ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
இந்தக் கட்டுரை புத்தகக் கண்காட்சி பற்றி அல்ல!

ஆகக் கடினமானப் பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ராகினிஸ்ரீ தோற்றுப்போனது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. சூப்பர் சிங்கர் விசிறிகளுக்கு என் சோகம் புரியும்.

 

நீயா நானா மட்டும்தான் பார்ப்பேன் என்கிற பிடிவாதத்தைத் தளர்த்திய நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர்  2008. இறுதி நிமிடங்களில் விடைபெறும்பொழுது சின்மயி விடும் பீட்டரிங்கைத் தவிர்த்துவிட்டால் எந்த இடத்திலும் சிறு குறையும் இல்லாத ஒரு நிகழ்ச்சி அது. ஆரம்பத்தில் நான் சூப்பர் சிங்கர் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. ஆனால் ரவியும் ரேணுவும் ரஞ்சனியும் அஜீஸூம் என்னைத் தங்கள் பக்கம் திருப்பி விட்டார்கள். மெய்மறக்கச் செய்யும் புதிய குரல்களால் திங்கள், செவ்வாய், புதன் கிழமை ஆகிய தினங்களின் இரவுவேளை என் கேளிக்கை இரவுகளாக மாறின.

 

ராகினிஸ்ரீ என்னைக் கவர்ந்தது குரலினால் அல்ல. உடனே அவரை ஜெனிபர் லோபஸ் ரேஞ்சுக்கு கற்பனை செய்துகொள்ள வேண்டியதில்லை. விக்ரம், சூர்யா எல்லாம் எப்படி நேற்று பார்க்கிறபோது ஒருமாதிரியும் இன்று பார்த்தால் புதுமாதிரியும் தெரிவார்களோ அதுபோல ஒரு வித்தையைக் காண்பித்து என்னை ஈர்த்தார் அவர்.

 

ஜெயா டிவியில் எஸ்.பி.பி நடத்தும் என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியில்தான் முதல்முதலாக அறிமுகமானார் ராகினிஸ்ரீ. பாவாடை தாவணி கட்டிக்கொண்டு தேசுலாவுதே பாடியபோது அம்மன் சிலையாக காட்சி தந்தார். ஆனால் இதே பெண் சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டபோது நான் முதலில் இதுவேறு யாரோ என்றுதான் நினைத்தேன். பிறகுதான் என் மூளைக்கு விழிப்புணர்வு வந்தது.

 

குரலில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால் ஒரு நடிகை தன் முதல் படத்துக்கும் பத்தாவது படத்துக்கும் தோற்றத்திலும் பொலிவிலும் எப்படியொரு உற்சாக மாற்றத்தைக் கொண்டுவருவாரோ அதுபோல தன்னை புதுப்பித்துக்கொண்டிருந்தார் ராகினிஸ்ரீ.  இன்று ராகினிஸ்ரீ என்னமாதிரியான அலங்காரங்கள் செய்துகொண்டு மினுமினுப்பார் என்கிற வீணான எதிர்பார்ப்பை என்னிடம் உருவாக்கிவிட்டார். விஜய் டிவி கேமராமேனும் அடிக்கடி ராகினிஸ்ரீ பக்கம் கோணம் வைத்தது தற்செயலல்ல.

 

காலையில் பத்து மணிக்குப் போய் மாலையில் ஐந்து மணிக்குத் திரும்பும் கல்லூரியில் படித்து சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள முடியாது. சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஒருவர் தன்னையே எரித்துக் கொள்ள வேண்டும் என்பாராம் பிஸ்மில்லா கான். சூப்பர் சிங்கர் பாடகர்களில் எத்தனை பேர் இசையாகவே வாழ்ந்தார்கள் என்பது கேள்விக்குறி.

 

ராகினிஸ்ரீயின் தோற்றக்கவனம் எனக்கு தோல்வியின் குறியீடாகப் பட்டது. ரவி, ரேணு, அஜீஸ் என இந்த மூன்று பேரிடமும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முன்னேற்றம் தெரிந்தது. ஒவ்வொருமுறையும் புதிதாகத் தவறுகள் செய்தார்களே தவிர சென்றமுறை நடுவர்கள் குறிப்பிட்ட தவறுகளைத் களைந்துவிட்டுத்தான் அடுத்த தடவை  மேடையேறினார்கள். ஆனால் ராகினிஸ்ரீயின் குரலிலும் பாடும் திறமையிலும் பெரிய முன்னேற்றங்களை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.  

 

ஒருமுறை கிரேஸி மோகன் என்னிடம் பொன்னியின் செல்வன் பற்றிக் குறிப்பிடும்போது, இதுபோல ஒரு நாவலை யாராலும் எழுதமுடியாது. மஞ்சா சோறு வெளியே வந்துடும் என்று பிரமித்தபடி கூறினார். கிட்டத்தட்ட அதே அளவு கடினமான உழைப்பை கோருகிற பாடல், சிந்து பைரவியில் வருகிற பாடறியேன் படிப்பறியேன். 

 

சித்ரா இந்தப் பாடலை பாடும்போது அவருக்கு ஓட்டு போடும் வயதுகூட ஆகவில்லை. ஆனால் இசைமீதான காதல், அந்தப் பாடலுக்கு அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை எல்லாம் ஒன்றுசேர்ந்து அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.  பாடறியேன் பாடலை ஒருவர் அட்சர சுத்தமாகவும் ஸ்ருதி சுத்தமாகவும் பாடுவதென்பது அவ்வளவு லேசுபட்ட விஷயமல்ல. ரேணுவால்கூட முடியுமா என்று என்னால் நம்பமுடியவில்லை. ரவி ஒருவேளை பாடலாம்.

 

ராகினி பாடியபோது மிகப்பரிதாபமாக இருந்தது. ஒருவருடைய வெற்றியை எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம். ஆனால் தோல்வி அதன் பார்வையாளரைப் பதைபதைக்கச் செய்யும். அதுவும் இவ்வளவு தூரம் வந்துவிட்ட ஒரு பாடகி சிறுபிள்ளை போல  மேடையில் தடுமாறியது வேதனையின் உச்சம்.

 

ஒரு பாடகர் தோற்றத்திலும் மினுமினுப்பிலும் கவனம் செலுத்துவது பெரிய தவறா என்று கேட்கலாம். நிச்சயம் கிடையாது. நாம் எதற்காக அழைக்கப்பட்டோம் என்பதை ஒருகணம் யோசிக்கவேண்டும். பாடலுக்கான பயிற்சியில் நூறு சதவிகித உழைப்பைக் காண்பித்துவிட்டு பிறகு என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தவறில்லை.

 

இங்கே உங்களுக்கு ஒரு கதை.

 

செர்ஜி புப்கா உலகின் மிகச்சிறந்த அத்லெட் என்று பெயர் பெற்றவர்.  உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்.

 

ஆறுமுறை போல் வால்ட் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். 35முறை போல் வால்ட்டில் உலக சாதனை செய்திருக்கிறார். ஆறு மீட்டர் தாண்டிய முதல் வீரர். இப்படி போல் வால்ட்டில் எத்தனை சாதனைகள் உண்டோ அத்தனையிலும் அவர் பெயர்தான் முதல்வரிசையில் இருக்கும். ஆனால் ஒருமுறை அவருக்குப் பெரிய தர்மசங்கடம் ஒன்று ஏற்பட்டது.

 

1986ல் நடந்த ஐரோப்பிய அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் புப்கா மிகவும் சிரமப்பட்டு வெற்றி கண்டார். முதலிரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்து மூன்றாவது முறைதான் அவரால் அதிக உயரத்தில் தாண்ட முடிந்தது. அவர் தரத்துக்கு அது பெரிய அவமானம். மூன்றாவது முறையாக இலக்கை எட்டியது அவருக்குப் பெரிதல்ல. முதலிரண்டு முறை ஏன் தோற்றுப்போனேன் என்று அன்று இரவு முழுக்கத் தன்னைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டார்.

 

அடுத்த நாளே ஒரு மனநல மருத்துவரைப் போய்ப் பார்த்தார்.

 

'என் திறமையில் எனக்கு நகத்தின் நுனியளவுகூட சந்தேகம் கிடையாது. ஆனால் அத்தனை பேர் முன்னால் நான் ஏன் இரண்டுமுறை தவறிவிழவேண்டும்? என்ன ஆயிற்று எனக்கு?’

 

மருத்துவர் கேட்டார் - 'போட்டிக்கு முன்னால் என்ன செய்தீர்கள்?’

 

'போட்டி நடக்கும் முதல்நாள் என்னை நிறைய கல்லூரி மாணவர்கள் வந்து சந்தித்தார்கள். பல பேராசியர்களும் கூட வந்தார்கள். என்னிடம் நீண்ட நேரம் பேசினார்கள். தினமும்தானே பயிற்சி செய்கிறேன் என்று அரைநாளை அவர்களுக்காக செலவழித்தேன்.

 

அதுதான் பிரச்னைக்கான காரணம் என்று சட்டென்று சொன்னார் டாக்டர். அடுத்தநாள் முக்கியமான போட்டி இருக்கும்போது உங்கள் கவனம் முழுவதும் விளையாட்டின் மீதல்லவா இருந்திருக்கவேண்டும். பொழுதுபோக்குக்கு நேரம் செலவழித்ததால் உங்களுடைய மனநிலை அதன் நிலையை இழந்து வேறு திசையில் பயணித்துவிட்டது. அது போட்டியில் தன் விளைவைக் காண்பித்துவிட்டது.

 

ராகினிஸ்ரீக்காக ஒரு தனிக்கட்டுரையா என்றும் தோணலாம். என் இலக்கு அவர் அல்ல. திறமையில் தன்னை    மேம்படுத்திக்கொள்ளாமல் புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அபிலாஷைகளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் நிறைய பேரைப் பார்க்க முடிகிறது.  இன்று சச்சின் சச்சின் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடும் சச்சின், கிரிக்கெட்டே வாழ்க்கை; வாழ்க்கையே கிரிக்கெட் என்று வாழ்ந்தவர். தன் தந்தை இறந்த மறுதினம் உலக கோப்பையில் இந்தியாவின் நெருக்கடி நிலைமைச் சமாளிக்க இங்கிலாந்துக்குப் பறந்து சென்றார். இந்த அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் சச்சின் இன்னொரு காம்பிளி, சஞ்சய் மஞ்ச்ரேக்கராக காணாமல் போயிருப்பார்.

 

சானியா இன்னொரு மோசமான உதாரணம். அவர் இன்றுவரை அவர் திறமைக்காக அதிகம் தடவை பேசப்படவில்லை. விளைவு, கடந்த இரண்டு வருடங்களாக சிறு முன்னேற்றமும் அடையாமல் மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்காகப் பேசப்படும் வீராங்கனையாக மாறிவிட்டார். புப்காவின் மருத்துவர் எடுத்துச் சொன்ன அறிவுரையை எப்போதும் சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.