மெல்லத் திறக்கும் கதவு!
நேரு ஸ்டியேத்தைக்கூட ஆறு மாதத்தில் கட்டிமுடித்துவிட்டார்கள். ஆனால் இதோ பட்டிப் பார்த்து திறந்துவிடுகிறோம் என்று மூடப்பட்ட ஆழ்வார்பேட்டை சாம்கோ ஓட்டலை இன்னமும் இழைத்து இழைத்து பராமரிப்புப் பணி செய்துகொண்டிருக்கிறார்கள்.
மைலாப்பூரைச் சுற்றியுள்ள எட்டுப்பட்டிக்கும் இருக்கிற உருப்படியான அசைவ உணவகம், சாம்கோ மட்டுமே. கதவு வைக்கப்பட்ட குளிர்சாதன உணவு வளாகங்களான அஞ்சப்பரையும் காபூலையும் நான் சேர்க்கவில்லை. அங்கு நுழையவேண்டுமென்றால் நீங்கள் எந்த அதிர்ச்சிக்கும் தயாராக இருக்க வேண்டும். புரட்டாசிக்கு முன்பு, தேதி குறிப்பிடப்படாமல் சாத்தப்பட்டது சாம்கோ. இன்றுவரை தன் சிதிலமடைந்த நிலையில் இருந்து அது கொஞ்சம்கூட மாறவில்லை. எந்நேரமும் வேலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. இருந்தும் இப்படித்தான் பார்க்க இருக்கும் என்கிற மாதிரிவடிவம் இன்னமும் பிடிபடவில்லை. உள்ளே மேம்பாலம் ஏதாவது கட்டிக்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
கட்டாயம் புரட்டாசி முடிந்து கமல் கையால் திறப்பு விழா நடத்துவார்கள் என்று கனா கண்டேன். அதற்குள் கமல் ஒருபடம் ஆரம்பித்து அதை டிராப்கூட செய்துவிட்டார். கட்டடத்தின் முன்பு இன்னமும் குறுக்கும் நெடுக்குமாகக் கம்புகள் நின்றுகொண்டுதானிருக்கின்றன.
ஆனால் அதன் உள்கட்டுமான வேலைகளைப் பார்த்தால் சாம்கோவுக்கும் கதவெல்லாம் வைத்து குளிர்சாதனக் கருவிகள் பொருத்தி சஃபாரி அணிந்த சூப்பர்வைசர் ஆர்டர் எடுக்கிற மாதிரியான அந்நியக் கலாசாரத்தை இவர்களும் ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது. விளைவு, - 80 ரூபாய்க்கு விற்றுவந்த உலகத்தரமான சாம்கோ மொகல் மட்டன் பிரியாணி இனி 120 ரூபாய்க்கு வந்து நிற்கப்போகிறது.
சாம்கோ இல்லாத தைரியத்தில் ஆழ்வார்ப்பேட்டை சைவ ஓட்டல்களின் ஏதேச்சதிகாரம் அதிகமாகி விட்டது. மாமி மெஸ்ஸில் 45 ரூபாய் கொடுத்தால்தான் மீல்ஸூக்கு எக்ஸ்ட்ரா தண்ணீர்கூட வைக்கிறார்கள். இந்தத் தொல்லைகள் எல்லாம் தவிர்க்கத்தான் நான் மதியம் மீல்ஸ் பக்கமே போவதில்லை. சரி, சூர்யாவில் தயிர் சாதம் வாங்கலாம் என்றால் அதையும் கைமா பண்ணி விட்டார்கள். அழகான பாக்கெட்டில் கஞ்சியை அடைத்துத் தருகிறார்கள்.
அப்படியே என் அலுவலகத்தைப் பெயர்த்தெடுத்து கபாலி கோயிலுக்கு அருகே வைத்தால் என் எல்லா பிரச்னைகளும் பறந்தோடிவிடும். பத்துக்குப் பத்து அறையில் சிறுகுடில்களில் சில அருமையான சைவ உணவகங்கள் அங்கு உள்ளன. திகட்டத் திகட்ட ஐஸ்க்ரீம் சாப்பிடவும் வழிகள் உண்டு. ஆனால் என்ன செய்ய, என் நாவுக்குள் என்ன தள்ளினாலும் அது மீண்டும் மீண்டும் சாம்கோவுக்கே ஆலாய் பறக்கிறது!