(என் கட்டுரைகளில் தோனி, இந்திய கிரிக்கெட் போன்ற வார்த்தைகள் தென்பட்டாலே நிறைய பேர் படாரென்று ஜன்னலைச் சாத்திவிடுகிறார்கள். கிரிக்கெட் பார்க்க ஆர்வமில்லாதவர்களுக்கு அதைப் பற்றி படிக்கக் கட்டாயப்படுத்துவது தவறுதான். அதனால்தான் இங்கே சமீபமாகக் கிரிக்கெட் கட்டுரைகள் எதுவும் எழுதாமல் இருந்தேன். ஆனாலும் ஸ்ரீசாந்த்தின் தேர்வு என்னை வலுக்கட்டாயமாக எழுதவைத்துவிட்டது. எனவே அத்தனைப் பழியும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தைச் (சிஎன்என்ஐபிஎன்னுக்கு இவர் ச்சீகா) சேரட்டும்.)
***
இந்த தடவையும் ஸ்ரீகாந்தின் இந்திய அணித் தேர்வு தமிழ் சினிமாவின் மசாலா படம்போல உப்புசப்பில்லாமல் இருக்கிறது. அட என்று ஒரேயொரு தடவை வியப்பதற்கு மட்டும் ஸ்ரீசாந்த்தின் திடீர் தேர்வு. (தேர்வுக்குழு லொள்ளுசபா மனோகரை இந்திய அணிக்குத் தேர்வு செய்தாலும் யாரும் கேள்வி எழுப்பமுடியாது. அப்படியொரு மனுதர்மத்தை எழுதி வைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.)
இந்திய அணிக்கு முக்கியமான இரண்டு டெஸ்ட் போட்டிகளை முன்நின்று வென்று கொடுத்ததுதான் ஸ்ரீசாந்தின் பெரிய பக்கபலம். இந்திய வேகப்பந்து வீச்சு வரலாற்றில் இதுபோன்ற தனித்திறமைகள் அபூர்வம். ஆனால் ஸ்ரீசாந்துக்குக் கொழுப்பு. இனி உலகம் என் கையில் என்று மிதப்புடன் நடந்துகொண்டார். பார்ட்டி, பெண்கள், ஸ்லெட்ஜிங் என்று சினிமா கதாநாயகன்போல ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். காதல் விவகாரத்தில் இவரும் ஒரு நடிகையும் டிஎன்ஏ பத்திரிகையில் தினசரி சண்டை போட்டுக்கொண்டார்கள். (பின்னாளில் எழுதப்படும் ஸ்ரீசாந்தின் வாழ்க்கை வரலாறு மிகச் சுவாரசியமாக இருக்கும் இல்லையா!) நடுவே இஷாந்த் சர்மா, ஆஷிஸ் நெஹ்ரா மைய பெளலர்களாக உருவெடுத்தார்கள். ஸ்ரீசாந்த் தூரமாக நிறுத்தி வைக்கப்பட்டார்.
ஸ்ரீசாந்த் பற்றி டொனால்ட் சொல்லிய வார்த்தைகள் அடிக்கோடிட வேண்டியவை. பயிற்சியில் ஒழுங்கு இல்லை, உழைப்பு இல்லை என்று ஒரே வார்த்தையில் ஸ்ரீசாந்தைக் காலி செய்தார் டொனால்ட். அவர் சொல்லி முடித்த அடுத்த வாரமே ஸ்ரீசாந்துக்கு ஒழுங்கீன நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கடுத்த இரண்டாவது வாரம் இப்போது இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கிறார் ஸ்ரீசாந்த். என்ன, இவரை இனி எப்படி சமர்த்துப்பிள்ளையாகப் பார்க்கப்போகிறோம் என்றுதான் தெரியவில்லை.