ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
நாக்பூர் டெஸ்ட் 5

 

நாள் - ஐந்து

இந்தியா 441, 295 

ஆஸ்திரேலியா 355, 209

 

புதிய சகாப்தம். பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கிரிக்கெட் வரலாறு திருத்தி எழுதப்படுவது உண்டு.  மே.இ தீவு ஆரம்பித்துவைத்த  வரலாறை 90களின் மத்தியில் திருத்தி எழுதியது ஆஸ்திரேலியா. இப்போது தோனி புதிய வரலாறுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். கபில்தேவுக்குப் பிறகு இந்திய அணியை உலக அரங்கில் முன்னிலைப்படுத்த ஒரு தலைவன்  கிடைத்துவிட்டான்.

 

பாண்டிங் கேப்டனாக ஆகி தோற்கும் இரண்டாவது டெஸ்ட் தொடர். இதற்கு முன்பு ஏஸஸ் தொடரில் 2005ல் அவர் தோல்வி கண்டார்.

 

இந்திய அரசியல் போலல்ல இந்திய கிரிக்கெட். அங்கு தினமும் மாற்றங்கள் நிகழும். புதிய காற்று எப்போதும் வீசிக்கொண்டிருக்கும். தோனியை கேப்டனாக்கிய வெங்சர்க்காரை நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம் இது. வெற்றி உறுதி என்று தெரிந்தபிறகு தோனி தலைமையை கங்கூலியிடம் வழங்கி அவருடைய சேவகனாக சில நிமிடங்கள் நின்றது அழகான காட்சி. ஒரு கிரிக்கெட் வீரனுக்கு (கங்கூலி) இதைவிடவும் அற்புதமான கடைசி நிமிடங்கள் வாய்க்காது.

 

பாண்டிங்கையும் அவரது அணியையும் எறும்பாக யாராலும் எண்ணிப் பார்க்கமுடியவில்லை. அவருடைய பெரிய வெற்றிகளும் பலம்  பொருந்திய அணியும் எல்லோரையும் மிரட்சி கொள்ள வைத்ததென்னவோ உண்மைதான். நீ பெரியவன் என்றால் நானும் பெரியவன் என்று தோனி தைரியமாக எண்ணியதுதான் இந்திய அணியை மேலும் பலசாலியாக மாற்றியது. மைதானத்தில் ஒரு செஸ் வீரன்போல காய்களை நகர்த்தி தலைமை தாங்கினார் தோனி.  என் அனுபவத்தில் எந்த இந்திய கேப்டனும் தன் மூளையை இவ்வளவு தூரம் உபயோகித்தது கிடையாது.

 

இந்திய அணி ஆஸ்திரேலியாவை மண்டியிட வைத்தது மற்ற அணிகளுக்கு ஓர் முன்னுதாரணமாக ஆகிவிட்டது. இஷாந்த் சர்மா சாய்வாக பந்துவீசுகிறார். அதேபோல எங்கள் அணி பந்து வீச்சாளரையும் பந்து வீசச்செய்வோம் என்கிறார் நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி. இந்தியா செய்ததை திருப்பிச் செய்தாலே போதும் வெற்றி கிட்டும் என்கிற நம்பிக்கை இப்போது எல்லா அணித் தலைவர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. கிரிக்கெட்டுக்கு இது ஒரு நல்ல திருப்பம்.

 

இந்த டெஸ்ட் மேட்சில் மேன் ஆஃப் தி மேட்ச் பட்டம் கிரேஜாவுக்குக் கொடுக்கப்பட்டது வடிகட்டிய முட்டாள்தனம். அரசியல் காரணம் தவிர வேறென்ன சொல்வது!  ஹர்பஜன் சிங்தான் இதற்குத் தகுதியான வீரர். 7 விக்கெட்டுகள். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஃப் செஞ்சுரி. அவர் பங்களிப்பினால்தான் இந்திய அணி இவ்வளவு சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெறுங்கையுடன் ஆஸ்திரேலியாவை திருப்பி அனுப்பக்கூடாது என்று கிரேஜாவுக்கு பட்டத்தை வாரி வழங்கியிருக்கிறார்கள் போலும். 

 

மேன் ஆஃப் தி சீரியஸ் பட்டம் இஷாந்த் சர்மாவுக்கு. சரி. ஏன் கம்பீரை வெறுத்து ஒதுக்க வேண்டும். மூன்று டெஸ்ட் மேட்சுகளில் நானூறு ரன்கள் அடித்தாரே! மீண்டும் அரசியல். அரசியல் இல்லாத உலகத்தில் யாருமே வாழ கொடுத்துவைக்கவில்லை.

 

தோனி இனிமேல் பெரிய பொறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் சுமக்கவேண்டிய கட்டாயத்துக்குத்  தள்ளப்பட்டிருக்கிறார். இவ்வளவுதூரம் வந்து முதல்நிலையை அடையா விட்டால் இந்த வெற்றிகளுக்கு எல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடும். இனிமேல்தான் தோனியின் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கப்போகிறது. நமக்கும்தான்.