இந்திய கிரிக்கெட் அணி சத்தமில்லாமல் 2011 உலகக்கோப்பைக்குத் தயராகிவருவதை எத்தனைபேர் உணர்ந்தீர்கள் என்று தெரியவில்லை. இன்று நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் அணியே இந்திய அணி சார்பாக 2011 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தோனி சொன்னதை ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும் - 'உலகக்கோப்பையில் ஆடுகிற என் அணியினர் குறைந்தது 60 போட்டிகளிலாவது பங்கேற்றிருக்கவேண்டும்.'
முதலில் ஓபனிங், மிடில் ஆர்டர், லேட் மிடில் ஆர்டர் என்று பேட்டிங்கைப் பிரித்து வைத்துக்கொள்வோம். ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கும் சச்சின் 2011 உலகக்கோப்பையில் எப்படியும் ஆடுவார். அதுவே அவருடைய இறுதி லட்சியம். அதேபோல அடுத்த ஒரு வருடத்துக்கு ஒரு ரன்கூட எடுக்காமல் போனாலும் ஷேவாக் அணியில் இருப்பார். அவ்வாறே மூன்றாவதாக ஆடவருகிற கெளதம் கம்பீரும். 2007 உலகக்கோப்பையில் பேட்டிங் ஆர்டரைக் கண்டபடி மாற்றியதுதான் தோல்விக்குக் காரணம் என்று சமீபத்தில் சச்சின்
குறை சொல்லியிருக்கிறார். எனவே இந்தமுறை புராதனமுறையே பின்பற்றப்படும். மிடில் ஆர்டரில் மூன்றாவது, நான்காவதாக ஆடுபவர்கள் யுவ்ராஜூம் தோனியும். லேட் மிடில் ஆர்டரில் ரைனா, கோலி இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு. இப்படி முக்கியமான ஆறு இடங்கள் பூர்த்தியாகிவிட்ட நிலையில் மிச்சமுள்ள ஐந்து பேர் யார் யார்?
செடிக்குத் தினமும் நீர் ஊற்றி வளர்ப்பதுபோல ரவீந்தர ஜடேஜாவை ஆல்ரவுண்டராக வளர்த்து வருகிறார் தோனி. கங்குலி பேர் சொல்ல ஷேவாக், யுவ்ராஜ் போன்ற வீரர்கள் இருந்தால் தோனியின் பெருமை பாடவும் சிலர் வேண்டும். அவர்களில் முக்கியமானவராக உருவாகிவருபவர் ஜடேஜா. இங்கிலாந்து 20-20 உலகக்கோப்பை, ஆஸ்திரேலியாவுடனான இரு போட்டிகள் என முக்கியமான தருணங்களில் ஜடேஜாவின் பிழைகளால் இந்திய அணி தோற்றுப் போயிருந்தாலும் அவரை விட்டுக்கொடுக்க தோனி தயாராக இல்லை.
இன்னும் நான்கு இடங்கள் பாக்கி. பந்து வீச்சாளர்களை அழைக்கவேண்டியதுதான். ஜடேஜா, ஷேவாக், யுவ்ராஜ் போன்ற பகுதிநேர ஸ்பின்னர்கள் இருப்பதால் மீதமுள்ள ஒரு ஸ்பின்னருக்கான இடத்துக்கு ஹர்பஜன் மட்டுமே பொருந்துவார். பொதுவாகத் அணித் தேர்வுகளில் தோனி அதிரடியாக செயல்படமாட்டார். பாதுகாப்பான ஆட்டம்தான் அவர் பாணி என்கிற வகையில்தான் அவருடைய சமீபத்திய செயல்பாடுகள் இருக்கிறன. தோனியால் இதுவரை ஒரு வேகப்பந்து வீச்சாளரைக்கூட வளர்க்கமுடியவில்லை (இஷாந்த் கும்பிளேவின் வளர்ப்பு). சுதீப் தியாகிமீது தோனி தொடர்ந்து அவநம்பிக்கையோடு செயல்படுவது அவருடைய அணித்தேர்வின் பலகீனங்களை அழுத்தமாக உணர்த்துகிறது (பங்களாதேஷ் டெஸ்டில்கூட தியாகிக்கு இடமளிக்க மறுக்கிறாரே).
மீதமுள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடங்களில் இரண்டை ஜகீர் கானும் நெஹ்ராவும் பிடித்துக்கொள்வார்கள். மீதமுள்ள ஓர் இடத்துக்குத்தான் இப்போது போட்டி. இஷாந்த் சர்மாவை நம்பி ஆட்டத்தில் சேர்க்கமுடியாது. ஸ்ரீசாந்த் அதைவிட மோசம். சுதீப் தியாகியை இனியும் தோனி நம்புவாரா என்பது சந்தேகமே.இந்த நிலையில் மிதுன், வினய் குமார் போன்ற கர்நாடக வேகப்பந்து வீச்சாளர்களும்கூட உள்ளே நுழையலாம்.
ஒட்டுமொத்தமாக 16 வீரர்கள் உலகக்கோப்பைப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதால் மீதமுள்ள ஐந்து இடங்களை கோலி, ஸ்ரீசாந்த், மிதுன், ஓஜா, மனீஷ் பாண்டே போன்ற வீரர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.ஆனால் 1992 உலகக்கோப்பைக்குள் தடாலடியாக இன்ஸமாம் நுழைந்ததுபோல இந்திய அணியில் ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கமுடியாது.
அடுத்த இரு மாதங்களில் ஐபில் 3 நடக்க உள்ளது. சென்ற இரு ஐபில் போட்டிகளையும் பத்ரிநாத், யூசுப் பதான், நெஹ்ரா, ஓஜா, கோலி போன்ற வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தியதுபோல இந்தியாவுக்குத் தேவையான ஒன்றிரண்டு புதிய வீரர்கள் ஐபில் 3லிருந்து கிடைக்கலாம். காத்திருப்போம்.
(கல்கிக்காக எழுதிய கட்டுரை)
ஜனவரி 24, 2010