பரந்தாமன் கதைகள் 3
மிருகங்களின் பண்ணை
பரந்தாமனுக்கு ஆயுசு முடியும்வரைக்கும் பேருந்து பயணம்தான் போலிருக்கிறது. இடையே கார் பயணம் அவனுக்குக் கிடைக்கப் பெற்றது. ஜம்மென்று இரண்டு வருடங்கள் நோகாமல் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் சென்று கொண்டிருந்தான். அந்தப் பிராப்தம் இப்போது முற்றுப் பெற்றுவிட்டது. சொந்தமில்லாத எந்த செளகரியமும் இரண்டு வருடங்களுக்கு மேல் தாங்காது என்கிற அறிவு கிடைத்ததுதான் மிச்சம். சாஃப்ட்வேர் ஆசாமிகளுக்கு இணையாக அவன் வருமானம் ஈட்டினாலும் இன்றுவரை அவனுக்கென்று சொந்தமாக ஓர் இரண்டு சக்கர வாகனம்கூட கிடையாது. அவன் தந்தை ஓட்டிய மூன்றாம்தர சைக்கிளை சென்னைக்குத் தருவித்து அதில்தான் இன்றுவரை பம்மலில் இருந்து பல்லாவரம் வரை வந்துகொண்டிருக்கிறான்.
பல்லாவரத்தில் இருந்து மெளண்ட் ரோடு வரையிலான அவனுடைய பயணத்தை லகுவாக்குவது ஆட்டோக்களே. பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பெரும்போருக்கு அணிவகுப்பது போல டிராபிக்குக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டு வரிசையாக ஆட்டோக்கள் நிற்கும். முப்பது ரூபாயில் காலாட்டிக்கொண்டே நிம்மதியாக எஸ்சையிடிவரை வந்துவிடலாம். ஆனால் அவன் ஆட்டோவில் பயணிப்பது இதுபோன்ற ஒரு சொகுசுக்காக அல்ல. அப்போது கிடைக்கிற முக்கால் மணி நேரத்தில்தான் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகப் புத்தகம் வாசிக்க முடியும். பேருந்தில் இருக்கை கிடைக்காவிட்டாலும் நின்றுகொண்டு இயல்பாகப் படித்துக்கொண்டு வருவான். என்றாலும் ஆட்டோவில் அமர்ந்துகொண்டு காற்று வாங்கிக்கொண்டே வாசிப்பது அலாதியானதே. சிலசமயங்களில் ஆட்டோவின் பின்னால் மூன்று பெண்களை அமர்த்திக்கொண்டு வருகிற ஆட்டோ ஓட்டுநர், பரந்தாமன் நிற்பதைப் பார்த்து அவருடைய முன்வரிசை இருக்கையில் கொஞ்சம் நகர்ந்து, வாங்க சார் இங்கே உட்காருங்க என்கிற மாதிரியான முகசமிக்ஞை கொடுப்பார். அரை சீட்டில் அமர்வதே கடினம். எங்கனம் புத்தகம் வாசிக்க? கையெடுத்து கும்பிட்டுக் கொள்வான்.
சம்பவம் நடந்த அன்று பரந்தாமன் பேருந்து பயணத்தையே தேர்ந்தெடுத்தான். பத்து மணிக்கு ஒரு பேருந்து ஆயாசமாக வந்து நின்றது. உள்ளே நான்கைந்து பேர்தான் நின்றுகொண்டிருந்தார்கள். உடனே ஏறிவிட்டான். ஆனால் அங்கிருந்து பேருந்து கிளம்பியபோது பேருந்து நிறைந்திருந்தது. எல்லா பேருந்துகளும் பல்லாவரத்தில் நிரம்பி திரும்பி வருகிறபோது பல்லாவரத்தில் காலியாவதை பலநேரங்களில் உணர்ந்திருக்கிறான்.
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 'மிருகங்களின் பண்ணை' என்கிற மொழிபெயர்ப்பு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தான். மனிதனால் தங்கள் இயல்பு வாழ்க்கையே கெட்டுப்போவதாக உணரும் மிருகங்கள் வெகுண்டு எழுந்து தங்கள் பண்ணை முதலாளியை விரட்டியடித்துவிட்டு பண்ணையை கபளீகரம் செய்யும் கதை. முதலாளியைத் துரத்திவிட்டு மிருகங்கள் ஒரு தீர்மானம் போடும்.
1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்
2. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது
’நாயே, என்ன நினைச்சுட்டு இருக்கே. பொறுக்கி, கழுதை’. சீற்றத்துடன் ஒரு பெண் குரல் கேட்டது. பரந்தாமன் திரும்பிப் பார்த்தான்.
பெண்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஓர் இளம்பெண் கண்களில் கோபமும் தழும்பி நிற்கும் கண்ணீருமாக ஒருவனை வார்த்தைகளால் எரித்துக் கொண்டிருந்தாள். பொறியில் அகப்பட்டவன் போல அவள் எதிரே நின்று கொண்டிருந்தவனின் முகம் வெளிறிப் போயிருந்தது. அவளுக்கு அழவேண்டும் போலிருந்தது.
'கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்லாம பின்னாடி நின்னு ஜிப்பை அவுத்து ...ச்சீ....'
அந்தப் பெண்ணுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. அந்த ஒரு சொல்லில் நிலவரம் புரிந்துவிட்டது. யார் முகத்தையும் பார்க்கத் தெம்பு இல்லாமல் தலையைத் தொங்கப் போட்டிருந்தான் அந்தக் கயவன். அவன் மடத்தனம் அத்தனை பேர் முன்பும் வெளிச்சமாகியிருந்தது. புத்தகத்தை மூடினான் பரந்தாமன்.
பத்து வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற ஓர் அனுபவத்தை நேரில் பார்த்த அனுபவம் பரந்தாமனுக்கு உண்டு. ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் பின்னால் நின்று பேண்ட் ஜிப்பை அவிழ்த்தபடி ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோதும் அந்தப் பெண்ணும் இதேபோல கூச்சல் இட்டாள். ஆனால் அப்போது அவனை யாரும் எதுவும் செய்யவில்லை. பார்க்கக் கரடுமுரடாக இருந்தான் அவன். தனியே திட்டித் தீர்த்த அந்தப் பெண் சிறிது நேரத்தில் யாரும் உதவவரவில்லை என்பது புரிந்தவுடன் அமைதியாகிவிட்டாள். சரியாக பல்லாவரம் வந்தவுடன் அந்த நாய் இறங்கிச் சென்றுவிட்டது.
கையில் இருந்த ஜார்ஜ் ஆர்வெல்லை பையில் நுழைத்தான் பரந்தாமன். அதற்குள் ஒரு பெரியவர் அந்தக் கயவனின் சட்டையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து கன்னத்தில் அழுத்தமாகப் பதியுமாறு ஓங்கி அறைந்தார். தொடர்ந்து அவனைக் மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கினார். அத்தனை நடந்தும் அவன் சிறு எதிர்ப்பும் காட்டாமல், சார் சார் தெரியாம செஞ்சிட்டேன். விட்டுடுங்க சார் என்று அவர் காலில் விழுந்தான். அடி விழவிழ தொடர்ந்து அவன் சால்ஜாப்புக்காக வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டுதான் இருந்தான். குற்றச்சாட்டுகள் அவன்முன் பழியாக விழுந்தன. இவனைப் போன்ற மனிதர்களுக்குத்தான் எவ்வளவு எருமைமாட்டுத்தனம்? எருமைமாடுகூட எல்லா நேரங்களிலும் பிரக்ஞையற்றுக் கிடப்பதில்லை.
ஒரு பெண்ணின் பின்னால் நின்று ஜிப்பை அவிழ்த்து அத்தனை பேர் மத்தியில்.... இதுபோன்ற ஒரு செயலுக்கு ஒரு பெண் என்ன எதிர்வினையாற்றவேண்டும் என்று எண்ணுகிறார்கள்? எது இவர்களுக்கு ஊட்டம் கொடுக்கிறது? அப்படியென்ன ஒரு மையல், பித்தம்? எந்த வயதில் திடீரென்று முளைத்த குணம் இது? எல்லாப் பெண்களும் பேருந்தில் இதுபோன்ற அனுபவங்களுக்கு ஆளாகிறார்களா? எத்தனைப் பெண்கள் தங்கள் துயரத்தை, ஆற்றாமையை விழுங்கிக்கொள்கிறார்கள்?
அந்தப் பெண் ஒழுங்காகத் தலைவாரி பார்க்க லட்சுமிகரமாக இருந்தாள். நிச்சயம் ஏதாவதொரு சிறு நிறுவனத்தில் வேலை செய்பவளாகத்தான் இருப்பாள். அவன் அவளைச் சீண்டும்வரைக்கும் அவள் புடம் போட்டத் தங்கமாக இருந்திருக்க வேண்டும். நொடியில் அவளை அலங்கோலமாக்கி விட்டான் அந்தக் கயவன். அவனைவிடவும் அவளுடைய நிலைதான் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
பரந்தாமனைச் சுற்றிலும் இரைச்சலாக இருந்தது. 'மனுசனாடா நீயு, அப்படி என்ன சொகம் வேண்டி கிடக்கு' என்று அந்த இளம்பெண் தொடர்ந்து அவன் பக்கம் திரும்பி ஏசிக்கொண்டிருந்தாள். நாலு பேர் மத்தியில் அவன் வசமாகப் பிடிபட்டுவிட்டதால் அவள் கண்களில் கொஞ்சம் நிம்மதி தெரிந்தது. மேலெழுந்தவாரியாக அவள் கோபம் அடங்கியிருந்தாலும் அது எந்நேரம் ஆனாலும் பீறிக்கொண்டு வரக்கூடும் என்பதும் நன்கு தெரிந்தது. அவளருகே இருந்த பெண்கள் நடந்ததை விசாரித்துக்கொண்டிருந்தார்கள். தன்னை சகஜமாக்க அவள் அனைவரிடமும் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள். ’நானும் முதல்ல பொறுத்துப் போனேன். ஆனா அவன்..’
வழக்கு கிழக்கு வம்பு தும்பு என்றால் எட்ட நிற்கும் பரந்தாமனுக்கே நடந்த சம்பவங்களைப் பார்த்து ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. 'ஏங்க, பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷன்கிட்ட நிறுத்துங்க' என்று குரல் கொடுத்தான். இதே கருத்தை அவன் சக பயணிகளும் வலியுறுத்தியதால் சைதாபேட்டை காவல்நிலையம் அருகே வந்து பேருந்து நின்றது.
அழுக்கு நீரை வெளியேற்றுவதுபோல கயவனின் காலரைப் பிடித்துத் பஸ்ஸூக்கு வெளியே தள்ளி, தரதரவென காவல் நிலையத்துக்குள் இழுத்துச் சென்றார்கள். போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்ததும் அவளுக்கு நடுக்கம் அதிகமானது. 'இல்லை நான் வரலை, பிரச்னை பெருசாயிடுமே' என்று கெஞ்சினாள். அவளுக்காக பஸ்ஸைவிட்டு கீழே இறங்கிய பெரும்பாலான ஆள்கள், வாம்மா நாங்க இருக்கோம். வா கீழே இறங்கி வா என்று பலமாக அழைத்தார்கள். அத்தனை கண்களும் அந்தப் பெண் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று உற்று கவனித்துக்கொண்டிருந்தன. போலீஸ், கம்ப்ளையிண்ட், கோர்ட், கேஸ், சாட்சி, ஜெயில், பழிவாங்குதல் போன்ற குற்றம் தோய்ந்த வார்த்தைகள் அவள் மனத்தில் வந்துவந்து போயிருக்கும். அதுவே அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கியிருக்கலாம்.
திடீரென மனத்தளவில் திடகாத்திரசாலியான அவள், தன் தோழியின் துணையோடு விறுவிறுவென காவல் நிலையத்துக்குள் நுழைந்தாள். காவல் நிலையத்தில் அவளைப் புதிதாகப் பார்த்தவர்களுக்கு அதி தைரியசாலிபோல தோற்றம் தந்தாள்.
அதற்குள் இதர பயணிகள் கயவனை உள்ளே அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டர் முன்னால் நிறுத்தியிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் பார்க்கக் கடுமையாக இருந்தார். அவரைப் பார்த்த அந்தக் கயவன் மேலும் நடுங்கிக் குறுகினான். நடந்த அத்தனையும் இன்ஸ்பெக்டரிடம் ஒப்பிக்கப் பட்டாலும் அவர் அந்தப் பெண்ணிடம் வாய்மொழியாக இன்னொருமுறை கேட்டு நடந்ததை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார்.
தளர்ந்துபோய் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுவதுபோல திராணியற்று கிடந்தான் அவன். என்னடா என்று அவனை மேலும் கீழுமாகப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். கீழே சிலவிநாடிகள் பார்த்துவிட்டு, உனக்கு ஆப்ரேஷன் பண்ணிடலாமா என்று கெக்கலித்துச் சிரித்தார். தேங்காய் மட்டைபோல மறத்துக்கிடந்தான் அவன். பிறகு கடுகடுத்த முகத்துடன் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அதற்குள் அந்தக் காவலறைக்குள் கூடியிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பயணிகளை போலீஸார் விரட்ட ஆரம்பித்தனர். போங்க போங்க, நாங்க பார்த்துக்கறோம் என்று அந்த இடத்தை சில நொடிகளில் ஒன்றும் நடக்காததுபோல மாற்றினர்.
பாதிக்கப்பட்டப் பெண், அவள் தோழி, பரந்தாமன் மூன்றுபேர் மட்டுமே காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். பரந்தாமன் சற்று தள்ளி நின்று உள்ளே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு போலீஸ் அவனை முறைத்துப் பார்க்கவே பயந்துபோய் ஓரமாக ஒதுங்கிக்கொண்டான். ஒரு முன்னாள் பத்திரிகையாளனாகத் தன் தார்மீக ஆதரவை அப்பெண்ணுக்கு அளிக்கவேண்டும் என்று அவன் மனம் துடித்தது. அஃபிஷியலா ஒரு கம்ப்ளையிண்ட் கொடும்மா என்று அந்த இன்ஸ்பெக்டர் அதட்டினால் அவள் என்ன செய்வாள்? அவளை வீட்டுக்கு போன் செய்ய அனுமதிப்பார்களா? கம்ப்ளையிண்ட் கொடுக்க மறுத்தால் இன்ஸ்பெக்டர் அவளை வார்த்தைகளால் நோகடிப்பாரா? ஒருவேளை பிரச்னை பெரிதாகிப் போனால் தனக்குத் தெரிந்த போலீஸ் நண்பர்களிடம் உதவி கேட்கலாம் என்று பரந்தாமன் திட்டமிட்டிருந்தான். ஒருகாலத்தில் அவனுக்கு சென்னை கமிஷனரோடு நேரடியாகப் பேசும் அளவுக்குப் பழக்கம் இருந்தது. ஆனால் சென்னை கமிஷனர்கள் மாதத்துக்கு மூன்று தரம் மாற்றப்படுவதால் கமிஷனர்களின் சிநேகிதத்தால் பயனில்லாமல் போய்விட்டது.
ஐந்து நிமிடங்களில் தன் ஜிகிரிதோஸ்தோடு விறுவிறுப்புடன் வெளியே வந்தாள் அந்தப் பெண். அருகே சென்று குறுக்கிட்டான் பரந்தாமன்.
'என்னங்க, என்ன ஆச்சு?'
'ஆங்.. நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லிட்டாங்க. என்னைப் போச்சொல்லிடாங்க’
'ஓ! ஏதாவது எழுதிக் கொடுத்தீங்களா?'
'இல்லை. கம்ப்ளெயிண்ட் எல்லாம் வாங்கலை. ஆனா அவனை நல்ல்லாஆ அடிச்சாங்க' என்று அழுத்தமாகச் சொன்னவள் தன் தோழியைப் பார்த்து, 'அவன் என் கால்ல விழுந்தான்டி, சனியன்' என்று முகம் சுளித்தாள். இருந்தாலும் அவள் முகம் அப்போதுதான் பார்க்க மலர்ச்சியாக இருந்தது. எண்ணி இருபது நிமிடங்கள். அதற்குள் அவள் வாழ்க்கையில் ஒரு முக்கியச் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. நாளை தன் மகளிடம்கூட இதுபற்றி விலாவாரியாகக் கூறி அவள் தன் தைரியத்தைப் பிரகடனப்படுத்தக்கூடும். நடந்த அத்தனையும் ஏதோ யோசனை பண்ணி செய்த காரியங்கள் இல்லை. இனி எந்தப் பிரச்னை வந்தாலும் தன்னிச்சையாக எதிர்கொள்ளும் பக்குவம் அவளுக்கு வந்திருக்கும். தோழியிடம் உள்ளே நடந்ததை விவரமாகக் கூறிக்கொண்டே வந்தவள் சட்டென்று நினைவுக்கு வந்தவளாக,
'ஐய்யய்யோ, பாரேன், பஸ்ஸூ போயிடுச்சு' என்று தலையில் கைவைத்தபடி சாலையை நோக்கி வேகவேகமாக ஓடினாள்.