ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
நாலு நாள் தூங்காதவன்

இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது போகிற போக்கில் நடந்துவிட்ட ஒரு விஷயமாகவே படுகிறது. யாரும் எதற்காகவும் மெனக்கெட்டதுபோல தெரியவில்லை. முதல் நாளன்று வெட்டோரியும் ரைடரும் தலா செஞ்சுரி அடித்தபோதும் இந்திய அணியினர் சகஜமாகவே இருந்தனர்.

 

ஷாகீர் கான், இஷாந்த் பற்றி இனி பேச என்ன இருக்கிறது. ப்ளஸ் டூவில் பள்ளியில் முதலாவதாக வந்த மாணவனின் மதிப்பெண் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் அவன் எப்போதும் உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கும் ஒரு மாணவனாகவே தன்னை வளர்த்துக் கொண்டிருப்பான். ஷாகீர், இஷாந்த் இருவரையும் இப்படித்தான் சொல்ல முடியும். அணியைக் குறையின்றி பார்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக எந்த அணியிலும் மூன்றாவது பந்து வீச்சாளரிடமிருந்து தான் சிக்கல் தொடங்கும். அவர் கையாலாகாதவராக இருந்து விட்டால் கிழிந்தது கிருஷ்ணகிரி. அவர் கொடுத்த தெம்பில் எல்லா பெளலர்களையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் மனவலிமையை பேட்டிங் டீம் பெற்றுவிடும். முனவ் அப்படியொரு ஒப்புக்குச் சப்பாணியாக இல்லை. இந்த டெஸ்டில் ஷாகீர், இஷாந்த் உடன் அழகாக இணைந்து பந்துவீசினார். இவன்தானே போட்டுச் சாத்தலாமே என்றொரு அசட்டுத் தைரியம் எந்த நியூசிலாந்து வீரருக்கும் வராதபடி பார்த்துக்கொண்டார். குறிப்பாக இன்று அவர் மெக்கலமை பலவிதங்களிலும் தடுமாற வைத்தார். என்ன அம்பயரின் பெரிய தவறால்  மெக்கலமின் விக்கெட்டைப் பெறாமல் போய் விட்டது. இதுபோன்ற நேரங்களில் கிரிக்கெட்டைப் பார்க்கிற நமக்கு அநியாயத்துக்கு ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. நியாயம் சொல்கிற இடத்தில் இருந்து கொண்டு ஒருவர் அதர்மம் நிகழ்த்தும்போது அதை நம்மால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியொரு மனநிலை 100 கோடி இந்தியர்களுக்கு ஏற்பட்டபோதுதான் பக்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து விரட்டப்பட்டார். ஆனால் முனவ் தனக்கு ஏற்பட்ட அநீதியை புன்னகையோடு எதிர்கொண்டார். முனவிடம் திறமை இருக்கிறது. தன்னை அவர் ஒரு மூன்றாவது மாற்று பந்து வீச்சாளராக கருதாமல் அதிரடி வீரராகக் கருதவேண்டும். முக்கியமாக, அவரது உடல் மொழியையும் மாற்றிக்கொள்ள வேண்டும். நாலு நாள் தூங்காதவன் போலவே எப்போதும் இருக்கிறார்.

 

இந்திய அணியில் ராணுவ ஒழுங்கு தென்படுகிறது. அணிக்காக பங்காற்றுவதில் எல்லோரும் மனமுவந்து ஈடுபாடு காட்டுகிறார்கள். அவரவர் திறமைக்கேற்ற உரிய மரியாதை தரப்படுகிறது. திறமை இல்லாதவர்கள் தயவுதாட்சண்யம் பாராமல் வெளியேற்றப்படுகிறார்கள். சுயலாபம் கருதி யாரும் யாரையும் பலிகடா ஆக்குவது கிடையாது. அணித் தேர்வில் குழப்பம் இல்லாது இருப்பதே இதற்குச் சான்று. மும்பை அரசியல்கள் தேர்வுக்குழுவில் இல்லாதது பெரிய மாறுதல். பிசிசிஐ போன்ற பல்வேறு முரண்பாடுகள் கொண்ட ஓர் அமைப்பில் இப்படியோர் ஒழுங்கு. கேரி கிரிஸ்டன், தோனி இன்றி இது சாத்தியமாகியிருக்காது.