கடந்த எட்டு வருடங்களாக மூன்று வேளையும் ஹோட்டலில்தான் கை நனைக்கிறேன். சென்னையிலுள்ள ஹோட்டல்கள் பற்றி பக்கம்பக்கமாக எழுதும் அளவுக்கு ஒவ்வொரு ஹோட்டலிலும் தினுசு தினுசான அனுபவங்கள். (மாமி மெஸ் ஒன்றில் மாமா எப்போதும் நம் அருகில் உட்காந்துதான் சாப்பிடுவார், சட்டைகூட போடாமல்! என்னைப் போல் ஒருவர் என்று நீண்டநாளாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஒருமுறை சாப்பிட்ட கையோடு கல்லாவுக்குச் சென்று பணம் போட்டபோதுதான் அவருடைய அருமை புரிந்தது. ஒரு ஹோட்டலில் நான் தனியே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எதிரே வெடுக்கென்று இரண்டு அழகான பெண்கள் வந்து உட்கார்ந்துவிட்டார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கித் திங்க, தலைகுனிந்து காலால் கோலம் போட்டுக்கொண்டே அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தேன். இன்னொரு ஹோட்டலில் ஆப்பம் ஆர்டர் செய்தபோது சர்வர் என்னிடம், சார் அதுமட்டும் வேண்டாம். வேற சொல்லுங்க என்று காதுக்கு அருகே வந்து பேசினார். மாவில் என்ன கோளாறோ! கையேந்தி பவனிலிருந்து பார்க் ஷெரட்டன் வரை ருசி பார்த்தாகிவிட்டது. ஆனாலும் சாம்கோ.... அழகான ஆழ்வார்பேட்டை சாம்கோ.
ஆழ்வார்பேட்டை, நந்தனம், அபிராமபுரம், மைலாப்பூர் பகுதிவாழ் அசைவர்களுக்கு மிகவும் வாகான ஒரு ஹோட்டல், சாம்கோ. ஆட்டோக்காரர்களுக்கு அறிவாலயம், எல்.ஐ.சி மாதிரி சாம்கோவும் ஒரு முக்கிய அடையாளம். ஒருகாலத்தில் இப்போது ஆழ்வார்பேட்டை மேம்பாலத்துக்குக் கீழே உள்ள லைஃப்ஸ்டைல் வளாகத்தில் சாம்கோ இருந்திருக்கிறது. அங்கு கிரேசி மோகன் ட்ரூப்புடன் கமல் டிஷ்கஷன் நடத்துவாராம். இப்போது சற்றே தள்ளி இடம்பெயர்ந்து எல்டாம்ஸ் சாலையில். கமல் வீட்டுக்கு அடுத்த காம்பவுண்ட்.
அசைவப் பிரியர்களுக்கு சாம்கோ ஒரு கொண்டாட்டவெளி. பொதுவாக ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது என்பது பெரிய அவஸ்தை. ஒருமுறை சன்டிவியில் சுகிசிவத்தின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தபோது ஹோட்டல்களில் சாப்பிடும் பழக்கத்தை அறவே எதிர்த்துப் பேசினார் அவர். அது எப்பேர்ப்பட்ட ஹோட்டலாக இருந்தாலும் சுத்தம் பேணமாட்டார்கள். நான் முடிந்தவரை ஹோட்டல் உணவை தவிர்க்கப் பார்ப்பேன் என்று அரைமணிநேரம் முழங்கினார். கேட்டுவிட்டு நான் நேராக ஹோட்டலுக்குத்தான் சென்றேன். பேச்சிலர்களுக்கு வேறு ஏது போக்கிடம்! சுத்தம், உபசரிப்பு என்று வைத்து பரிசோதித்துப் பார்த்தால் சென்னையிலுள்ள பெரும்பாலான ஓட்டல்கள் பல்லிளிக்கவே செய்கின்றன. சரவண பவன் தவிர வேறெந்த ஹோட்டலிலும் எனக்கு முழுதிருப்தி கிடைத்தது கிடையாது. பல ஹோட்டல்களில் சர்வருக்கு முதலாளிக்கும் இடையே நடந்தச் சண்டைகளுக்கெல்லாம் நான் நேரடிச் சாட்சியாக இருந்திருக்கிறேன். சரவண பவனில் மட்டும் தான் எந்த இடைஞ்சல்கள் இல்லாமல் சாப்பிடலாம்.
ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் நாரதகானா சபா அருகில் உள்ள உணவகத்துக்குச் செல்லுங்கள். சாப்பிடுவர்களைவிட சர்வர்கள் அதிகமாக இருப்பார்கள். கல்யாண மண்டபம்போல அங்குமிங்கும் நடந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் எக்ஸ்ட்ரா சாம்பார் கேட்க எண்ணும்போது யாரும் கைக்கெட்டிய தூரத்தில் இருக்க மாட்டார்கள். நம் கோரிக்கையை காதில் வாங்குவதற்கு ஒரு பத்து நிமிடம், கொண்டு வந்து கொடுப்பதற்கு இன்னொரு பத்து நிமிடம் என்று வெறுப்பேற்றிய பிறகுதான் துக்கிளியூண்டு சாம்பாரைத் தருவார்கள். உணவைச் சமைத்து பாத்திரத்தில் நிரப்பி விட்டாலே தாங்கள் உயர்தர சைவ உணவகத்தை நடத்திவருவதாக பல ஹோட்டல் முதலாளிகள் எண்ணிக்கொள்கிறார்கள்.
சரி, சாம்கோவுக்கு வருவோம். பொன்னுசாமி, அஞ்சப்பர், அரசப்பர் எல்லாவற்றையும் தவிர்த்துவிடுவோம். எனக்குக் கதவுகள் உள்ள ஓட்டல் என்றாலே அலர்ஜி. பில்லைத் தீட்டி விடுவார்கள். பில்லைக் கொடுத்துவிட்டு வந்தால் கதவை திறந்துவிடும் தொப்பி மாமா நம்மை ஒருமாதிரி பார்ப்பார். வண்டி எடுக்கப் போனால் இன்னொருவர் சல்யூட் அடித்துவிட்டு நம் கண்களையே பார்ப்பார். கதவு உள்ள ஓட்டல்களில் இவ்வளவு பிரச்னை இருக்கிறது. ஆனால் சாம்கோ கதவுகளற்ற ஒழுங்கீனங்களற்ற ஓர் உணவகம். ருசியைக் கொண்டே ஆளை திரும்பத் திரும்ப வரவழைக்கும். சேட்டன்களால் நடத்தப்படுவது. என்னுடைய எடை கூடுதலாகப் பத்து கிலோ கூடியதற்கு சாம்கோவைத் தவிர வேறு எதுவும் காரணமில்லை.
சர்வலோகத்திலும் சாம்கோவில் வழங்கப்படும் மொகல் மட்டன் பிரியாணிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அமிர்தம். முட்டை துருவலை மேலே தூவி நம் முன்னே வைக்கும்போது இன்ப போதையூட்டியது போல இருக்கும். மொகலுக்கு இணையாக செட்டிநாடு சிக்கன் பிரியாணி என்று இன்னொன்று உண்டு. வரமிளகாயையும் கருவேப்பிலையும் எண்ணையில் தாளித்து உணவினுள் கலந்து தரும்போது நாக்கி ஜலம் ஊறும். முக்கியமாக, இங்கு வந்து ஒருமுறை ப்ரான் பிரியாணி அதுதான் இறால் பிரியாணி சாப்பிட்டுப் பாருங்கள். இதன் சுவை சாம்கோ கஸ்டமர்களிடம் அமரத்துவம் பெற்றது. அதுவும் 75 ரூபாய்க்கு வண்டி வண்டியாக இறால் கொடுக்கும் ஒரே ஹோட்டல் சாம்கோ மட்டும்தான்.
ஆனாலும் சாம்கோவின் கரும்புள்ளி ஒன்று இருக்கிறது. அதுதான் சிக்கன் பிரியாணி. கலாபூர்வமான ரசனை கொண்ட சாம்கோ மாஸ்டர் சிக்கன் பிரியாணியின் சுமாரான சுவையில் மட்டும் எப்படி திருப்தியடைந்தார் என்று புரியவில்லை.
இங்கு வேலை பார்க்கும் சர்வர்கள் தமிழர்கள்போல் தோற்றம் கொண்டாலும் டேபிள் சுத்தம் செய்பவர்கள் ஜாக்கி சான் மச்சான்கள்போல சப்பைமூக்கு, கோதுமை நிறம் என்று ஹாங்காங்கை ஞாபகப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட வேலையைப் பல பிரபலங்கள் ஆரம்பத்தில் செய்திருக்கிறார்கள் என்கிற விவரங்கள் அவர்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது.
இப்படியெல்லாம் மகானுன்னத பாரம்பரியம் கொண்ட சாம்கோ ஓட்டலை இப்போது இழுத்து மூடிவிட்டார்கள். இயக்கத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பராமரிப்புப் பணிக்காக. ஷார்ட்வொயிலில் திறப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். நல்லவேளை, மூடுவதற்கு முந்தைய நாள் இதுகுறித்து நோட்டீஸ் ஒட்டினார்கள். சாம்கோ செட் என்று எங்கள் அலுவலகத்தில் ஒரு குழாம் இருக்கிறது. எல்லோரும் அந்தக் கடைசி நாளில் இரவு வேளையில் நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். இதயம் கனக்க வெளியேறினோம். நாங்கள் சாப்பிட்டபின் அடுப்பை அணைத்து கீழே இறக்கி பாத்திரங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டார்கள். விவரம் தெரியாமல் உள்ளே நுழைந்துவிடப் போகிறார்கள் என்று டேபிள்மீது நாற்காலிகளையும் கவிழ்த்து வைத்துவிட்டார்கள்.
ஓட்டலை மூடி மூன்று வாரங்களாகிவிட்டன. அந்த வழியே போகும்போதும் வரும்போதும் எட்டியெட்டிப் பார்க்கிறேன். ம்ஹூம்.. பெரிதாக வேலை எதுவும் நடப்பதுபோல தெரியவில்லை. இப்படி பொசுக்கென்று மூடி ஏன் என்னை பரிதவிக்க விட்டார்கள் என்று புரியவில்லை. வேறுவழியில்லாமல் உப்பு, புளிப்பு, காரம் எதுவும் உணராமல் நாடோடிபோல கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
சாம்கோ வாசல் திறக்கப்படும் நாளன்று நண்பர்களுக்கு ட்ரீட்!