர்த்தனைகளும். தெனாலிராமன் கதையில் பசியால் வாடும் குதிரைக்கும் சுவற்றில் ஓட்டை போட்டு புல் கொடுப்பாரே மந்திரி அதுபோலவே உணவு வழங்குகிறார்கள். நாம் தெருவில் நின்று சாப்பிட்டாலும் அவர்கள் உணவின் ருசியின் முன்னால் எதுவுமே தெரிவதில்லை. அதுவும் வாழைக்காய் பஜ்ஜிக்கு ஒரு சைட் டிஷ் தருகிறார்கள் பாருங்கள். உலகில் வேறெங்கும் கிடைக்காத ஒரு காரசட்னி அது.
கற்பகாம்பாள் மெஸ் பிரசிபெற்ற உணவுஸ்தலம். பேர்தான் மெஸ்ஸே தவிர விலையில் இதற்கும் சரவண பவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் அவர்கள் தருகிற வெண் பொங்கல் அமிர்தம். சென்னையில் சிறந்த காப்பி கிடைக்குமிடங்களில் இதுவும் ஒன்று. இதேபோல ராமகிருஷ்ண மடம் அருகே அடுத்தடுத்து சைவ, அசைவ உணவகங்கள் உண்டு. அசைவம் அடாசு. சைவ மெஸ்ஸில் பன்னிரண்டு ரூபாய்க்கு வீட்டுத் தக்காளி சாப்பாடு கிடைக்கிறது. தட்டுத் தட்டாகச் சாப்பிடலாம்.
நான் சாப்பிடுவதற்காக மட்டுமே மயிலாப்பூரைச் சுற்றுபவன். எனக்குத் தெரிந்தது இந்தக் கடைகள் மட்டும்தான். அதனால் இதர மயிலாப்பூர் மெஸ் ரசிகர்கள் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். மயிலாப்பூர்வாசிகள் கொழுக்மொழுக் என்றும் பொலிவாகவும் இருப்பதற்கு இதுபோன்ற கமகமக்கும் சூழலும் ஒரு காரணம் என்று புரிந்துகொள்ள முடிகிறது. சிங்கிள் டீக்குக்கூட சரியான கடை இல்லாத பம்மலில் இருந்து நான் சீக்கிரம் மயிலாப்பூருக்கு நகரவேண்டும்.
ஜனவரி 23, 2010.