மும்பை தீவிரவாத தாக்குதலின்போது ராணுவத்தினருக்கு நிகராக களத்தில் இறங்கி சிறு தகவலையும் குறிப்பாக எந்தவொரு விஷூவலையும் தவறவிடாமல் கடுமையான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த என்.டி.டி.வி. செய்தியாளர்களைப் பற்றி சிலவரிகள் பேசலாம் என்று இருக்கிறேன்.
இரண்டு நாளும் நான் விடாமல் பார்த்தது என்.டி.டி.வியைத்தான். பொதுவாக ஆங்கில செய்தி சேனல்கள் தமிழ் சேனல்கள்போல ஆறிப்போன செய்திகளைத் தருவதில்லை. அரசியல்வாதிகள் தரும் அறிக்கைதான் தமிழ் சேனல்களைப் பொருத்தவரை செய்தி. அல்லது ஒருவரை மாற்றி ஒருவர் வஞ்சம் தீர்த்துக்கொள்ள தொலைக்காட்சி செய்திகளைப் பயன்படுத்துவார்கள். நடுநிலைமை, தொழில் தர்மம் போன்ற வார்த்தைகள் தமிழ் தொலைக்காட்சிகளின் அகராதியில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டன. எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனி கொடிகள் மட்டும்தான் இருக்கும். ஆனால் இங்குதான் மீடியாவை அரசியலுக்குள் இழுத்து கரைபடிய வைத்துவிட்டார்கள்.
லைவாக ஒரு செய்தியைச் சொல்வதுதான் செய்திக்கான இலக்கணம் என்பது என்.டி.டி.வி.யின் தாரக மந்திரம். இந்தமுறையும் அதுதான் நடந்தது.
களத்தில் முழுக்கமுழுக்க பெண் செய்தியாளர்கள்தான். கிரிக்கெட் செய்தி சேகரிப்பாக இருந்தாலும் சரி தீவிரவாத தாக்குதலை நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்வதாகட்டும் இளம்பெண்கள்தான் ஆங்கில சேனல்களின் செய்தியாளர்களாக இருக்கிறார்கள்.
மும்பை தீவிரவாத தாக்குதலின்போது தாஜ், ஓப்ராய் ஹோட்டல்களிலும் நரிமன் ஹவுஸிலும் நடக்கும் களேபரங்களையும் கொஞ்சம்கூட அதன் தீவிரம் குறையாமல் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கூடவே போலீஸாரிடம் பேட்டி, தப்பித்து வந்தவர்களிடம் நடந்ததை விசாரிப்பது என்று ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் நெருக்கடியில்தான் பணிபுரிந்தார்கள். சில சமயம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே முதுகுக்குப் பின்னால் விடாமல் துப்பாகிச் சத்தம். அப்போதும் கீழே பதுங்கிக்கொண்டு கேமராவைப் பார்த்து தகவல் சொன்னார்கள். இதை ஸ்டூடியோ அரங்கில் இருந்து பார்த்துப் பதைபதைத்துப் போன என்.டி.டி.வியின் நிறுவனர் பிரனாய் ராய், 'என் இளம் செய்தியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு செய்திகள் சேகரிக்கிறார்களே' என்று கண்கள் பனித்தார்.
இரண்டாவது நாளின்போது என்.டி.டிவியின் எடிட்டர்கள் நேரடியாக களத்தில் இறங்கினார்கள். குறிப்பாக நரிமன் ஹவுஸ் தாக்குதல் பகுதிக்கு செய்தி சேகரிக்க என்.டி.டி.வி.யின் குரூப் எடிட்டர் பர்கா தத் சென்றார். 99ல் நடந்த கார்கில் சண்டையின்போது ஃப்ரண்ட்லைன் பத்திகைக்காக பணியாற்றிய பர்கா தத்தின் கட்டுரைகள் அவரை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தின. அதன்பின்பு சர்வதேச செய்திகள் சேகரிக்கும் முக்கியமான இந்தியப் பத்திரிகையாளர் ஆனார் பர்கா தத். செய்தியாளருக்கான பத்மஸ்ரீ விருது வாங்கிய பர்கா தத் குளிரூட்டும் அறைக்குள் உட்கார்ந்துகொண்டு நியாயம் பேசாமல் தெருவில் மக்களோடு மக்களாக நின்று துணிச்சலாக, லைவாக செய்தி வழங்கிக் கொண்டிருந்தார். தாக்குதல் நடைபெற்ற அத்தனை இடங்களிலும் இருந்தும் பேசினார் பர்கா. அவர் தலைமையில் ஒரு போர்வீரன்போல் என்.டி.டிவி செய்திக் குழு பம்பரமாக சுழன்று கொண்டிருந்தது.
லைவ் நிகழ்ச்சி ஆற அமர நுணுக்கமாக எடிட் செய்யப்பட்டதுபோல அவ்வளவு கூர்மையாகவும் பரபரப்பாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போர் டாகுமெண்ட்ரி பார்ப்பது போல ஏராளமான விவரணைகள். விளம்பரங்கள் அறவே தவிர்க்கப்பட்டன. என் கண்ணில் ஒரு விளம்பரம்கூட படவில்லை. அல்லது மிகக்குறைவாக ஒளிபரப்பியிருக்கலாம். விரைவான, சரியான செய்தி மட்டுமே அவர்களது ஒரே குறிக்கோள். பரபரப்புச் செய்திகளை முன்னிறுத்தி அதிக விளம்பரங்களை ஒளிபரப்பும் சராசரி சேனல்கள் போலில்லாமல் அரசு நிறுவனம்போல லாபநோக்கில்லாமல் செயல்பட்டது. நேயர்களின் சுரணையுணர்வுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டது.
டிஸ்கவரி சேனல்போல விரிவான தளத்தில் ஒரு செய்தியை வழங்கவேண்டும் என்பது என்.டி.டி.வி-யின் தாரக மந்திரமாக இருக்கிறது. பிரனாய் ராய் ஸ்டூடியோவில் அமர்ந்துகொண்டு நேரடியாக செய்தியை தொகுத்து வழங்கினார். களத்தில் இருந்த செய்தியாளர்களுடன் சராமாரியாக உரையாடிக் கொண்டிருந்தார். ஒரு நிறுவனத்தின் அதிபரே இதுபோன்று முக்கிய சமயங்களில் கூடப் பணியாற்றும்போது அது கொடுக்கிற உற்சாகமும் நெருக்கடியும் தனி.
எல்லாம் சரி, தமிழ் சேனல்கள் ஏன் இப்படி இருக்கின்றன? தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு போர்ச்சூழல் உருவாகிறபோது கொஞ்சம்கூட சளைக்காமல் இதுபோன்ற தரத்தில், துரிதவேகத்தில் அவர்களால் செய்தி வழங்கமுடியுமா? அதுவும் நடுநிலைமையோடு? ஒருவேளை சென்னை தாஜிலும் லீ மெரிடியனிலும் இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்திருந்தால் சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி மூன்றும் நிலைமையை எப்படிக் கையாண்டிருக்கும் என்று ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். விஜய் டிவி பற்றி யோசிக்கக்கூட வேண்டாம். தமிழகம் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டாலும் அது கனாக்காலங்கள், சூப்பர் சிங்கர் போன்ற பைங்கிளி நிகழ்சிகளைத்தான் ஒளிபரப்பிக்கொண்டிருக்கும்.
கலாநிதி மாறனால் தமிழ்ச் செய்திகளில் பெரிய மாற்றம் கொண்டுவரமுடியும் என்று தோன்றவில்லை. விஜய் டிவி முழுக்க முழுக்க பாடகர்களை நம்பிவாழும் லஷ்மண் ஸ்ருதிபோல ஆகிவிட்டது. கலைஞர், ஜெயா எல்லாம் விஷூவல் கட்சிப் பத்திரிகைகள்.
ஒரே வழிதான் இருக்கிறது. இந்தியா டுடே தமிழிலும் வெளிவருவதுபோல ஆனால் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் தரத்தில் உள்ள வேறுபாடுகள் போலெல்லாம் இல்லாமல் என்.டி.டி.வி. தமிழிலிலும் ஒரு செய்திச் சேனலை தொடங்கவேண்டும். தமிழ்நாட்டில் வருடாவருடம் ஆயிரக்கணக்கான மாஸ் மீடியா மாணவர்கள் தேர்வாகி சினிமாவுக்கு விளம்பர உலகத்துக்கும் நடுவே அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான, முறையான பயிற்சி (விகடன் மாணவர் திட்டம்போல) தமிழ் சேனல்களால் கொடுக்கமுடிவதில்லை. என்.டி.டி.வி. அதுபோன்ற மாணவர்கள் மற்றும் பயன்படுத்தபடாத மீடியா அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள் போன்றோரைப் பயன்படுத்தலாம். நடுநிலைமையான ஒரு செய்தி சேனலுக்காக மக்கள் அல்லாடுகிறார்கள். அந்தக் குறையைத் தீர்க்க என்.டி.டி.வி.யால் முடியும்.
டாலர் தேசமும் நிலமெல்லாம் ரத்தமும் ஃபிடல் கேஸ்டிரோவும் சேகுராவும் இன்று தமிழ்நாட்டில அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள். தமிழ்நாட்டைத் தாண்டி நடக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு தமிழ் தொலைக்காட்சிகளிலும் மாற்றம் வரவேண்டும். அதற்கு என்.டி.டி.வி. முன்வரவேண்டும்.