நாள் - நான்கு
இந்தியா 441, 295
ஆஸ்திரேலியா 355, 13/0
மைதானத்துக்குச் சென்று நேரில் பார்க்க ஒருவருக்கும் கொடுத்துவைக்கவில்லை. ஆனால் டிவியில் பார்த்தவர்கள் இதுபோலொரு நாளை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 20-20யில் இருக்கிற அசாத்திய விறுவிறுப்பு இன்றைய ஆட்டத்தில் இருந்தது. பெண்டுலம் இருவர் பக்கமும் மாறி மாறி சென்றுகொண்டிருந்தது. இறுதி இரண்டு ஓவர்கள் ஆஸ்திலிரேலியா ஆடியதைப் பார்த்தபோது நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டார்கள். பாவிகள். டெஸ்ட் மேட்சைக்கூடவா நகம் கடித்துக்கொண்டு பார்க்கமுடியும்!
சத்தமில்லாமல் விஜய்யின் பங்களிப்பு இந்திய அணிக்கு வெகுவாக உதவியிருக்கிறது. இந்த இன்னிங்ஸில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பைக் கழித்துவிட்டால் இந்திய அணியின் ஸ்கோரில் ஒன்றுமே தேறாது. ராகுல் திராவிட் ஓய்வு அறிவிப்பை அறிவிக்காவிட்டாலும் அவருக்கு அடுத்த டெஸ்ட் தொடரில் இடம் அளிக்கப்பட மாட்டாது. ரோஹித் சர்மா, பத்ரிநாத் இருவரில் யார் முதலில் இந்திய அணிக்குள் நுழைவார் என்று பார்த்துக் கொண்டிருந்ததுபோது வானத்தில் இருந்து குதித்துவிட்டார் விஜய். இனி அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். பாக்கியம் உண்டாகட்டும்.
கங்கூலியின் வாழ்க்கை போலவே அவரது கடைசி இன்னிங்ஸூம் பேசும்படி அமைந்துவிட்டது. முதல் பந்தில் டக். ஜேம்ஸ் பாண்ட் படம்போல கிரிக்கெட் வாழ்க்கை அமைவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. வெளியிலிருந்து பார்க்கும்போது கங்கூலியின் கிரிக்கெட் வாழ்க்கை மிகச்சிறந்த பொழுதுபோக்கு. இனி அடுத்து வரும்நாள்களில் யார்யார்மீது அம்பு எறிவாரோ!
நாளை ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்பதெல்லாம் சாத்தியமில்லை. அதுவும் ஐந்தாவது நாளில் 369 ரன்கள். அப்படி அவர்கள் சாதித்துவிட்டால் அடுத்த நூறு வருடங்களுக்கு ஆஸ்திரேலியாமீது யாரும் கைவைக்கமுடியாது.