நாங்களும் தமிழர்கள்தான்!
நான் கல்கியில் பணிபுரிந்தபோது ப்ளஸ் டூ தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவர்களைப் பேட்டி எடுத்து எழுதினேன். 2000-ல் ஆரம்பித்து அடுத்த எட்டு வருடங்களுக்கு யார் யார் ஸ்டேட் ஃபர்ஸ்ட், எந்தப் பள்ளி, முகவரி, தொலைபேசி எண் போன்ற எல்லாத் தகவல்களையும் சரிபார்த்து வாங்குவது பெரிய வேலையாக இருந்தது. 8 வருடங்களுக்கு முன்பு சாதனை படைத்த மாணவரை இப்போது தொடர்பு கொண்டு மீண்டும் அவர் சாதனையை மெச்சி ஒரு பேட்டி கேட்டால் எப்படி இருக்கும்? பலபேருக்கு சந்தோசத்தில் பேச்சே வரவில்லை. அத்தனை பேரும் செளக்யமாக இருக்கிறார்கள். அந்த ஒருவருடம் கடும் உழைப்பை வெளிப்படுத்தினால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று புரியவைக்கிறார்கள்.
.
இந்தத் தொடருக்கு பள்ளிகளில் பலத்த வரவேற்பு. என் தங்கையின் பள்ளி ஆசிரியர் கல்கி இதழை வாராவாரம் வாங்கிப் பாருங்கள் என்று வகுப்பறையில் அத்தொடரைப் பரிந்துரைத்தபோது என் தங்கைக்குப் பெருமை பிடிபடவில்லை. எங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒவ்வொரு திங்கள் அன்றும் கல்கியில் வெளிவரும் +2 சாதனையாளரின் பேட்டி ப்ரேயரில் வாசிக்கப்படுகிறது என்று திருச்சியிலுள்ள ஒரு பள்ளியின் முதல்வர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். சாதனை புரிந்தவர்களே நேரடியாக அறிவுரை வழங்குவது மாணவர்களுக்கு ஏற்றதாக அமைந்துவிட்டது (அந்தத் தொடர் இப்போது 'மேஜிக் ஆணி' என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. வெளியீடு - ப்ராடிஜி, விலை ரூ 25).
அப்போது அம்மாணவர்களின் ஓர் உளவுப்பூர்வமான பிரச்னை பற்றியும் அறிய நேர்ந்தேன்.
ப்ளஸ் டூ தேர்வு முடிவில் வருடாவருடம் இரண்டு பேர் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ஆக வருவார்கள். தமிழை மொழிப்பாடமாக எடுத்தவரும் தமிழ் பாடம் எடுக்காதவரும். பெரும்பாலும் தமிழை எடுக்காமல் வேற்று மொழி எடுத்த மாணவர்தான் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றவராவார். இந்த வருடம் சம்ஸ்கிருதம் எடுத்த பூமிகா என்ற டிஏவி பள்ளி மாணவி மாநிலத்தில் முதல் இடம் வந்ததுபோல. ஆனால் இவர்களால் அரசின் சலுகைகளை அனுபவிக்க முடியாது. முதல்வரை நேரில் சந்திக்கமுடியாது. தமிழை மொழிப் பாடமாக எடுத்து மாநிலத்தில் முதலிடம் வருபவர்களுக்கு 15,000 ரூபாயும் இரண்டாம் மூன்றாமிடம் வருபவர்களுக்கு தலா 12,000, 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் பி.இ அல்லது மருத்துவம் என என்ன படித்தாலும் அதன் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் (1996 முதல் தமிழக அரசு இந்தச் சலுகைகளை வழங்கி வருகிறது). மற்ற மொழிப் பாடம் எடுத்து சாதித்தவர்கள் இதனருகில்கூட செல்லமுடியாது. அதிகபட்சம் பத்திரிகைகளில் புகைப்படம் வரும். அவ்வளவுதான்.
சில வருடங்களுக்கு முன்பு சுஜனா என்ற மாணவி முதல்முறையாக 1190 மதிப்பெண்கள் பெற்றார். தமிழ்நாட்டில் அதற்கு முன்னால் யாரும் அத்தனை மதிப்பெண் வளம் அடைந்தது கிடையாது. அப்போது ஜெயலலிதா முதல்வர். தலைகீழாக நின்றும் சுஜானாவால் ஜெவைப் பார்க்க முடியவில்லை. காரணம், அவர் தமிழ் படிக்கவில்லை. அவர் வேதனையையும் ஒரு பேட்டியாக எடுத்து கல்கியில் எழுதினேன். நாங்களும் தமிழர்கள்தான். பத்தாவதுவரை தமிழ்தான் படித்தோம். தமிழில் முழு மதிப்பெண்கள் வழங்குவதில்லை. பிட்ஸ் பிலானியில் மொத்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். அதனால்தான் தமிழை நாங்கள் எடுக்க வில்லை. எங்களை அரசு புறக்கணிப்பதில் நியாயம் இல்லை என்று இந்தப் பிரச்னையில் பாதிக்கப்படும் எல்லோரும் ஒரேகுரலில் அரசிடம் மன்றாடியும் அரசின் கவனம் இன்றுவரை இவர்கள் பக்கம் திரும்பவில்லை.
அந்தப் பெண் ஹிந்தியை இரண்டாம் மொழியாக எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர். அவர் வீட்டுக்குப் பேசியபோது அந்தப் பெண்ணின் அம்மா முதலில் என்னிடம் பேசினார். மகளின் தொலைபேசி எண் கொடுத்தார்.
சார், சாதிச்சபோது யாரும் கண்டுக்கலை. ஒரு உதவியும் செய்யலை. இப்போ வந்து பேட்டி கேட்டு என்ன பிரயோசனம் என்று என்மீது பாயத் தொடங்கினார் அந்தப் பெண். யார் செய்த தவறோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போது என்னிடம் பேட்டி கேட்காதே என்று பேசப்பேச அழைப்பைத் துண்டித்துவிட்டார்.