ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
+2வில் செண்டம் வாங்குவது எப்படி?


 

நான் கல்கியில் பணிபுரிந்தபோது  ப்ளஸ் டூ தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவர்களைப் பேட்டி எடுத்து வாராவாரம் எழுதினேன்.  மாணவர்களிடையே அந்தத் தொடர் பலத்த வரவேற்பைப் பெற்றது. திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் +2 தொடரை அவர்களுடைய ப்ரேயரில் வாராவாரம் தவறாமல் வாசித்துள்ளார்கள். அந்தப் பள்ளியின் முதல்வர் எனக்கு போன் செய்து சொன்னபோதுதான் தொடரின் வலிமை புரிந்தது. 

 

+2 டாப்பர்கள் 8 பேர் தங்களுடைய செண்டம் ரகசியங்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டது பிராடிஜி பதிப்பகத்தில் 'மேஜிக் ஆணி' என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதிலிருந்து சில பகுதிகள். 


     என் அனுபவத்தில் சொல்கிறேன். நான் +2 படிக்கும்போது எக்காரணம் கொண்டும் ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்யக்கூடாது என்றொரு முக்கிய முடிவு எடுத்திருந்தேன். அதாவது, தமிழ்நாட்டிலுள்ள ஏதாவதொரு பொறியியல் கல்லூரியில் சீட் வாங்குவது மட்டும்தான் என் எண்ணமாக இருந்தது.

 

ஆம். இங்குள்ள கல்லூரிகளுக்கு மட்டுமன்றி ஏ.ஐ.ஈ.ஈ, ஐ.ஐ.டி, பிட்ஸ் பிலானி என்று பல்வேறு கல்லூரிகளுக்கும் வலைவீசுவது ஆபத்தில்தான் கொண்டுபோய் முடியும்.  ஐ.ஐ.டி, பிட்ஸ் பிலானி போன்ற கல்லூரிகளில் பெரும்பாலும் சி.பி.எஸ்.ஈ மாணவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அதுவும் இதற்கான தேர்வுகள் ஜனவரி, பிப்ரவரியில் நடப்பதால்  கிடைக்காத ஒன்றுக்காக ஏன் நாம் நம் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கவேண்டும்? என்னுடைய பல நண்பர்கள் இரண்டுக்கும் மத்தியில் நின்று அல்லாடியதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே கவனம் ஒருமுனைப்பாக இருப்பது நல்லது.

 

- சுஜனா - 2005ஆம் வருடப் பொதுத்தேர்வில்  மாநில அளவில்  முன்னிலை பெற்றவர். +2 பொதுத்தேர்வில் முதல்முறையாக 1190 மதிப்பெண்கள்  எடுத்த சாதனையாளர்.  இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பிரிவில் படித்துக்கொண்டிருக்கிறார்.

 

வழக்கமாக முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கட்டாயம் சொல்கிற ஒன்று - நான் டி.வி பார்க்காததால்தான் நிறைய  மதிப்பெண்கள் எடுத்தேன். டி.வி, சினிமா எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி வைத்துவிடுங்கள். கேபிள் கனெக்ஷன் இருந்தால் அதைத் துண்டித்துவிடுங்கள்.

 

ஆனால் இதில் நான் மாறுபடுகிறேன். உங்களுக்குப் பிடித்த டி.வி நிகழ்ச்சிகளைத் தவறாமல் பாருங்கள். குறிப்பாக, ஜனவரி மாதத்தில் டிவியில் ஒளிபரப்பாகும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள். எனக்குப் பிடித்த சினிமாவையும் டி.வி நிகழ்ச்சிகளையும் நான் பார்க்காமல் இருந்தது கிடையாது. அதுவும் ஒரு ரிலாக்ஸேஷன்தானே!வகுப்பில் நடத்தும் பாடங்களை அன்றைக்கே சரியாகப் படித்துவிட்டால் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதில் தவறு கிடையாது.

 

- சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள  ஸ்ரீ அகோபில மடம் பள்ளியில் படித்த காவ்யா 2006ஆம் வருடத் தேர்வில் 1186 மதிப்பெண்கள் எடுத்து 'ஸ்டேட் ஃபர்ஸ்ட்' என்கிற பெருமையை அடைந்தார். கணிதம், அக்கவுண்டன்ஸி, காமர்ஸ் ஆகியப் பாடங்களில் இவர் செண்டம் எடுத்தார்.   சி.ஏ படித்துக்கொண்டிருக்கிறார்.

 

தமிழ்நாட்டுக்கும் பாண்டிச்சேரிக்கும் ஒரே சிலபஸ்தான். தேர்வுகள் ஒரே நாளில்தான் நடக்கும். எங்களுடைய விடைத்தாள்கள்கூட தமிழ்நாட்டில்தான் திருத்தப்படுகின்றன.  ஆனால் சில வித்தியாசங்கள் உண்டு. தமிழ்நாட்டில் தமிழைப் பாடமாக  எடுத்தவங்களுக்குத்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்கிற அங்கீகாரம் கிடைக்கும். பாண்டிச்சேரியில ப்ரெஞ்ச் எடுத்துப் படித்து முதலிடம் பிடித்தாலும் அரசின் அங்கீகாரமும் சலுகைகளும் கிடைக்கும். ஆனால் பாண்டிச்சேரி ப்ளஸ் டூ டாப்பர்களுக்கு பாண்டிச்சேரி மீடியாவில்மட்டும்தான் முக்கியத்துவம் கிடைக்கும்.

 

 நான் பத்தாவது வரைக்கும் டெல்லி சி.பி.எஸ்.ஈயில் படித்தேன். அங்கே புத்தகத்தில்  இருக்கிற கேள்விகளைக் கேட்கமாட்டார்கள். மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் வாங்கிவிடலாம் என்று கனவுகூட காணமுடியாது. அப்படிப்பட்ட சூழலில் படித்த நான்  ப்ளஸ் ஒன் படிக்க பாண்டிச்சேரிக்கு  வந்தேன். என் வகுப்பில் இருந்த ஒரு பெண் பத்தாவது பொதுத்தேர்வில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்கிற பெருமையை எட்டியிருந்தார். அப்போதுதான் எனக்குள் ஒரு சவால் விட்டுக்கொண்டேன். உன்னால டென்த்தில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரமுடியும் என்றால் அதே சாதனையை என்னால் ப்ளஸ்டூவில் காண்பிக்கமுடியும். தூக்கத்தில்கூட நான் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்குகிற மாதிரிதான் கனவு காண்பேன். என் ஸ்கூல் ஆயாக்குக்கூட தெரியும், நான் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கக் கடுமையாக முயற்சிளை மேற்கொள்கிறேன் என்று.


 - 2002ம் வருடம் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்த +2 பொதுத்தேர்வில் முதலிடம் வகித்தவர் தீபா. இவர் எடுத்த மதிப்பெண்கள் 1182. பிட்ஸ் பிலானியில் பி.ஈ முடித்து இப்போது சென்னையிலுள்ள காக்கிசண்ட் கம்பெனியில் மென்பொருள் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். எம்.பி.ஏ படிப்பது இவரது அடுத்த கனவு.


நாமக்கலிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற அருணகிரி பாளையம் என்கிற ஊரைச் சேர்ந்தவள் நான். விவசாயம்தான் எங்கள் குடும்பத் தொழில். ஆனாலும் என்  அப்பா அம்மா படிப்பில் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. நான் படிப்பில் நல்ல பெயரை எடுக்கவேண்டும் என்பதுதான் அவர்களது கனவாக இருந்தது. பத்தாவது பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது என்னால் பள்ளியில் இரண்டாம் இடத்தைத்தான் பிடிக்கமுடிந்தது. 

 

இதில் என்னைவிட அதிகமாக வருத்தப்பட்டது என் பெற்றோர்தான். கிராமத்திலிருந்து கிளம்பி ஒரு பெண் எல்லோர் முன்னிலையிலும் சாதனை படைக்கவேண்டும் என்பது அவர்களுடைய பெரிய கனவு. அதை என்னால நனவாக்க முடியாமல் போனதில் அவர்கள் அடைந்த வருத்தம் என்னை மிகவும் பாதிக்கச் செய்தது. ப்ளஸ் டூவில் ஊரே மெச்சுகிற மாதிரி  நல்ல மதிப்பெண்கள் எடுத்து அண்ணா யுனிவர்சிட்டியில எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டும் என்று நினைத்தேன்.

 

நாமக்கலில் உள்ள குறிஞ்சி மேல்நிலைப்பள்ளிக்கு மாறினேன். அங்கே ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். சாதிக்கவேண்டும் என்றால் ஏதாவது இழந்துதானே ஆகவேண்டும். நினைத்ததுபோல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தேன். அன்றைக்கு என் குடும்பம் சந்தோசப்பட்ட மாதிரி என்றைக்கும் நான் பார்த்ததில்லை.  மெடிக்கல் சீட் கிடைத்தாலும் என் நீண்டநாள் கனவான அண்னா யுனிவர்சிட்டியில்  படிப்பதையே நான் விரும்பினேன்.

 

- 2005ஆம் வருடப் பொதுத்தேர்வில் 1185 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக வந்தவர் சத்யா. நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியிலுள்ள குறிஞ்சி மேல்நிலைப்பள்ளியில் இவர் படித்தார். தமிழ் பாடத்தில் இருநூறுக்கு 196 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.  தற்போது அண்ணா பல்கலைக்கழத்தில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பவரின் கனவு - இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்-மில்  எம்.பி.ஏ படித்துமுடித்து ஒரு சிறந்த தொழிலதிபராக உயர்வது!

 

அன்று எங்களுக்கு ப்ரேயர் விநோதமாக இருந்தது. வழக்கமாக பெருமதிப்புக்குரியவர்கள் நிற்கும் மேடையில் ஒரு புதிய முகம் தென்பட்டது. 'இவர்தான் சென்ற வருட ஸ்டேட் டாப்பர். நம் பள்ளியைச் சேர்ந்தவர்' என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டபின், தன்னால் எப்படி முதலிடம் பிடிக்க முடிந்தது என்று அந்த முன்னாள் மாணவர் பேசினார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அடுத்த வருடம் நானும் இதுபோல மேடையேறுவேனா?

 

இறுதியில் என் கனவு நனவானது. மாநிலத்தின் முதல் மாணவி என்கிற பெருமை எனக்குக் கிடைத்தது. எந்த மேடையைப் பார்த்து வியந்தேனோ அதே பள்ளியின் மேடையில் 'மாநிலத்தின் முதல் மாணவி' என்கிற பெருமையோடு நின்று என் ஜூனியர்ஸூக்கு அறிவுரை கூறினேன். எனக்கு ஒருவர் முன்னுதாரணமாக இருந்ததுபோல நானும் என் ஜூனியர்ஸூக்கு ஒரு கிரியா ஊக்கியாக இருந்திருப்பேன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

 

- 1188 மதிப்பெண்கள் எடுத்து  2003ஆம் வருடம் முதல் இடத்தைப் பிடித்தவர் கல்லூரி பாரதி. ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானியில் பி.ஈ கம்பியூட்டர் சயின்ஸ் படித்து முடித்தார்.  படிக்கும்போது Yahooவில் பிராஜக்ட் செய்தார் இவர். படிப்பு முடிக்கும் முன்பே பில்கேட்ஸின் Microsoft கம்பெனியில் பாரதிக்கு வேலை கிடைத்தது.

--

கல்லூரி பாரதிக்கு தூண்டுகோலா இருந்த சீனியர் ஸ்டூடண்ட் வேறுயாருமில்லை,  அது நான்தான்.  என்னால தூண்டப்பட்டு ஒரு மாணவி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

 

நிறைய பேருக்கு ப்ளஸ்டூ தேர்வுகளின் மதிப்பு தெரியவில்லை. நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தது இன்றைக்கு வரைக்கும் உதவுகிறது. அதனால் ப்ளஸ் டூ படிக்கிற அந்த ஒரு வருஷம் நம்மை உருக்கி எடுத்துவிடவேண்டும்.  என் பெற்றோர்களே பயப்படுகிற அளவுக்கு நான் தூக்கத்தை தொலைத்துப் படித்தேன்.  எனக்கு மிகவும் பிடித்த பரதநாட்டியத்தை ஒதுக்கிவைத்தேன்.

 

ப்ளஸ்டூவுக்குப் பிறகுதான் நம் வாழ்க்கையின் கவுண்ட் டவுன் ஆரம்பமாகிறது.  பத்தாவதில் நான் தொன்னூற்றி மூன்று சதவிகிதம்தான் எடுத்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. வாழ்க்கை என்றால் ஒரு லட்சியம் இருக்கவேண்டும் என அடுத்த இரண்டு வருடங்களை படிப்புக்காக அர்பணித்தேன். அதுக்கான பலன் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

 

- ஐஸ்வர்யா மீனாட்சி, 2002ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 1188 மதிப்பெண்கள் எடுத்து தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றார். பி.ஈ கம்பியூட்டர் சயின்ஸ் முடித்தபின்பு அமெரிக்காவில் ஸ்கார்லர்ஷிப் உதவியோடு எம்.எஸ் படித்தார். அவருடைய கனவு - எம்.பி.ஏ முடித்து சிறந்த நிர்வாகவியல் நிபுணர் ஆவது.

 

ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நமது மனப்பாடத் திறனையோ, அழகிய கையெழுத்தையோ சோதிப்பதற்காக பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. நமது புரிந்துகொள்ளும் திறனையும் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை அறியவும்தான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதிலிருந்து ஒரு விஷயம் புரியும். எந்தளவுக்குப் பாடம் படிப்பது முக்கியமோ அதுபோலவே தேர்வு எழுதுவதும்.


  - வித்யாசாகர், சென்னை டி.ஏ. வி பள்ளி மாணவர்.  2000ம் வருடத்தின் ஸ்டேட் ஃபர்ஸ்ட். மதிப்பெண்கள் 1181. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் செண்டம் எடுத்துள்ளார். பிட்ஸ் பிலானியில் பி.ஈ முடித்துவிட்டு நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் எம்.எஸ் (கம்பியூட்டர் சயின்ஸ்) முடித்தவர் தற்போது அதே பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

-

'தேர்வுநாள் என்பது என்னைப் பொறுத்தவரை இன்னொரு வழக்கமான தினம். அந்தளவுக்குத்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தேர்வு தொடங்குவதற்கு இரண்டு மணிநேரம் முன்பு நான் பாடப்புத்தகத்தை மூடிவைத்து அமைதியாக இருப்பேன். யாரும் அல்லது எந்த நிகழ்வும் நம்மைத் தொந்தரவு செய்யாதபடி தியானம்போல அமைதி காக்கவேண்டும். நம் திறமைமீது முழு நம்பிக்கையும் அப்போது பிறக்கும். இப்படிப்பட்ட

மனநிலையில்தான் தேர்வு அறைக்குச் செல்வேன்.

 

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்காக தினமும் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒருநாளைக் கட்டாயம் செலவளியுங்கள். பத்து மதிப்பெண்களாவது எப்படியாவது வாங்கிவிடலாம், ஆனால் இந்த ஒரு மார்க் கேள்விகள்தான் நம் கழுத்தைப் பிடிக்கும். செண்டம் வாங்குவதும் வாங்காததும் ஒரு மதிப்பெண்ணில் நாம் எவ்வளவு கவனத்தோடு இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது.


2002ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்பியூட்டர் சயின்ஸ் என நான்குப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு  வாங்கி 1186 மதிப்பெண்கள் எடுத்த அஸ்வின், சென்னை பம்மலிலுள்ள ஸ்ரீசங்கரா வித்யாலயா பள்ளி மாணவர்.  எம்,ஐ,டியில் ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் முடித்து தங்கப்பதக்கம் பெற்றார். இப்போது  இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.

 

மேஜிக் ஆணி -  ச.ந. கண்ணன் - பிராடிஜி பதிப்பகம்