ரூட்!

 

பரந்தாமன் அன்று ஆழ்வார்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் எதிர் திசையில்  சென்றுகொண்டிருந்தான். பெரும்பாலும் காலை நேரத்தில் எல்டாம்ஸ் ரோடு, கோயம்பேடு மார்க்கெட் சாலைபோல கச்சடாவாக இருக்கும். இதனால் காலை நேரத்தில் மட்டும் மாநகரப்  பேருந்து ஆஞ்சநேயர் கோயிலில் சிறிது நேரம் நின்று சேவித்துவிட்டு மேம்பாலத்துக்குக் கீழே இடது பக்கமாக லைஃப்ஸ்டைல் அருகே திரும்பாமல் பாலத்துக்குக் கீழே நேராகச் சென்றுவிடும். பலசமயங்களில் இது தெரியாத புது ஆழ்வார்பேட்டைவாசிகள் எல்டாம்ஸ் சாலையிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே பழியாகக் கிடப்பார்கள். காத்திருப்போரை நல்வழிப்படுத்தலாம் என்று விபரம் தெரிந்த பரந்தாமனுக்கு பலசமயங்களில் தோன்றும். ஆனால் தைரியம் வராது. 

 

அன்று நல்ல காலை. பேருந்து நிறுத்தத்தின் எதிரே சென்றுகொண்டிருந்தபோது அங்கே வழக்கம்போல ஒரு பயணி  மாநகரப் பேருந்துக்காக  காத்திருப்பது தெரிந்தது.  பயணிகளின் நலனுக்காக அங்கே ஓர் அறிவிப்பு பலகைகூட கிடையாது என்பதால் பரந்தாமனுக்கு இன்றாவது சமூகத்தொண்டு செய்யவேண்டும் என்று அரித்தது. அதுவும் பேருந்து நிலையத்தில் பாவமாக, தனியாக, கால்கடுக்க ஒரு பள்ளி மாணவி நிற்கும்போது எப்படிப் பொறுக்கமுடியும்?

 

சாலையைக் கடந்து அவளருகே சென்றான். பள்ளி மாணவிதான் என்றாலும் அவள் நான்காம் வகுப்பு படிக்கும் சிறிய மாணவியாக இல்லாமலும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் வளர்ந்த மாணவியாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைபட்ட தோற்றத்தில் இருந்தாள். அருகே வந்து நின்ற பரந்தாமனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

’இங்கே காலையில பஸ்ஸூ வராது. அந்தப் பக்கம் போயிடும். நீங்க என்ன பண்ணுங்க, லெஃப்ட் எடுத்து ப்ரிட்ஜூக்குக் கீழே போனா சிக்னல்  வரும்ல...’

 

அவள் உடல்மொழி பரந்தாமனைத் தடுப்பதுபோல தோன்றியது. ரூட் சொல்வதை நிறுத்தினான்.

 

’ஸ்கூல் பஸ்’ என்றாள்.