சசிகுமார் அலை
பாலசந்தர், ஸ்ரீதர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய அலைகளுக்குப் பிறகு இப்போது தமிழ்சினிமாவில் சசிகுமார் அலை. சர்வதேச தரம் நோக்கி தமிழ்சினிமாவை பத்திரமாக அழைத்துச் செல்லும் பொறுப்பில் இயக்குநர் சமுத்திரக்கனியோடு இணைந்து மீண்டும் ஜெயித்திருக்கிறார் சசிகுமார்.
நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்கிற புதிய ஒருவரிதான் கதை. சென்னை, மதுரை, திருநெல்வேலி என்று இந்த மூன்று ஊர்களுக்குள்ளேயே ஜல்லியடித்துக்கொண்டிருந்த தமிழ்சினிமாவை ராஜபாளையம், நாமக்கல், திருச்செங்கொடு என்று நடுநிலை ஊர்கள் பக்கம் திருப்பியிருப்பது பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவம். படத்தில் சசிகுமார், கஞ்சா கருப்பு தவிர அத்தனை பேரும் புதுமுகங்கள். குறிப்பாக மூன்று நண்பர்களின் குடும்ப உறுப்பினர்கள். இதனால் கதையோடு ஒன்றிப்போய் கதாபாத்திரங்களோடு கூடவே பயணிக்கமுடிகிறது. சசிகுமாரிடம் அபாரமான ஸ்கிரின் ப்ரசன்ஸ். வாய் பேசமுடியாத அபிநயாவை டப்பிங் குரல் உதவியுடன் பேசவைத்திருப்பது தமிழ் சினிமாவில் புதிய முயற்சி. சசிகுமாரின் அத்தை மகளான அனன்யா என்ன பிரமாதமான நடிப்பு!
அடுத்தக் காட்சி குறித்த படபடப்பும் எதிர்பார்ப்பும்தான் சமுத்திரக்கனியின் பெரிய வெற்றி. கூடவே காட்சிக்குக் காட்சி காமெடி. குறிப்பாக பரணியின் காமெடியில் திரையரங்கமே அல்லோல கல்லோலப் படுகிறது. வெட்டி பந்தா சின்ன மணி கதாபாத்திரமும் கொண்டாட்ட மனநிலையை உருவாக்குகிறது. கதிரின் ஒளிப்பதிவு கதைக்குப் பெரிய பலம். மறக்கமுடியுமா அந்த சேஸிங் சீன்! சம்போ சிவ சம்போ பாடலை பின்னணி இசை போல பயன்படுத்தியது நல்ல உத்தி.
இத்தாலி ப்ரெஞ்ச், ஈரான் படங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுவதுபோல தமிழ்சினிமாவின் திருப்புமுனை என்றால் அது இந்தக் காலகட்டம்தான். வெல்க யதார்த்த சினிமாக்கள்.
(இந்த வார கல்கி இதழில் நான் எழுதிய 'நாடோடிகள்' பட விமர்சனம்)