ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்

நான் கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்

கடந்த இரண்டு வாரங்களாக நான் எதுவும் எழுதாமல் இருந்தது என் துரதிர்ஷ்டம். ஏன் இந்த டிசம்பர் மாதமே என் விருப்பதற்கிணங்க அமைய வில்லை. கச்சேரிகளுக்குச் சென்று என் இசையறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை பஸ்பமாகிப்போனது. சென்னையில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் மேட்சுக்குப் போகாத வருத்தம் என் இறுதிக்காலம்வரை பின்தொடரும் போலிருக்கிறது. டிசம்பரில் சென்னையில் நடந்த உலகப்படவிழாவையும் தவறவிட்டு விட்டேன். வாரணம் ஆயிரம், பூ, அபியும் நானும் என்று ஆசைப்பட்ட படங்களின் பாடல் காட்சிகளை மட்டுமே பார்க்க கொடுத்து வைத்தேன்.

 

மார்கழி ராகம் என்கிற கர்நாடக இசைப் படத்தை மட்டும் பார்க்க முடிந்தது. கச்சேரியைப் படமாக்கினால் அது எப்படி சினிமாவாகும் என்று எனக்குப் புரியவில்லை. இந்தப் படத்துக்கு எதற்கு பி.சி.ஸ்ரீராம்? கிடைத்த ஒரு அனுபவமும் அவ்வளவு ஏகாந்தமாக அமையவில்லை. 

 

போதும். 2009 டிசம்பரில் என் கால்களைக் கட்டிப்போட்டாலும் அறுத்துக்கொண்டு போய் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்து விடுவது என்று தீர்மானம் செய்துவிட்டேன். இனப்பெருக்கக் காலம் என்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஒன்று  உண்டு அல்லவா, அதுபோல இனி டிசம்பர் மாதம் என்பது என் பொழுதுபோக்கு மற்றும் கற்றறிதல் காலம். 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சமீபமாகப் பார்க்க நேர்ந்தது. இப்போது நான் அதற்கு முதன்மையான ரசிகனாகிவிட்டேன். அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் எல்லாவித பாராட்டுகளுக்கும் உரியவர்.  அவ்வப்போது விஜய் டிவிக்கே உரித்த நாடகத்தனங்கள் தலைதூக்கினாலும் இதுவரை வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலேயே இது முதன்மையானது. இன்றைய தேதிக்கு ரவியின் எதிர்காலம் மட்டும் கணிக்கக் கூடியதாக இருக்கிறது. வேட்டையாடு விளையாடு பாட்டை என்னமாகப் பாடினார்! ரேணு, ராகினிஸ்ரீயிடம் ஒரு கன்ஸிஸ்டன்சி இல்லை. ஆனாலும் நான் இப்போது ரேணுவின் ரசிகன். ராகினிஸ்ரீ நிகழ்ச்சி ஆரம்பித்த புதிதில் இருந்த தோற்றத்துக்கும் இப்போது காணப்படும் முகபொலிவுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்! இதுவரை குறைந்தது நாலைந்து தமிழ் சினிமா இயக்குநர்களாவது அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போன் அடித்திருக்கக்கூடும்.

 

உன்னி கிருஷ்ணன் இதுமாதிரியான பொதுமேடையில் பிராமண பாஷையை கூச்சம் இன்றிப் பேசுவதை நான் வரவேற்கிறேன். மதுரை தமிழ், கொங்குத் தமிழையெல்லாம் பொதுவில் வைத்து சகஜமாகப் பேசும்போது பிராமணத் தமிழையும் அதுபோல பேசுவதில் எந்தத் தடையும் இருக்கவேண்டியது இல்லை. பலபேர் பிராமணத் தமிழ் வாயில் வந்துவிடுகிறது என்பதாலேயே ஆங்கிலத்துக்குத் தாவிவிடுகிறார்கள். இந்த துர்பாக்கியத்துக்கு அவாள் பாஷை எவ்வளவோ பரவாயில்லை. 

 

நேற்று, நான் கடவுள் டிரைலர் பார்த்த பாதிப்பில் நீண்ட நேரம் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். காதுக்குள் உடுக்கை ஒலி ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. பாலாவுக்குத்தான் எத்தனை இறுமாப்பு. உனக்கு வேண்டிய படத்தை என்னிடம் தேடாதே. நான் எடுக்கும் படத்தை வந்து பார் என்கிற எண்ணம்தான் சினிமாவின் சரியான புரிதல். இப்படித்தான் சினிமா படிப்படியாக வளர்ந்திருக்கிறது. சினிமா பேசப்படாத காலக்கட்டத்தில் சார்லி சாப்ளின் மேற்கொண்ட முயற்சிகளை எண்ணிப் பாருங்கள். அது ஒரு வித போராட்டமல்லவா! ஒரே மாதிரி டீ ஆத்தலாம். தோசை சுடலாம். வீடு கட்டலாம். தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கலாம். ஒரேமாதிரி சினிமா எடுக்கலாமோ! அது கலை அல்லவே!

 

பாலா படங்களில் எனக்கும் நிறைய விமரிசனங்கள் உண்டு. ஆனால் ஓர் எழுத்தாளனாகவே அவர் தன் படங்களுக்கான கதைகளையும் பாத்திரங்களையும் சிந்திக்கிறார். சேது படத்தின் இரண்டாம் பாதியில் மொத்தக் காட்சிகளும் சோகமயமாகவே இருக்கும். ஒரு வசனம்கூட நீ சாப்டியா, வா போலாம் என்பது மாதிரியான தொனியில் இருக்காது. இப்படி துலாபாரம்கூட அழுதுவடிந்து இருந்தது கிடையாது. நான் கடவுள் இசை வெளியீட்டு விழா மேடையில் ராமாநாராயணன் ஒரியாவில் 50 சில்வர் ஜூப்ளி பண்ணினார், தெலுங்கில் இவ்வளவு சாதித்தார் என்று யூகிசேது ஒரு பட்டியல் வாசித்தார். எடுக்கப்படுகிற எல்லாவற்றையும் படம் என்று ஒப்புக்கொள்ள முடியாது. 100 படங்களுக்கும் மேல் படங்கள் இயக்கி, உலக சாதனை என்று குறிப்பிடும் அளவுக்கு சில்வர் ஜூப்ளி கொடுத்த ராமநாராயணனுக்குத் தமிழ்நாட்டில் எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள்? எத்தனை பேர் அவர் படங்களைப் பார்க்க அலைபாய்ந்திருக்கிறோம்? இல்லை, வெகுஜனம் ரசிக்காத கலைப் படங்களைத்தான் அவர் சுட்டுத் தள்ளினாரா? ஆனால் நான்கு படங்கள் எடுத்த பாலாவைப் பார்த்து மணிரத்னம் சொல்கிறார், நான் பாலாவின் ரசிகன். தமிழ்சினிமாவை அடுத்தத் தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

 

இன்னொன்றும் சொல்லவேண்டும். வோர்ல்ட் மூவிஸ் சேனலில் அடிக்கடி 3 டைம்ஸ் என்றொரு தைவான் படம் காண்பிக்கப்படுகிறது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதைகளைக் கவித்துவமாகச் சொல்லும் படம் அது. மூன்றிலும் ஒரே கதாநாயகன், நாயகி. அதில் வரும் முதல் பருவத்தை தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை இயக்குநர்களும் பார்த்துப் பாடம் படிக்கவேண்டும். இந்தப் படத்தைப் பாராட்டிய நியூயார்க் டைம்ஸ் இதழ், சினிமா இன்னும் வித்துக்கொண்டிருப்பதற்கான அர்த்தம்தான் இந்த சினிமா என்று மதிப்பிட்டுள்ளது. பாடல்கள்தான் எங்களுக்கு இடைஞ்சல். பாடலில்லாமல் இந்தத் தமிழ் சினிமா ரசிகன் படம் பார்த்துத் தொலைக்கமாட்டேன் என்கிறானே என்று அலுத்துக்கொள்பவர்களுக்கு ஒரு குறிப்பு - இந்தப் படத்தின் பின்னணி இசையே பாடல்கள்தான். தான் சிறுவயதில் கேட்டு ரசித்த பாடல்களையே படத்தின் பின்னணி இசையாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

 

எங்கோ இருக்கும் தைவான் இயக்குநரால் என்னைச் சிலிர்க்க வைக்கமுடிகிறது. படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டுதல் ஏற்படுத்துகிறார். ஆனாலும் மனம் இதுபோன்ற அனுபவங்களும் கொண்டாட்டங்களும்  தமிழ் சினிமாவிலும் நிகழவேண்டும் என்றல்லவா பிரயாசைப்படுகிறது. நான் கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்.