யாவரும் நலம்
நேற்றைய ஷேவாக்கின் காட்டடியை ஹைலைட்ஸில்தான் பார்க்க நேர்ந்தது. ஆட்டம் முடிந்தபிறகு, ’நாங்கள் பயமறியா கன்றுகள்’ என்று இந்திய அணியின் தாரக மந்திரத்தை வெளிப்படுத்தினார் ஷேவாக். எல்லோருக்கும் உகந்த சுதந்தரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவுட் ஆவதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்றுதான் கேப்டனும் கோச்சும் அறிவுறுத்தியிருக்கிறார்கள் என்று அவர் சொல்லியது முக்கியக் குறிப்பாக உணர்கிறேன். எங்கு கட்டற்ற சுதந்தரம் வழங்கப்படுகிறதோ அங்கு திறமை பெருக்கெடுக்கும் என்பது இதன் சாரம்.
2000ம் ஆண்டு வாக்கில் ஷேவாக், யுவ்ராஜ், கயிப் ஆகியோர் இந்திய அணிக்குள் நுழைந்த பிறகுதான் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அசுர பலம் கொண்ட அணியாக மாறியது. கங்கூலி தலைமையிலான இந்திய அணி பல போட்டிகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது, 2003 உலகக்கோப்பை உட்பட. ஆனால் கோப்பையை வெல்வதில் மட்டும் கங்கூலி அணி மிகவும் தடுமாறியது. இதனாலேயே தொடர்ச்சியாக பல இறுதிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டது.
தோனி தலைமையில் உள்ள இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் வெல்வது எப்படி என்பது தெரிந்திருக்கிறது. குறிப்பாக எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளமுடியும் என்கிற நம்பிக்கை கொண்ட அணியாக இருக்கிறது. இதனால்தான் சமகால இந்திய அணியின் பேட்டிங்கை ஆகச் சிறந்ததாகக் குறிப்பிடுகிறார் சச்சின். இந்தக் கருத்தில் கங்கூலி உடன்படாவிட்டாலும் உண்மை இதுதான். தோனி தலைமையிலான இந்திய அணி பெற்ற வெற்றிக்கு அருகே கூட வேறொரு இந்திய அணி கேப்டனின் வெற்றிகளும் சாதனைகளும் நெருங்கமுடியாது.
இந்தச் சமயத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகப் பலவீனமாக உள்ளதாக பேச்சு எழுகிறது. நியூசிலாந்தில் நடைபெறும் ஆட்டங்களை வைத்து மட்டும் அப்படி முடிவெடுத்துவிட முடியாது. பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளங்கள், மிஸ் ஹிட்டைக் கூட சிக்ஸராக மாற்றும் சிறிய மைதானங்கள் என்று பந்து வீச்சாளருக்குச் சிறிதும் சாதகம் ஏற்படுத்தாத பிரதேசம் நியூசிலாந்து. கடந்த ஒன்றரை வருட காலங்களில் பந்து வீச்சினால் நாம் இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தோம் என்று எதையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?
இந்தியப் பந்து வீச்சு எப்போதுமே பிரமாதமானதாக இருந்தது கிடையாது. இந்தியாவில் போட்டிகள் நடக்கும்போது கும்பிளே மட்டும் கைகொடுப்பார். வெளிநாட்டில் என்றால் ஸ்ரீநாத்தோ வெங்கடேஷ் பிரசாத்தோ அவசரத்துக்கு உதவுவார்கள். ஆனால் இப்போதைய நிலைமை வேறு. இந்தியாவில் நடைபெற்ற இரு டெஸ்ட் தொடர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேன் ஆஃப் தி சீரீஸ் பட்டம் வாங்கியிருக்கிறார்கள். பேட்டிங் கைகொடுக்காத சமயங்களில் நாம் ஷாகீர் கானையோ இஷாந்த் சர்மாவையோ நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் பவர்ப்ளேக்களில் ஷாகீர் கானும் இஷாந்த் சர்மாவும் நிகழ்த்திய அற்புதங்களை யாரும் மறந்துவிடமுடியாது. ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். இந்திய அணியில் யாவரும் நலம்.