தெனாவெட்டு
'தெனாவட்டு' படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. இதற்குப் பிறகு பார்ப்பதாகவும் இல்லை. ஆனால் வருகிற விமரிசனங்களை வைத்து ஒன்று சொல்லமுடியும். நாய் வாலையும் தமிழ்சினிமாவின் தரத்தையும் எவ்வளவுதான் நிமிரவைத்தாலும் அது தன் பழைய நிலைக்கே செல்லும்.
தமிழ்சினிமாவில் எல்லோரிடமும் தவிர்க்கமுடியாத ஒரு நோய் உண்டு. க்ளாஸாக ஒரு படம் பண்ணினாலும் அடுத்தது தரை டிக்கெட் ரேஞ்சுக்கு ஒரு படம் பண்ணினால்தான் கவளம் வாய்க்குள் செல்லும். 'தசாவதாரம்' படத்தைப் பார்த்தபோது கமல்கூட இந்த நோயிலிருந்து விடுபடவில்லையே என்று நான் கவலைப்பட்டேன்.
குனியக் குனியக் குட்டும் பழக்கம்தான் இதுவும். பி அண்ட் சி என்று தமிழ்நாட்டு கடைக்கோடி ரசிகர்களுக்கு தமிழ்சினிமா ஒரு முத்திரை குத்தி வைத்திருக்கிறது. 'சுப்ரமணியபுரம்' மாதிரியான தரமான படத்தை அவர்கள் ஆரவாரமிட்டுப் பார்த்து நூறுநாள் ஓடவைத்தாலும், கண்ணா, நீ இருக்க வேண்டிய இடம்தான், பார்க்கவேண்டிய படம் இதுதான் என்று அவர்கள் கைகால்களைக் கட்டிப்போட்டு விடுகிறார்கள். சுந்தர் சி நடிக்கும் படங்களெல்லாம் இந்த வரிசையில்தான் சேரும்.
இத்தாலி இயக்குநர் ஃபெட்ரிகோ ஃபெலினி இயக்கிய 'லா ஸ்டிராடா' என்ற படம் 1954ல் வெளியானது. அதன் தரத்தைக்கூட தமிழ்சினிமா இன்னமும் எட்டிப்பிடிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் இந்த விவரம் புரியாமல் தமிழ் சினிமா இயக்குநர்கள் காண்பிக்கிற பந்தா இருக்கிறதே, அப்பப்பா!
ஜீவா போன்ற தயாரிப்பாளர் வீட்டு பிள்ளையே சாக்கடையில் விழுகிறபோது பரத், ஜெய் போன்றவர்களின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம்.
ரசிகர்கள் தங்கள் ரசனையை உயர்த்தி நீண்டநாளாகிவிட்டது. வசதிபட்டவர்கள் டிவிடிகள் வழியாக உலக சினிமாவைக் கண்டுகளிக்கிறார்கள். சன் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களும் கலாபூர்வமான அனுபவத்தைக் கொடுக்கும் ஆங்கிலப் படங்களை தமிழில் வாரவாரம் வெளியிட்டு ரசனையை மேலும் மேம்படுத்துகிறார்கள். ஆனால் தமிழ்சினிமாதான் இன்னமும் குப்பையை மேலும்மேலும் கிளறிக்கொண்டு துர்நாற்றத்தை வெளியே பரப்பிக்கொண்டிருக்கிறது.
இந்தி சினிமாவில் மாதத்துக்கு ஒரு பரிட்சார்த்த முயற்சி நடக்கிறது. இந்திய அளவில் இந்தி சினிமாதான் அடுத்த நூற்றாண்டுக்கு ரசிகர்களை இட்டுச் செல்கிறது. ஆனால் இங்கேதான் ஒரு பருத்தி வீரனையும் ஒரு சுப்ரமணியத்தையும் வைத்துக் கொண்டு இன்னமும் பீற்றிக்கொண்டிருக்கிறோம்.