கேள்வி - பதில்கள்
உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
சத்தியமங்கலம் (ஆமாங்க அவர் ஊரேதான்) நவனீத கிருஷ்ணன் கண்ணன் என்பதன் சுருக்கமே ச.ந. கண்ணன். பள்ளியில் படிக்கும்போது எனக்கும் என் அக்காவுக்கும் ஒரே இன்ஷியல் (N)தான் இருந்தது. அது எந்த நாளிலிருந்து எனக்கு மட்டும் எஸ்.என் ஆக மாறியது என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. கண்ணன் என்கிற பெயரை யாருக்குத்தான் பிடிக்காது
கடைசியாக அழுதது எப்போது?
சமீபத்தில் மிகமோசமாக எழுதப்பட்ட ஒரு நாவலைப் படித்து கண்ணீர் வரும் அளவுக்குச் சிரித்தேன்.
உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
வாய்ப்பே இல்லை. நல்லவேளை, கணினி வந்தது.
பிடித்த மதிய உணவு?
ஆழ்வார்பேட்டை சாம்கோவின் மொகல் மட்டன் பிரியாணி. ஆனால் ஒருவருடமாக சீரமைப்பு வேலை என்கிற பெயரில் சாம்கோ இன்னமும் மூடியே கிடைக்கிறது.
நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
வாய்ப்பே இல்லை. யாரிடம் நான் என்னைக் காண்கிறேனோ அவர்களிடம் சிநேகம் வைத்துக்கொள்வது வழக்கம். என் அலைவரிசைக்கு உகந்தவர்களைத் தவிர யாரையும் அருகில் சேர்ப்பது கிடையாது.
கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
இதுவரை நான் எந்த அருவியிலும் குளித்ததே இல்லை.
ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
நடத்தை.
உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது - முகத்துக்கு நேராகப் பேசுவது. பிடிக்காதது - பேசத்தெரியாதது.
இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
நான் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தவன். இன்று தாத்தா மற்றும் அம்மாவின் தம்பியாகிய என் மாமா இருவரும் உயிருடன் இல்லாதது பெரிய பாரமாக இருக்கிறது. ஆயிரம் வசதி வாய்ப்புகள் வந்தாலும் இது ஒரு பெரிய குறையாகவே என்னிடம் இருக்கும்.
நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
ப்ரியா கதிரவன். எழுத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத ஒருவர் இத்தனை சுவாரசியமாக எழுதுவது எப்படி என்று நான் வியக்கும் நபர். இப்படி எதாவது மாட்டிவிட்டால்தான் போஸ்ட் போடுவார்.
உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பிடித்த விளையாட்டு?
மகா கிரிக்கெட் ரசிகன் நான். கிரிக்கெட் கட்டுரைகளை தொடர்ந்து கல்கியில் எழுதிவருகிறேன். ஃபெடரரும் நடாலும் மோதும் போட்டிகள் என்றால் சோறு, தண்ணி வேண்டாம்.
கண்ணாடி அணிபவரா?
என் உடலிலேயே மிகவும் வலுவான உறுப்பாக நான் நினைப்பது என் கண்களைத்தான். தொடர்ந்து கணினியில் வேலை செய்தாலும் கண்ணாடி அணிகிற நிலைமை வராது என்று நினைக்கிறேன்.
எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
இதுபற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன். சினிமாவை சினிமாவாக அணுகும் படங்களைப் பிடிக்கும். மற்றபடி சினிமாவை காசு பார்க்கும் வஸ்துவாக கருதப்படும் எந்தப் படங்களையும் நான் சீண்ட மாட்டேன். ரசிகனை மட்டமாக நினைக்கும் எந்தவொரு படைப்பும் எனக்கு அவசியமில்லை.
கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க. மனைவியுடன் பார்த்த முதல் படம். அவர் பிறந்த நாளுக்கு நான் அளித்த சிறு பரிசு.
என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
ஒரே நேரத்தில் குறைந்தது நான்கைந்து புத்தகங்களாவது படிப்பேன். மிஸ் தமிழ்தாயே வணக்கம் (சுஜாதா), மறுவாசிப்பில் மானசரோவர்(அசோகமித்திரன்), ஊரின் மிக அழகான பெண் (மொழிபெயர்ப்பு - சாரு நிவேதிதா), My Story - Kamala Das, 3 Mistake of my life - Chetan Bhagat.
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
டவுன்பிளானிங் படிப்பின்போது மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், பிகானர் போன்ற பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளேன்.
உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
அதை வெளியே சொல்வது சரியல்ல.
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வெட்டிபந்தா, போலித்தனம்.
உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
சென்னை, ஈரோடு, கோவை தவிர வேறு எந்த இடங்களுக்கும் அதிகமாகச் சென்றிராதவன்.
எப்படி இருக்கணும்னு ஆசை?
படித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
தாடி வளர்ப்பது
வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?
எது சரி, எது தவறு?
(சொக்கன், உங்கள் அழைப்பில் கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் நடிகைகளிடம் கேட்கவேண்டியது. அதனால் தவிர்த்துவிட்டேன்.)