விளையாட்டு வீரர்கள் நிதியுதவிக்காகத் தள்ளாடுவதெல்லாம் நம் ஊரில் மட்டும்தான். பள்ளிகளில் வழங்குவதுபோல பங்களிப்புச் சான்றிதழ் மட்டுமே வழங்குகிற போட்டிகளெல்லாம் உண்டு. ஆனால் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களைத் தொழிலாகக் கொண்ட வீரர்கள் மிகச் சுபிட்சமாக வாழ்கிறார்கள். அந்த விளையாட்டையே ராஜபோக வாழ்க்கை வாழ்பவர்களால் மட்டும்தான் ஆடமுடியும் என்பது வேறுவிஷயம். மசூதியைக் கூட்டிப் பெருக்கும் மகன்கள் (பதான்க ள்) இந்திய கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பியதுபோல டென்னிஸில் முடியாது. பணக்காரர்கள்தான் டென்னிஸ் ஆடுவார்கள். மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள்.
ரோஜர் ஃபெடரர் லட்சுமி கடாட்சம் கிடைக்கப் பெற்று டென்னிஸ் விளையாட்டின் நெ.1 பணக்காரர் ஆகியிருக்கிறார். ஃபெடரருக்கு 27 வயது. சராசரி இந்திய இளைஞர்கள் நல்ல வேலையில் அமரும் வயது. தனி வாழ்க்கையைத் தொடங்குகிற வயது. ஆனால் இந்த 27 வயதுக்குள் யாருமே எட்டமுடியாத உயரத்துக்குச் சென்றுவிட்டார் ஃபெடரர். 14 கிராண்ட்ஸ்லாம்கள் வாங்கிவிட்டேன். என்னை விஞ்ச யார் இங்கு உண்டு என்று நினைத்திருந்தேன் என்று ஃபெடரரின் 15வது கிராண்ஸ்லாம் கோப்பைக்கு ஏக்கம் கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் பீட் சாம்பிராஸ். பரிசுத்தொகையிலும் சாம்பிராஸ்தான் நீண்டநாளாக முதல் இடத்தில் இருந்தார். அவர் தன் வாழ்நாளில் சம்பாதித்த 216 கோடியை சமீபத்தில் முந்தியிருக்கிறார் ஃபெடரர். இதுவரை டென்னிஸ் அவருக்கு 250 கோடியைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது.
ஆனால் இந்தச் சாதனையை ஒருவர் துரத்திக் கொண்டு அருகில் வரவிருக்கிறார். 22 வயதில் ரஃபால் நடால் சம்பாதித்தது - 125 கோடி. அடுத்த 125 கோடியைத் தொட நீண்ட காலமாகாது.
டென்னிஸ் போட்டிகளின் பரிசுத்தொகை அதிகமாகிவிட்டது. விம்பிள்டனை வென்றால் ஏழரை கோடி ரூபாய். ஃபெடரர் ஆறு விம்பிள்டன்கள் வாங்கியிருக்கிறார். முதல்நிலை வீரராக இல்லாவிட்டாலும் தன் வாழ்நாளில் சிறந்த வீரராக விளங்கிய அண்ட்ரே அகாசி 155 கோடி சம்பாதித்துள்ளர். அவர் மனைவி ஸ்டெபி கிராப் 110 கோடி. நவரத்திலோவாவைவிட இரண்டு கோடி அதிகம். ஒரு விளையாட்டில் இத்தனை பேர் இவ்வளவு தொகை ஈட்டுவது டென்னிஸில்தான்.
பெண்களில் அதிகம் சம்பாதித்த வீரர் செரினா வில்லியம்ஸ். 130 கோடி. நம் ஊர் சானியா மிர்சா 8 கோடி ருபாய். நம் நினைவு தெரிந்த நாள் முதல் ஆடிவரும் லியாண்டர் பெயஸ் 26 கோடியையும் பூபதி 23 கோடியையும் டென்னிஸ் வழியாக ஈட்டிருக்கிறார்கள்.
அடக்கடவுளே, டென்னிஸ் ஆடினால் இவ்வளவா சம்பாதிக்க முடியும் என்றெல்லாம் வியக்காதீர்கள். ஃகோல்ப் சாம்பியனான டைகர் வுட்ஸ் கடந்த பத்து வருடத்தில் மட்டும் 3800 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார். 2010ல் அவர் 5000 கோடியைத் தொட்டுவிடுவார் என்று கணிக்கிறார்கள். இதுபோன்ற எந்த பேங்க் அக்கவுண்ட்டும் இல்லாமல் அத்தனை இடிபாடுகளுக்கு மத்தியிலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு கெளரவம் தேடித்தர முயற்சிக்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
(கல்கிக்காக நான் எழுதிய கட்டுரை)
குண்டுகளுக்கு மத்தியில் லவ் - ஆல்!