வலையுலகில் திரைக்கதை தொடர்பான பதிவுகள் தற்போது நிறைய எழுதப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன. நான் எழுதிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வாழ்க்கை புத்தகத்தில் (கிழக்கு பதிப்பகம்) ஸ்பீல்பெக்கின் வெற்றி ரகசியங்கள் என்று சில குறிப்புகளை எழுதியிருக்கிறேன். ஹாலிவுட் திரைக்கதை சூத்திரங்களை அப்படியே தன் படங்களில் பின்பற்றுபவர் ஸ்பீல்பெர்க். ஹாலிவுட்டின் திரைக்கதை சூத்திரங்களையும் அவர் படங்களையும் ஒப்பிட்டு நான் எழுதிய குறிப்புகள் இவை :
* ‘ஹை கான்சப்ட்' என்கிற வார்த்தை அடிக்கடி ஹாலிவுட்டில் புழங்கப்படும். எத்தனையோ பல முயற்சிகளுக்கு முதலாக இருந்த ’ஜாஸ்’ படம்தான் ஹை கான்சப்ட்டின் முதல்புள்ளி. ‘ஹை கான்சப்ட்'டை திரைக்கதை உக்தியாக தொடர்ந்து பின்பற்றி வருகிறார் ஸ்பீல்பெர்க்.
படத்தின் கதையை ஒரு வரியில் சொல்வதுதான் ஹை கான்சப்ட். ஜாஸ் படத்தின் கதையை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். ’கடலில் இருக்கும் சுறா மீனால் மனிதர்களுக்கு ஆபத்து.’இதை வேதவாக்காக வைத்துப் பல படங்கள் வெளிவந்தன. ‘லையர் லையர்' படத்தின் கதையை எடுத்துக்கொள்ளுங்கள். வக்கீல் ஒருவன் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரமும் உண்மையையே பேசவேண்டும். (தமிழில்? ‘முதல்வன்' நல்ல முயற்சி. 'ஒரு சாமானியன் ஒரேயொரு நாள் முதல்வர் பதவியில் அமர்கிறான்.')
* படத்தில் ஒரு பெரிய பிரச்னை இருக்கவேண்டும்.
(ஃபேமிலி டிராமாவுக்கும் இது சில சமயங்களில் ஒத்துப்போகும். சம்சாரம் அது மின்சாரம்
நல்ல உதாரணம்)'ஜாஸ்' படத்தில் என்ன பிரச்னை? சுறா மீன் மனிதர்களைக் கொல்ல வருவதே பெரிய பிரச்னைதானே! 1916க்குப் பிறகு சுறா
மீன் மனிதர்களைக் காவு வாங்கிய செய்திகள் அவ்வளவாக மக்களின் கவனத்துக்கு வரவில்லை.
ஆக, படத்தில் பார்க்கும்
எந்தக் காட்சியும் மக்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கவேண்டும்.
* காட்சிகள் சர்வசாதாரணமாக இருக்கக்கூடாது. நாலு சுவற்றுக்குள் நடப்பதை என்னதான் சுழற்றிச் சுழற்றிக் காண்பித்தாலும் பிரமாண்டம் தெரியாது. வாசல் தாண்டி வரவேண்டும். மக்களால் நினைத்துப் பார்க்காத ஓர் இடத்தில் கதை நடக்கவேண்டும். அப்போதுதான் அடுத்தக் காட்சி பற்றிய ஊகம் சுலபத்தில் தோன்றாது. ‘ஈ.டி' படத்தின் கதை எங்கு நடக்கிறது? ’சேவிங் பிரைவேட் ரையான்’ படத்தின் போர்க்காட்சிகள்? ஜூராஸிக் பார்க்?
* கதையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சாதாராண மனிதன் அசாதாரண சம்பவங்களில் மாட்டிக் கொள்ளவேண்டும். அல்லது அசாதாரண மனிதன் சாதாரண இடத்தில் வந்து மாட்டிக்கொள்ளவேண்டும்.
ஜாஸ், ஸூராஸிக் பார்க், ஏன் ஸ்பீல்பெர்க்கின் முதல் படமும் டெலிஃபிலிமுமான டுயலில் கூட சாதாரண மனிதனுக்கு ஏற்படும் அசாதாரணமான இடர்பாடுகள்தானே கதை. ‘ஈ.டி' படத்தில் அசாதாரணமான ஜீவனான வேற்றுகிரக விநோத விலங்கு பூமியில் வந்து மாட்டிக் கொள்கிறது.
* வேறுவழியில்லை. கதை புதிதாகத்தான் இருக்க வேண்டும். ஸ்பீல்பெர்க் தமது ஒவ்வொரு படத்துக்கும் ஸ்கீரீன்பிளே ரைட்டர்களுடன் அமர்ந்து மண்டை உடைத்துகொள்வது இதற்குத்தான். பழைய சாதத்தை வெள்ளித் தட்டில் பறிமாறுவது என்றைக்கும் ஆபத்து. தட்டை ரசிக்கத்தான் போகிறோம். ஆனால் சாதம் நன்றாக இருந்தால்தானே வயிறு நிறையும்! இதற்கு உதாரணம் வேண்டுமா!
* படத்தின் கதாநாயகனோ இயக்குநரோ குறிப்பிட்ட படத்தை தனது மைல்கல்லாக நினைக்கவேண்டும். (கமல் - மருதநாயகம் ஞாபகத்துக்கு வருகிறதா!) இப்படி ஸ்பீல்பெர்க் சொல்லி அடித்து ஆஸ்கரைக் கைப்பற்றிய படம் - ‘ஸ்லிண்டர்ஸ் லிஸ்ட்'.
* இரு பாலினருக்கும் அனைத்து வயதினருக்கும் பிடித்ததாக இருக்கவேண்டும். ஒட்டுமொத்தக் குடும்பமும் சேர்ந்து படம் பார்க்கும்போதுதான் படத்தின் வசூல் தறிகெட்டு இருக்கும். ஈ.டி, ஜாஸ், ஜூராஸிக் பார்க், இந்தியானா ஜோன்ஸ் போன்ற படங்களை மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்றுதானே பார்த்தார்கள்!
* படம் முழுக்க கலந்திருக்கும் உணர்வு ஒற்றை வார்த்தையில் விளக்குவதாக இருக்கவேண்டும். ஜாஸ் படமென்றால் பயம். ஈ.டி என்றால் தனிமை. ஜூராஸிக் பார்க் என்றால் ஆச்சர்யம், சேவிங் பிரைவேட் ரையன் என்றால் பரபரப்பு என்று ஒரு வார்த்தைக்குள் அடக்கப்படும் உணர்வுகள் படத்தின் வெற்றிக்குச் சுலப வழி வகுக்கும்.
* ஹீரோ அல்லது படத்தின் பிரதான கதாபாத்திரம், நாம் நினைத்துப் பார்க்க முடியாத செயல்களைச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் ரசிகன் ஆச்சர்யத்தில் வாயைப் பிளப்பான். இந்தியானா ஜோன்ஸ், டினோசர், சுறா மீன் இதற்கு நல்ல நல்ல உதாரணங்கள்.
* ஸ்பீல்பெர்க்கின் கதாநாயகர்கள் ஆரம்பத்தில் முடிவெடுக்கத் தயங்குவார்கள். இதுவும் ஒரு திரைக்கதை உத்தி ஆகும். ஹீரோ என்பவர் ஆரம்பத்தில் சாதுவாக இருந்தால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகும். ’ஜாஸ்’ படத்தில் ஆரம்பத்திலிருந்தே சுறா மீன் தன் சாகசத்தைக் காட்டினாலும் படத்தின் இதர கதாபாத்திரங்கள் சுறா மீனை எதிர்கொள்ள என்ன செய்வார்கள் என்கிற ரசிகனின் எதிர்ப்பார்ப்பு படத்துக்கு மேலும் வலு சேர்த்தது. ‘ஈ.டி' பொடியன் எப்படி வேற்றுகிரக விநோத விலங்கைக் காப்பாற்றுவான் என்று படம் பார்த்த ஒவ்வொருவரும் தவித்தோமா இல்லையா!
* படத்தின் போக்கு ஹீரோவுக்கு எதிரானதாக இருக்கவேண்டும். தன் மீது படிந்துள்ள எதிர்ப்பை ஹீரோக்கள் தகர்க்கும்போதுதான் ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல்கள் கிளம்பும். உதாரணமாக ‘ஸ்லிண்டர்ஸ் லிஸ்ட்'டில் என்ன நடக்கிறது? யூதர்கள் மீதான நாஜிக்களின் தாக்குதல்தான் கதை. ஆனால் படம் முழுக்கத் தாக்கப்பட்டது யூதர்கள்தானே!
* சப்-டைட்டில் அதாவதுப் படத்தின் தலைப்புக்குக்
கீழே ஒரு வாசகமே வருமே அது படத்தை மார்க்கெட்டிங் செய்ய உதவவேண்டும். ’தி லாஸ்ட் வேர்ல்ட்’ படத்தின் சப்-டைட்டில், Something has survived (ஏதோவொன்று தப்பித்து
விட்டிருக்கிறது.) 'Munich' படத்தின் சப்-டைட்டில்
'This is the story
of what happened next!' (அடுத்து என்ன நடந்தது
என்பது பற்றிய கதை.) Schindler's
List - Whoever saves one life, saves the world entire ( ஓர் உயிரை யார் காப்பாற்றியிருந்தாலும்
அவர்கள் உலகையே காத்தவராகிறார்.)
ஸ்பீல்பெர்க் பி.ஏ., வசூல் ராஜா - ச.ந. கண்ணன் - கிழக்கு பதிப்பகம்