என்ன மாயம் செய்கிறாய் பாலா!
இப்படியும் ஒரு படம் எடுக்கமுடியும் என்று பொட்டில் அறைந்தாற்போல இருக்கிறது நான் கடவுள். இது ஒரு உலக சினிமா.
பொதுமேடையில் வைத்து நான் பாலாவின் ரசிகன் என்று மணிரத்னம் சொன்னதற்கான காரணம் இப்போது புரிகிறது. பிதாமகன் படத்தின் முதல் நாள் காட்சி ரசிகர்களின் கரவொலியோடு முடிந்தது. இந்தப் படத்தின் முடிவிலும் அதே அனுபவம். என்ன மாயம் செய்கிறாய் பாலா!
பூஜா.... என் கண்ணே! அடுத்த சில நாள்கள் பாவனா தூங்கமாட்டார் என்று நினைக்கிறேன். நான் கடவுளைத் துறந்துவிட்டு டப்பா படங்களில் நடிக்கச் சென்ற பாவனா நான் கடவுள் வெளிவருகிறபோது தமிழ் சினிமாவிலேயே இல்லை என்பது எவ்வளவு பெரிய துயரம்.
எந்தவொரு நல்ல படைப்பிலும் பிசிறுகள் இருக்கும். நான் கடவுளிலும் வெளிப்படையான குறைகள் உள்ளன. ஆனால் ரசிகன் மனத்தில் எழும் அத்தனை கேள்விகளுக்கும் விடை கொடுக்கப்பட்டிருந்தால் படம் இந்நேரம் பொட்டிக்குள்தான் தூங்கிக்கொண்டிருக்கும்.
அடுத்த படத்தில் பாலா கட்டாயம் ஒன்றை உதறவேண்டும். அவர் படத்தின் கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்ற பிம்பம் நான் கடவுளிலும் பிரதி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயிலிருந்து பாலா சீக்கிரம் விடுபடவேண்டும்.
கண்களை அகல விரித்து பார்க்கமுடியாதபடி பல காட்சிகள் குரூரமாக உள்ளன. பரவாயில்லை. எதற்கும் அஞ்சாமல் உண்மையை அப்பட்டமாகச் சொல்லத் துணிகிற இயக்குநர்கள் நிறைய பேர் தமிழ் சினிமாவில் உள்ளனர். தமிழ் சினிமாவில் படம் எடுக்கிற அத்தனை பேரும் பாலா, அமீர், சசிகுமார் பாணிக்கு மாறிவிட்டால் எப்படி இருக்கும்!
இனிமேல் பாலாவை வெறும் தமிழ் பட இயக்குநராக மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை. சிவாஜி, இளையராஜா வரிசையில் மதிக்கத்தக்க கலைஞனாகிவிட்டார். எல்லைகளைத் தாண்டி படமும் பாலாவின் திறமையும் பேசப்படட்டும்.