ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்

நாக்பூர் டெஸ்ட் 3

நாள் - மூன்று

இந்தியா 441, 0/0 

ஆஸ்திரேலியா 355 

 

இன்று பார்த்த அத்தனையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குப் பாதகமான ஒன்றா அல்லது தனது தலைமைகுணத்தின் இன்னொரு பரிமாணத்தை தோனி வெளிப்படுத்தினார் என்று மனசாந்தி அடைந்துகொள்வதா? எனக்குப் புரியவில்லை.

 

தோனி மூளைக்காரர். உண்மையிலேயே ஆஸ்திரேலியாவை கொஞ்சம் துளிர்க்க விட்டிருந்தால் இந்நேரத்துக்கு இந்தியாவின் ஸ்கோரை எட்டிப் பிடித்திருப்பார்கள். ஆனால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்து வீசச்செய்து அவர்கள் திட்டங்களைக் காயடித்துவிட்டார் தோனி. நாளை நான்காவது நாளன்று கிரேஜா மீண்டும் ஏதாவது செய்துவைக்கப்போகிறார்! சைலண்ட் கில்லராக இருக்கிறார் மனிதர்.

 

வழக்கம்போல மீண்டும் இந்திய வீரர்கள் கேட்சுகளை அலட்சியமாகப் பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள். திராவிடும் லஷ்மணும் கேட்சுகளை டிராப் செய்ய நேற்று வந்த விஜய் இரண்டு ரன் அவுட்களை நிகழ்த்தியிருக்கிறார். கங்கூலியின் பரிந்துரையில்தான் விஜய்க்கு அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிறார் ஸ்ரீகாந்த். தனது கேப்டன்சியில் கங்கூலி பல இளம்வீரர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  

 

மங்கிகேட் விஷயத்தை மீண்டும் திறந்திருக்கிறார் பாண்டிங். ஏன் வீணாக உசுப்பேற்றுகிறார் என்று புரியவில்லை. கண்ணும் மூக்கும் சிவந்து ஹர்பஜன் சிங் வெறித்தனமாக பந்துவீசினால் யாருக்கு நஷ்டம்?

 

நேற்று கங்கூலி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு கொடுத்த பேட்டியைப் படித்திருப்பீர்கள். எனக்கு ஒரு சந்தேகம், ஏன் அவரிடம் ஒருவரும் நக்மா பற்றி கேள்வி எழுப்புவதேயில்லை. சும்மா சும்மா வம்படியாக சேப்பல் பற்றியே கேள்வி கேட்பதும் அவரும் ஒவ்வொருமுறையும் புதுப்புது கதைகள் சொல்வதும் குமைச்சல் எடுக்கிறது. இப்போது பிளேபாயாக அவதரித்திருக்கிறார் யுவ்ராஜ் சிங். அணியின் வொய்ஸ் கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அணிக்காக ஓடாக உழைக்கும் ஷேவாகுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில்தான் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார் ஷேவாக். சேலஞ்சர் டிராபி வரைக்கும் யுவ்ராஜ் பொறுப்பற்று ஆடுவதாலும் அ-கிரிக்கெட் தொடர்பான செய்திகளால் அடிக்கடிப் பேசப்படுகிறார் என்பதாலும் ஸ்கேல்  எடுத்திருக்கிறது செலக்‌ஷன் கமிட்டி. தோனி என்றொரு விதை மட்டும் விருட்சமாகாமல் இருந்திருந்தால் நாக்பூர் டெஸ்ட் மேட்சில் ஷேவாக்தான் டாஸ் நாணயத்தைச் சுண்டியிருப்பார்.