ச.ந. கண்ணன்

ச.ந.கண்ணன்
ரஜினி, ஷங்கரை யார் புறக்கணிக்கிறார்கள்?

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் விரும்பிப் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி - நீயா நானா. பார்க்கத் தவறிய சமயங்களில் 'திரைவிருந்து' இணையத்தளம் கைகொடுக்கும். விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை நகர இளைஞர்கள் மட்டும்தான் விரும்பி ரசிப்பார்கள் என்று ஒரு பரவலான  கருத்து உண்டு. ஆனால் தமிழகத்தின் குக்கிராமங்களில்கூட நீயா நானாவைத் தவறாமல் பார்ப்பவர்கள் இருப்பதை நான் நேரில் கண்டபின்பு இந்த நிகழ்ச்சிமீதான அன்பு மேலும் அதிகமானது.  தமிழ்ப் படங்களிலும் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மருந்துக்குக்கூட தமிழ்க் கலாசாரமும் சமூக அவலங்களும் பதிவு செய்யாத ஒரு சூழலில் தமிழ்ச்  சமூகத்தின் கண்ணாடியாக விளங்குகிறது நீயா நானா.   ஒரு வெளிநாட்டவர் தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ் மக்களின் மனோபாவங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள அவர் நீயா நானாபார்த்தாலே போதுமானது. 

 

சென்ற வாரம் ஒளிபரப்பான கணவன் - மனைவி தொடர்பான விவாதம், ’நீயா நானாவின் சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்று (மூடநம்பிக்கை, வித்தியாசமான பெயர்கள் குறித்த நீயா நானா விவாதங்களும் சிறப்பானவை). கல்யாணத்துக்கு முன்னாடி அவ்ளோ நேரம் பேசுவார். இப்போ எங்கிட்ட பேசறதேயில்லை. ஆனா லோன் கேட்டு பேசற பொண்ணுங்ககிட்ட மட்டும் ஒருமணி நேரம் பேசுவார். ஸ்வீட் வாய்ஸ்னு என்கிட்டேயே சொல்வார்என்று ஒரு பெண் தன் கணவனின் நடத்தை  பற்றி பேசியது தமிழ்நாட்டுப் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக எனக்கு ஒலித்தது. 

 

இந்த வார நீயா நானாவின் தலைப்பு - நவீன ஒதுக்கப்பட்டவர்கள் வெர்ஸஸ் வெகுஜனம். தமக்கு ஒவ்வாத ஜாதியினரை மட்டும் தமிழ்ச்சமூகம் ஒதுக்கி வைப்பது கிடையாது. தம் விருப்பத்துக்கு எதிராக இருக்கும் தொழில், பழக்க வழக்கங்களைக் கொண்ட மனிதர்களையும் அது ஒதுக்கி வைத்தே வருகிறது. இதைப் பற்றித்தான் இந்த வாரம் பேசினார்கள். ஆனால் மற்ற எல்லா நீயா நானா நிகழ்ச்சிகளைவிடவும் மிகச் சிறப்பாக வந்திருக்கவேண்டிய நிகழ்ச்சி சுமாரான பேச்சாளர்கள் மற்றும் சரியான திட்டமிடல்கள் இல்லாமையால் ஒரு சராசரியாகச் சுருங்கிப் போனது. 

 

விவாகரத்து ஆனவர், வீடு - திருமண புரோக்கர், மெக்கானிக், துணை நடிகை, துணை இயக்குநர், பத்திரிகையாளர், திருநங்கை, லெஸ்பியன் - கே ஆகியோரை ஆதரிப்பவர், டாஸ்மாக்கில் பணிபுரிபவர் என்று  சமூகத்தால் பல்வேறு சந்தர்ப்பங்களில் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒருபக்கம். இன்னொரு பக்கம், நாங்கள் ஏன் இவர்களை வெறுக்கிறோம், புறந்தள்ளுகிறோம் என்று விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தவர்கள். வழக்கமாக நீயா நானாவில் பேசுபவர்கள் அத்தனை பேரும் சிறந்த பேச்சாளர்களாகவும் தர்க்கம் புரிபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இந்தமுறை நிறையபேர் தங்கள் கருத்தை ஆணித்தரமாகச் சொல்லத் தயங்கினார்கள். அல்லது சொல்லத் தெரியாமல் திணறினார்கள். குறிப்பாக வெகுஜன பகுதியில் இருந்தவர்களில் ஒரேயொரு இளம்பெண்பெண் மட்டுமே இறுதிவரை விடாது பேசிக்கொண்டிருந்தார். புறக்கணிக்கப்படுவர்கள் பகுதியிலும் வலுவான வாதங்களை யாரும் முன்வைக்கவில்லை. மேலும் புறக்கணிப்பவர்கள் பகுதியில் டிரைவர்கள், ஊனமுற்றோர், தமிழ், வேதம் படிக்கும் இளைஞர்கள், வசதி வாய்ப்பு இல்லாதவர்கள், எழுத்தாளர்கள், உருவத்தில் குறைபாடு உள்ளவர்கள் என இவர்களையும் நிகழ்ச்சியில் சேர்த்திருந்தால் அது வலுவாக அமைந்திருக்கும்.

 

முதலிரண்டு பகுதிகளின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் சாரு நிவேதிதா. அவருக்கு இந்த டாபிக் லட்டுமாதிரி.  சமூகத்தால் புறக்கணிக்கப்படும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி தன்னுடைய கோணல் பக்கங்களில் நிறைய அலசியிருக்கிறார். உதவி இயக்குநர் ஒருவர் தன்னுடைய சோகத்தைப் பகிர்ந்துகொண்டதைப் பற்றி சாரு குறிப்பிடும்போது, 'இதெல்லாம் பணம் நிர்ணயிக்கக்கூடியதுதான். சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்கள் எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்படுவது இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு உதவி இயக்குநரைப் புறக்கணிக்கும் இச்சமூகம் ரஜினி, ஷங்கரைப் புறக்கணிக்கிறதா? இல்லையே! எனக்கும் பல புறக்கணிப்பு அனுபவங்கள் உண்டு. நான் விவாகரத்தாகி என் ஆறு வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு வீடு தேடியபோது யாரும் வீடு கொடுக்கவில்லை. முன்பு டெல்லி வாசத்தின்போது என்னுடைய பெயரை அழைக்க சிரமப்பட்டு ரவி என்றே சுருக்கமாக அழைப்பார்கள். நானும் வீடு தேடிய இடங்களில் ரவி என்றே என் பெயரைச் சொன்னேன்.  ஆனால் ரவி என்பதை ரஃபி என்று நினைத்துக்கொண்டு ஒருவரும் வீடு தர மறுத்து விட்டார்கள்.என்றவர் திருநங்கைகள் தொடர்பான விவாதத்தில் தன் அனுபவத்தைச் சொன்னார்.

 

'இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை நடத்தும் ரோஸ் ஒருமுறை என் வீட்டுக்கு தன் தோழியோடு வந்திருந்தார். இரண்டு மணி நேரம் பேசிவிட்டு அவர் கிளம்பும்போது, 'ரெஸ்ட் ரூம் பயன்படுத்திக்குங்கஎன்று நான் சொன்னேன். இதைக் கேட்டு ரோஸ்  நெகிழ்ந்துவிட்டார். எங்கு சென்றாலும் எங்களுக்கு ரெஸ்ட் ரூம் என்று எதுவும் கிடையாது. நீங்கள் கேட்டதுபோல எங்களை யாரும் கேட்டதில்லைஎன்றார். ரோஸோடு நான் சென்னை முழுக்கச் சுற்றியிருக்கிறேன். திருநங்கைகள், கறுப்பாக இருப்பவர்கள் என்று சமூகம் தமக்கு ஒவ்வாதவர்களை ஒதுக்கி வைத்து தன்னை நீதிபதியாக நினைத்துக் கொள்கிறது. அடுத்தவர் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்என்று பேசிவிட்டு இருக்கையை காலி செய்ய அடுத்து வந்தார்கள் டிவி தம்பதியரான ராஜ்கமல்-லதா.

 

'ஒருவருடமாக வீடு தேடுகிறேன்என்று அங்கலாய்த்துக்கொண்டார் ராஜ்கமல். நானும் சராசரி பெண்போலத்தான் வாழ்கிறேன். டிவியில் எங்களை ரசிக்கும் சமூகம் நேரில் அவமானப்படுத்துகிறதுஎன்று பொங்கினார் லதா. விவாகரத்தான பெண் ஒருவர், தன் வீட்டினராலும் உறவினராலும் தான் எவ்வாறு ஒதுக்கப்பட்டேன் என்று பேசியது பெரும்சோகம். நாங்கள் பாதுகாப்பாக வாழவிரும்புவர்கள். அதனால்தான் ஒருசிலருக்கு வீடு, பெண் கொடுக்க தயங்குகிறோம். எங்கள் சகஜ வாழ்க்கையில் எந்த இடர்பாடும் நேரக்கூடாது என்பதற்காக சில விருப்பு வெறுப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று வெகுஜனப் பகுதியில் இருந்தவர்கள் ஒருமித்த குரலில் தங்கள் நிலையைப் பதிவு செய்தார்கள்.

 

மேலும் நிகழ்ச்சி முழுக்க வீடு கொடுப்பதும், பெண் எடுப்பதுமாக இதைப்பற்றித்தான் அதிகமாகப் பேசித் தீர்த்தார்கள்.  லெஸ்பியன், கே பற்றியெல்லாம் பேசியவர்கள் சமூகத்தில் அதைவிடவும் நிகழும் மோசமான புறக்கணிப்புகளை புறக்கணித்ததுதான் துரதிர்ஷ்டம். நட்பு ரீதியாகப் பழகுவதில் என்னென்ன பாகுபாடுகள் பார்க்கப்படுகின்றன? அசைவ உணவு பற்றி பேசினார்கள். ஆனால் முஸ்லீம் என்பதற்காக அச்சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பு பெறுவதில் உள்ள சங்கடங்கள், உண்மையில் யார் யாரெல்லாம் சமூக அந்தஸ்து பெறுகிறார்கள்? அதை நிர்ணயம் செய்யும் காரணிகள் என்ன? இதைப் பற்றியெல்லாம் ஒருவரும் பேசவில்லை.  மேலோட்டமான அலசலாகவே நிகழ்ச்சி அமைந்தது.

 

 பொதுவாக யோசனையில் அடுத்த நூற்றாண்டுக்குத் தாவும் விஜய் டிவிக்கு அதை நிகழ்த்திக் காட்டுகையில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. முக்கியமாக, நாடகத்தனமாக அரங்கேறும் சம்பவங்கள். ஜோடி நெம்பர் 1, சூப்பர் சிங்கர் என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் எப்படியாவது நாடகத்தனத்தைப் புகுத்தி தன் பத்தாம் பசலித்தனத்தைப் பறைசாற்றும் விஜய் டிவி இங்கேயும் தன் டிரேட்மார்க்கைத் தவறவிடவில்லை. வெகுஜன பகுதியில் இருந்து பேசிய ஒரு பெண், தனக்கு ஒரு திருநங்கை தோழியாக உண்டு என்று சொன்னபிறகும் எதிரணியில் இருந்த ஒரு திருநங்கையை அவருடைய நண்பராக ஏற்றுக் கொள்ளவைத்து, இருவரையும் கட்டித்தழுவவைத்து, அதைப் பார்த்து கோபிநாத் உணர்ச்சிவசப்பட்டு,  ஸ்டேண்டிங் ஓவேஷன் கொடுத்து.... எல்லாமே மிகை.