தென்கச்சி
’சார், டென்னிஸ்ல உங்களுக்கு யாரையாவது தெரியுமா?’
அகில இந்திய வானொலி நிலையத்தின் முதல் மாடியில் தென்கச்சியைச் சந்தித்து இந்தக் கேள்வியைத்தான் கேட்டேன். தென்கச்சி துணுக்குற்றபடி என்னைப் பார்த்தார். அவர் மேஜையில் ஒரு பலகை - 'என்னை எந்த திருமண விழாவுக்கும் அழைக்கவேண்டாம்’.
என்னை அமரவைத்தார். என் ஆதி, அந்தம் விசாரித்தார். நான் அரை டிரவுசரிலிருந்து பேண்ட்டுக்கு மாறியிருந்த காலம் அது. வீட்டில் அடிக்கடி சுவர் டென்னிஸ் ஆடிப் பழகியதால் நாம் ஏன் இன்னொரு லியாண்டர் பெயஸாக உருவெடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு முதலில் தென்கச்சியைத்தான் சந்தித்தேன். அவருக்கும் டென்னிஸுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? எதுவோ, அவரைச் சந்தித்தால் ஏதாவது ஒரு நல்வழி காட்டுவார் என்றொரு விநோத நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அவ்வளவுதான்.
’எங்க அலுவலகத்துல விளையாட்டுப் பிரிவு அதிகாரி இருக்கார். அவரைப் பாருங்க’ என்று சரியான நபரின் பெயரைச் சொல்லி என்னை வழியனுப்பினார் தென்கச்சி. நான் சென்றபிறகு, ’சிபாரிசு கேட்டு இங்கே வரவேண்டாம்’ என்றொரு பலகை வைக்க அவருக்குத் தோன்றியிருக்கக்கூடும்.
காலஓட்டத்தில் டென்னிஸ் ஆசை காயடிக்கப்பட்டு நான் சிவில் வேலையில் இரண்டு வருடங்கள் ஜல்லியடிக்க நேர்ந்து (லாரியில் அல்ல) இறுதியில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி என்னை எழுத்துத்துறைப் பக்கம் தள்ளிய அந்த மாயாஜாலக் கதைகளெல்லாம் இந்தப் பக்கத்தில் வேண்டாம்.
கல்கியில் பணியாற்றியபோது நானும் முகிலும் தென்கச்சியைப் பேட்டியெடுக்கச் சென்றோம். தொலைபேசியிலேயே அவர் அலாரம் அடித்துவிட்டார். என் வீடு மடிப்பாக்கத்தில். ரொம்ப தூரம். பார்த்து வாங்க.
மடிப்பாக்கம் என்பது மிகவும் அந்நியமான பகுதி என்பதால் எங்களுக்கு நாக்குத் தள்ளிவிட்டது. மடிப்பாக்கத்தில் நாலு காலனிகள், ஏழெட்டுத் தெருக்கள், இரண்டுமூன்று தவறான காலிங்பெல் அழைப்புகள் எல்லாம் கடந்தபிறகுதான் தென்கச்சியின் வீட்டை அடையமுடிந்தது. மாடியில் தனியறையில் இருந்தார் அவர். உடல்நிலை சுகமில்லாமல் இருந்தாலும் எழுந்து உட்கார்ந்து பேட்டிக்குத் தயாரானார்.
தன்னை ஒரு சாதனையாளராக அவர் ஏற்றுக்கொள்ளவேயில்லை. ’இல்லை தம்பி, நான் நிறைய புத்தகம் படிக்கிறேன். அதிலிருந்து முக்கியமான விஷயங்களைத் தொகுத்து உங்களுக்குத் தரேன். அவ்வளவுதான். நான் ஒண்ணும் கிரியேடிவ் ஆள் கிடையாது’ என்று முடிந்தவரை தாழ்ந்த நிலையில் நின்றுகொண்டுதான் பேசினார். அவருடைய பேரன் அடிக்கடி மாடிக்கு வந்து அவர் மடியில் அமர்ந்துவிட்டுச் சென்றான். தமிழகம் முழுக்க அறிந்த ஒருவரைப் பேட்டி எடுத்த உணர்வே இல்லை. தன்னை ஒரு சாதாரண மனிதராக எண்ணித்தான் அவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார். வருகிற வழியிலும் நாலைந்து பேரிடம் வழிகேட்டு ஷேர் ஆட்டோ, இரண்டுமூன்று பஸ்கள் மாறிமாறி இருட்டுவதற்குள் எப்படியோ கிண்டிப்பக்கம் வந்துவிட்டோம். (அதற்குப்பிறகு மடிப்பாக்கம் என்றாலே நான் மனத்துக்குள் அலற ஆரம்பித்துவிடுவேன்.)
இறுதியாக நான் அவரைப் பார்த்தது, நான்கு வருடங்களுக்கு முன்னால் - திருவல்லிகேணி ஹியூமர் கிளப் ஆண்டுவிழாக் கூட்டத்தில். சென்னையில் நிறைய பேருக்கு அப்படியொரு காமெடி கிளப் இயங்குவது தெரியாது. ஆனால் அதன் ஆண்டுவிழா மிகப்பிரமாதமாக இருக்கும். மூன்று மணி நேரம் விடாமல் சிரித்துவிட்டு வரலாம். அப்படியொரு விசேஷ நிகழ்ச்சி. வருடாவருடம் ஆயிரம் பேருக்கு மேல் அதன் ஆண்டுவிழாவில் கூடுவார்கள். அந்த நிகழ்சிக்கு ஒருமுறை தென்கச்சி அழைக்கப்பட்டார், பிரதான பேச்சாளராக. இவரால் எப்படி முக்கால் மணி நேரம் நகைச்சுவையாக பேசிப் பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்கமுடியும் என்றுகூட நான் எண்ணினேன். ஆனால் அவர் பேச ஆரம்பித்த நிமிடம் முதல், நான் இடைவிடாது சிரித்துக்கொண்டேயிருந்தேன். அவர் முடிக்கும்போது இன்னும் பேசியிருக்கலாமே என்றுதான் தோன்றியது. இனி தென்கச்சி எந்த மேடையில் பேசினாலும் தவறாமல் ஆஜராகிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். அடுத்தமுறை நேரில் பார்க்கும்போது நிச்சயம் அவரைப் பாராட்டிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இறுதியில் என் பாராட்டை இப்படித்தான் வெளிப்படுத்தவேண்டியிருக்கிறது.