காட்டுப்பூ
மிகத்தாமதமாகத்தான் பூ பார்த்தேன். ஆட்டோகிராப் படம் பார்த்தபோது இதுபோல திருமணமாகப்போகும் ஒரு பெண் தன் முன்னாள் காதலர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும் ஒரு படத்தை தமிழ் சினிமா பதிவு செய்யுமா என்கிற கேள்வி எழுந்தது. சசி இந்தப் படத்தில் அடுத்தப் படியில் நின்று ஒரு பெண்ணின் ஆசை, ஏக்கங்களைச் சொல்லியிருக்கிறார்.
ஒருமுறை அண்ணி மாளவிகாவின் பேட்டியை குமுதம் சிநேகிதியில் படிக்க நேர்ந்தது. அதில் அவர் துணிச்சலாக இளம்பிராயத்து தவறுகள், அபிலாஷைகள் அனைத்தையும் சொல்லியிருந்தார். விடலைக் குறும்புகள் எல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? பூவில் தமிழ் சினிமா தனக்குத் தானே கிழித்துக் கொண்ட கோட்டை துணிச்சலாகத் தாண்டியிருக்கிறார் சசி. முதல் காட்சியிலேயே கணவனிடம் பொய் சொல்லிவிட்டு திருமணத்துக்கு முன்பு உயிராகக் காதலித்த தன் தாய் மாமனைக் காணச் செல்கிறார் நாயகி. அவன் வரும் வழியில் கால் கடுக்கக் காத்திருக்கிறாள். கல்யாணமானா எல்லாத்தையும் மறந்துடனுமா என்று கேள்வியும் கேட்கிறாள். சபாஷ்.
நிச்சயம் பூ 100 நாள் படமல்ல. ஆனால் நல்ல படம். இதன் தயாரிப்பாளர் நியாயமாக என்ன செய்திருக்கவேண்டும்! இதன் டார்கெட் ஆடியன்ஸ் யாரோ அவர்களை நோக்கி புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்தியிருக்கவேண்டும். அயன் படத்தை சன் டிவி எப்படி விளம்பரம் செய்கிறது! நல்ல சினிமா ரசிகர்கள், பெண்கள் என இந்த இரு பிரிவினரிடையே இந்தப் படம் நிச்சயம் எடுபட்டிருக்கும். ஆனால் யாருமே கண்டுகொள்ளாமல் ஒரு காட்டுப் பூவாக தானே மலர்ந்து தானே வாடி, வதங்கிப் போயிருக்கிறது சசியின் பூ.
இனி சசி படம் என்றால் முதல் நாளே பார்த்துவிடப் போகிறேன்.