தமிழர்களுக்கு இசை என்றால் அது இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் Harris ஜெயராஜூம்தான். திருத்தணியைத் தாண்டி இசைக்கப்படும்  இசையை அவர்கள் கேட்டது கிடையாது.  என்ன இசையாக இருந்தாலும் அது தமிழ்சினிமா பாடலாக இருக்கவேண்டும். வைரமுத்து எழுதி எஸ்.பி. பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் பாடியதாக இருந்தால் ஷேமம்.

 

ஆனால் தமிழ் சினிமா இசையில் என்ன நடக்கிறது? விற்பனையாளர்கள் பணம் பண்ணுவதற்காக பாப் மார்லியையும் மைக்கேல் ஜாக்ஸனையும் ஒட்டவைத்து ஒரு பாடலைச் செய்துவிடுகிறார்கள். முகவரி என்றொரு படம் வந்தது. அதில் கதாநாயகன் ஓர் இசைக்லைஞன். இப்படியொரு சந்தர்ப்பத்தில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் (தேவா) எப்படியெல்லாம் தன் கற்பனா சக்தியை வெளிப்படுத்தியிருக்கவேண்டும்! ஆனால் டாக்டர் அல்பானிடமிருந்து ’எனிமீஸ்’ என்கிற பாடலை அப்படியே உருவி, கொஞ்சம்கூட மாற்றம் செய்யாமல் தமிழ் பாடல் வரிகளை இட்டு நிரப்பி ’கீச்சு கிளி’யேவாக பிரதி எடுத்துவிட்டார். ஈயடிச்சான் காப்பி என்பார்களே அதுதான் இது. சரி, ஒரு பாடல்தானே, போனால் போகிறது என்று பார்த்தால் ’ஓ நெஞ்சே ஓ நெஞ்சே’ பாடலை பேக்ஸ்டீட் பாஸிடமிருந்தும் ’பூ விரிஞ்சாச்சு’ பாடலை தட் திங் யூ டூ என்கிற ஆங்கிலப் பாடலிலிருந்தும் சாமர்த்தியமாக எடுத்தாண்டுள்ளார் தேனிசைத் தென்றல். ஆனால் நம்மால் இதற்கெல்லாம் சட்டென்று எதிர்வினை கொடுக்கமுடியாது. நாம் தான் திருத்தணி தாண்டி எதுவும் கேட்பதில்லையே! அதுவரை கேட்காத இசை என்பதால் அறியாமையின்பால் நமக்கும் சட்டென்று பிடித்துப் போய்விடுகிறது. இசையமைப்பாளரைக் கொண்டாட ஆரம்பித்து ஞானி, தென்றல், புயல் என்றெல்லாம் பட்டம் சூட்டிவிடுகிறோம். இப்படி சீர்கெட்ட இசைக் கலாசாரம்தான் தமிழ்சினிமாவில் நிலவி வருகிறது.

 

ஆனால் முதன்முறையாக ’நாக்க முக்க’ பாடலைக் கேட்டபோது அது புதிய தமிழ்த் திரைப்பாடலாக, பிறகு கேட்கும்போதெல்லாம் என் நரம்புகளை அதிரவைப்பதாகவும் உணர்ந்தேன். நான் மட்டுமல்ல, ஆறு கோடி தமிழர்களும் அதையே உணர்ந்தார்கள் என்பதை பாடலின் வெற்றி ஆணித்தரமாக உணர்த்திவிட்டது. இதற்கு முன்னால் தமிழ்சினிமாவில் பரபரப்பாக அலசப்பட்ட மன்மத ராசா, ஓ போடு, வாளமீனுக்கும் பாடல்களெல்லாம் இதன் அருகில்கூட நெருங்கமுடியாத அளவுக்கு இன்று ’நாக்க முக்க’ மக்களின் இசையாகிவிட்டது.

 

சன் மியூசிக்கினால்தான் இப்பாடல் அதன் ஜீவிதத்தன்மையை அடைந்தது. ’காதலில் விழுந்தேன்’ என்கிற ஒரு சராசரி படத்தின் பாடலாகவே ஆரம்பத்தில் ’நாக்க முக்க’ வெளியானது. வந்த புதிதில் யாரையும் சென்று அடையவில்லை என்பதுதான் நிஜம். எங்கோ மூலையில் ஒலித்துக்கிடந்த பாடலை சன் மியூசிக் சேனலின் லோகோ இசையாக வடிவமைத்து வெளியிட்டபோதுதான் அதன் தலைவிதி புதிதாக எழுதப்பட்டது. சின்ன பாப்பா என்கிற அதுவரை கேட்டேயிராத ஒரு குரலில் ’அடரா அடரா... நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...’ என்று metallic தன்மையுடைய ஓர் எக்காளக் குரலில் பாடல் ஒலித்தபோது கேட்டவர்களெல்லோரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

 

அவ்வளவுதான்.  பைத்தியம் பிடித்தவன்போல நாள் பூராவும் கேட்க ஆரம்பித்தேன்.  இன்றுவரைக்கும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் இந்தப் பாடல் என்னை உச்சநிலைக்கு செல்லவைத்து நடனமாட வைக்கிறது. அர்த்தமேயில்லாத வெறும் ஒலிகளாலேயே இந்தப் பாடல் நம்மை ஈர்க்கிறது. உதாரணமாக, நாக்க முக்க, லேரி சோனா போன்ற திரும்ப திரும்ப வரும் வரிகள். கிழடுதட்டிப் போனவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்  எரிச்சலாக படும். ஆனால் ’நாக்க முக்க’ பாடல் ஒரு மனநிலை; வாழ்நிலை. இதை ரசிக்கவேண்டும் என்றால் மனம் இளமையாக இருக்கவேண்டும்.

 

சில பாடல்களைக் கேட்கும்போது பனிமழை பொழிவது போன்ற ஓர்  உணர்வு ஏற்படும். ஆனால் ’நாக்க முக்க’ கேட்பதற்கானது மட்டுமல்ல; கேட்பவர்களை உற்சாகம் பொங்க எழுந்து நின்று ஆடவைக்கவும் சக்தி கொண்டது. நாக்க முக்க இசையில் பற்பல வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அதன் அடிப்படை வாத்தியங்களென கொட்டு மேளம், உடுக்கையைக் கூறவேண்டும். இவற்றின் ஒலிகளெல்லாம் வழக்கமான மேற்கத்திய சாயலுடைய தமிழ் சினிமா பாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மேற்கத்திய இசை என்பது மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கே மட்டுமே சாத்தியம். ஆனால் ’நாக்க முக்க’ சினிமா பாடலென்றாலும் நாட்டுப்புற இசை. மக்களின் இசை. உயர்தரப் பொழுதுபோக்கு அம்சமாக இந்தப் பாடல் கொண்டாடப்படுவதற்குக் காரணம், ஜனநாயகத் தன்மை கொண்ட அதன் இசைவடிவம்.

 

படிப்பறிவற்ற ஏழைகளின் சோகமும், சந்தோசமும், காதலும் அதன் கொண்டாட்டமும் இதில் பாடப்பட்டுள்ளது.. தமிழர்களின் வாழ்வு நிலையைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும், பார்த்தேயிராத மழையைப் பற்றியும், நம் வாழ்க்கை மற்றும் அதன் பிரச்னைகளைப் பற்றியும் போகிறபோக்கில்  பாடுகிறது.


’ஏய் குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலகுடிசை நிக்குது
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தாங்காலு இருக்குது
அச்சச்சோ மூணுபோகம் ஒருபோகம் ஆச்சுடா...
காயவச்ச நெல்ல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா...
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா...
அரவயிறு காவயிறு பசி தான் பட்டினி
சாவு தான் எத்தினி...’

 

என்று முடிந்தால் பரவாயில்லை. அடுத்தவரிதான் ஏ1.

 

’எங்கேடா இங்கேடா அடிங்கடா அடிங்கடா
     ராஜாவுக்கு கேக்கட்டும்....
    அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க...’

 

அடித்தட்டு மக்கள் தங்கள் சோகத்தைத் தங்களுக்குள் பாடிக்கொண்டால் மட்டும் போதாது. அது ஆட்சியிலுள்ளவர்களுக்கும் உரைக்கவேண்டும் என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போகிறது பாடல். Fantastic!

 

உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இதன் இசையை அதன் முழுவீச்சுடன் புரிந்துகொண்டார்கள். இந்தப் பாடலை எழுதியவரும் இசையமைத்தவரும் பிரபலங்கள் அல்லர். அதேபோல பாடலில் நடித்தவர்களும் சாமான்ய நடிகர்கள். ஆனால் இன்று கேட்பவர்களின் நாடி நரம்பை சுண்டியிழுப்பதாலோ அதன் உண்மையான மதிப்பைத் தாண்டி பேசப்பட்டு வருகிறது.  இந்த ஒரு பாடலினால் காதலில் விழுந்தேன் படம் திரையிடப்பட்டிருக்கும் திரையங்குகளெல்லாம் கொண்டாட்ட வெளியாக மாறியிருக்கிறது.

 

உலக இசை என்று சொல்லப்படும் எந்தப் பாடலுக்கும் ’நாக்க முக்க’ குறைந்தது கிடையாது. தமிழ் இசை என்று முக்காலா முக்காபுலாவையும் டாக்ஸி டாக்ஸி பாடலையும் வெளிநாட்டினரிடம் கொண்டு சென்றால் அப்படியா அப்போ நாங்கள் இசையமைப்பதற்கு பேர் என்ன என்று திருப்பிக்  கேட்பார்கள். அந்தளவுக்கு அயல்நாட்டு இசையின் பாதிப்பு தமிழ்சினிமாவில் இருந்து வருகிறது. சினிமா பாடலென்றாலும் 'நாக்க முக்க' மண்ணின் இசை. கிடைத்தவரை லாபம் என்று இதன் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி திருப்தி அடைந்துவிடக்கூடாது. ’நாக்க முக்க’வை உலகளவில் கொண்டுசெல்லவேண்டும்.  சின்னச்சின்ன தீவுகளில் இருந்து கிளம்பும் இசையெல்லாம் இன்று உலக இசையாகக் கொண்டாடப்படுகிறது. மதிக்கப்படுகிறது. தமிழர்களின் நாட்டுப்புற இசை உலகமெல்லாம் பரவ இதைவிட இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது. நம் கிராமிய இசை கிராமி விருது வரை கொண்டுசெல்லப் படவேண்டும். இருந்தபோதும், இதையெல்லாம் யார் முன்வந்து செய்யப்போகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

 

நாளை எனக்கு மனைவியாக வரப் போகும் பெண்ணிடம் முதலில் நான் கேட்கப்போவது - ’என்னோடு ’நாக்க முக்க’ பாடலுக்கு ஆடத் தயாரா?’